/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/05_48.jpg)
16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த குஜராத்அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 233 ரன்களை குவித்தது. ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். அதிகபட்சமாக சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களைக் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள் அடக்கம். சாய் சுதர்சன் 43 ரன்களையும் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்களையும் அடித்தனர்.
234 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களையும் திலக் வர்மா 43 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியில் மோஹித் சர்மா 5 விக்கெட்களையும் முகம்மது ஷமி, ரஷித்கான் தலா 2 விக்கெட்களையும் ஜோஸ்வா லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்றைய போட்டியில் சுப்மன்கில் அடித்த சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு சீசனில் அதிகமுறை சதமடித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன்கில் இணைந்தார். விராட் கோலி, ஜாஸ் பட்லர் 4 சதங்களையும் சுப்மன் கில் 3 சதங்களையும் விளாசியுள்ளனர். ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலிலும் கில் இணைந்தார். முதலிடத்தில் 973 ரன்களுடன் விராட் கோலியும் இரண்டாவது இடத்தில் 863 ரன்களுடன் ஜாஸ் பட்லரும் உள்ளனர். கில் 851 ரன்களுடன் 3 ஆம் இடத்தில் உள்ளார். சென்னையுடன் நடக்கும் இறுதிப் போட்டியில் அதிக ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவர் ஜாஸ் பட்லரை முந்தும் வாய்ப்புள்ளது. ப்ளே ஆஃப் போட்டிகளில் சுப்மன் கில் அடித்த 129 ரன்களே அதிகபட்சமாகும். இதற்கு முன் முதலிடத்தில் 122 ரன்களை அடித்து சேவாக் முதலிடத்தில் இருந்தார்.
நேற்றைய போட்டியில் ஷமி 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஐபிஎல் போட்டிகளில் பவர்ப்ளேவில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷமி முதலிடத்தில் உள்ளார். இதுவரை அவர் பவர்ப்ளேவில் 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2020 ஆம் ஆண்டு 16 விக்கெட்களை வீழ்த்திய போல்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் மோஹித் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ப்ளே ஆஃப் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய வீரர் என்ற முறையில் அவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். அவர் 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முதலிடத்தில் ஆகாஷ் மேத்வால் உள்ளார். 5 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)