Skip to main content

ஓய்வில் 360 டிகிரி...

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விளையாட்டு வீரரின் வீடியோ வெளியானது. அந்த வீடியோ வெளியான பின் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. வீடியோவில் பேசியது என்னவென்றால், “நான் உடனடியாக அனைத்து தரப்பு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளப்போவதாக முடிவு செய்துள்ளேன். இது மற்றவர்களுக்கான நேரம். எனக்கு ஒரு மாற்றம் தேவை, உண்மையிலேயே நான் டையர்ட் ஆகிவிட்டேன். எனக்கு எல்லாமே அந்த பச்சை மற்றும் கோல்ட் நிற உடைதான். எனக்கு உதவிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஊழியர்கள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் மேலும் வருவாய் ஈட்டுவதற்காக இதிலிருந்து செல்லவில்லை, எரிவாயு தீர்ந்தும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இது நான் வெளியேற வேண்டிய காலம். உங்களுடைய இறக்கத்திற்கும், பெருந்தன்மைக்கும், உங்களுடைய புரிதல்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்" என்று தன் விடைபெறும் துயரத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்துவிட்டு, ரசிகர்களையும் கலங்க செய்துவிட்டார், ஏ.பி. டிவில்லியர்ஸ்.
 

abd

 

 

 

ஏபி டிவில்லியர்ஸ் என்ற மனிதர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்தான். ஆனால் அவர் இந்தியாவில் விளையாடினாலும், உலகில் வேறெந்த மைதானத்தில் விளையாடினாலும் அவரை கொண்டாட ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தோனி ஆடுவது சென்னை அணிக்காக இருந்தும் அவரை மற்ற அணி ரசிகர்களும் கொண்டாடுகின்றனரே அது போலத்தான் ஏபிடியையும் அவர் எந்த அணிக்காக விளையாடினாலும் அவரை எதிரணி ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதுபோன்ற ரசிகர்களை சம்பாரிப்பது ஒன்றும் எளிதல்ல. விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர் அமைவதெல்லாம் ஒன்று அவரது ஆட்டத்தை பொறுத்து மற்றொன்று அவரின் நடவடிக்கையை பொறுத்தது. 
 

 

abd 1

 

 

 

ஏபிடிக்கு ரசிகர் பட்டாளம் இதுபோன்று அமைந்ததற்கு காரணம் இந்த இரண்டுமே தான். அவரது ஆட்டம், பேயாட்டம். பந்து வீசுபவர் எங்கு பந்தை வீசினாலும் அதை லாபகமாக சிக்ஸ் அடிக்கும் ஒரே வீரர் இவர்தான். வேகப்பந்தை ஸ்விப் அடிப்பதும் இவர்தான். இவரின் பேட்டிங்கை ரசிப்பவர்கள் இவருக்கு 360 டிகிரி என்ற செல்லப்பெயரையும் வைத்து இருக்கின்றனர். மைதானத்தின் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும், பவுலிங்குக்கு சாதகமாக இருந்தாலும் ஏபிடியின் அதிரடி ஆட்டத்தை தடுப்பது கொஞ்சம் கடினம்தான். பேட்டிங்கை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். பீல்டிங்கிலும் இவர் ஒரு குட்டி ஜான்டி ரோட்ஸ் என்பது ஊரறிந்தது. வீக்கட் கீப்பராக நின்றபோதிலும், பீல்டராக பவுண்டரி கோட்டிலும், 30 யார்ட்க்கு உள்ளும் இவர் பிடித்த கேட்சுகள் எல்லாம் வேற லெவல். ஒரு சாதரண பீல்டராக இருந்தால் பந்தை தடுக்க மட்டுமே செய்திருப்பார், ஆனால் ஏபிடியோ அதை கேட்சாக மாற்றுவார். 
 

 

abd crying

 

 

 

ஏபிடியின் வெற்றிக்கு மூன்று விஷயங்கள்தான் காரணம் ஒன்று வெறித்தனமான பேட்டிங், இரண்டு சிறுத்தைப்போல பீல்டிங், மூன்று அன்பை கொட்டும் மனசு. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இவர் பிங்க் உடை அணிந்து ஆடிய பேட்டிங்கை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக இவர் ஒரு ஏலியனாகதான் தெரிந்திருப்பார். வைடாக பந்து போட்டாலும் பந்தை நோக்கி சென்று மடக்கி பின்னே அடிக்கும் சிக்ஸுகள். டைமிங்கில் அடிக்கும் சிக்ஸுகள் என்று முப்பத்தியொரு பந்துகளில் சதத்தைக் கடந்தார். இன்றுவரை அதை யாராலும் சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்க முடியவில்லை. பீல்டிங் செய்யும் போது பாய்ந்து பிடித்த கேட்சுகளை பார்க்கும் போது சுப்பர் மேன் நிஜம்தானோ என்ற எண்ணத்தை கொண்டு வந்துவிடும். என்னதான் இத்தனையும் உழைத்து தன்னை மெருகேற்றியவருக்கு, அதிர்ஷ்டம் ஒரு போதும் கைகொடுக்கவில்லை. இந்த அதிர்ஷ்டமின்மை அவருக்கு மட்டுமில்லை, தென்னாபிரிக்கா நாட்டிற்கே உண்டானது. என்னதான் கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியை வைத்திருந்தாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர் தலைமையில் ஆடிய 2015 உலக கோப்பையிலும் இதே நிலைதான். வெளியேறியபோது மனமுடைந்து அழுதுகொண்டே சென்றார். ஏர்போர்ட்டில் ரசிகர் ஒருவர் உங்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல ஆசையாக இருக்கிறது என்று பலகையை வைத்து நிற்க அதையும் செய்தார். நீங்கள் என்னதான் உலகக்கோப்பையை ஜெயிக்கவில்லை என்றாலும் கோடானகோடி ரசிகர்களை ஜெயித்துவிட்டீர்கள் ஏபிடி. இந்திய மக்களாகிய நாங்கள் உங்களை கண்டிப்பாக மிஸ் செய்வோம்.   

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்