Skip to main content

பேட்டிங்கில் சூப்பர்மேன், பீல்டிங்கில் ஸ்பைடர்மேன், மிஸ்டர் 360

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் தனது சொந்த நாட்டை கடந்து மற்ற நாடுகளிலும் மிகவும் பிரபலமாகவும், தனி ரசிகர் பட்டாளமும் வைத்திருப்பார்கள். உலகின் எந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாடினாலும்  “ஏ பி டி... ஏ பி டி... ஏ பி டி...” என்ற கோஷங்கள் ரசிகர்களிடமிருந்து ஆர்ப்பரிக்கும். அப்படி ஒரு தனித்துவமான மிகச்சிறந்த வீரர் தான் ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ். மிஸ்டர் 360, சூப்பர்மேன், ஸ்பைடர்மேன்  என்று அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்லாது டென்னிஸ், நீச்சல், ஹாக்கி, ரக்பி, பேட்மிட்டன், கால்பந்து, தடகளம், கோல்ஃப் விளையாட்டு உள்ளிட்ட அரை டஜனுக்கும் அதிகமான விளையாட்டுகளை விளையாடும் வீரர்.

 

aa

 

மேலும் இவர் சிறந்த பாடகர். ஏ.பி.டி. வில்லியர்ஸ் பள்ளிபருவத்தில் ஸ்கூல் ஸைன்ஸ் பிராஜெக்ட்டுக்காக முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலாவிடம் விருது வாங்கியுள்ளார். சென்ற வருடம் சர்வேதச கிரிகெட்டில் ஓய்வு செய்தியை அறிவித்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

 

140+ கி.மீ. வேகத்தில் வரும் பந்தை லெப்ட் திரும்பி சிக்ஸ்/பவுண்டரி  அடித்தல், தில்ஸ்கூப், மண்டி போட்டு லெக் சைடில் திரும்பி சிக்ஸ் அடித்தல், ரிவர்ஸ்வீப், ஸ்லாக் ஷாட் என்று இவரது தனித்துவமான ஷாட்கள் மிகவும் பிரபலமானவை. கிரிக்கெட்டில் புது அத்தியாயத்தை உருவாக்கியவர். சர்வதேச போட்டிகளில் ஆடத்துவங்கிய சில வருடங்களில் தான் இன்னும் 5 வருட காலத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உருவெடுப்பதே மைல்கல் என்று கூறுவார். அதை செய்தும் காட்டினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தார்.

 

ரசிகர்கள் சோகத்தில் பங்கெடுப்பார். 2015 உலகக்கோப்பை அரை இறுதியில் தோற்ற பிறகு ஒரு ரசிகர் தான் சோகமாக இருப்பதாகவும், என்னை நீங்கள் ஹக் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றினார். மனிதாபிமானம், அழகான சிரிப்பு, ரசிகர்களை கவரும் முகத்தோற்றம், அடுத்த வீரர்களை பாராட்டுதல், தென் ஆப்பிரிக்கா அணியின் இளம் வீரர்களை ஊக்குவித்தல், ஐ.பி.எல்.-லில் இளம் வீரர்களுக்கு உதவுதல், எந்த வீரரையும் பேச்சில் தாக்காமல் மென்மையாக பேசும் திறன் உள்ளிட்ட பல நல்ல குணங்களை கொண்டவர். இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளார்.

 

ab de

 

ஏ.பி.டி. ஒரு தங்கமான மனது உடையவர். அவரது ஆட்டோகிராப் வாங்குவதற்காக மணி கணக்கில் காத்திருக்கும் தனது ரசிகர்களை ஏமாற்ற அவர் எப்போதும் விரும்பவில்லை. தனது சொந்த செலவில் அவரது புகைப்படம் அச்சிடப்பட்டு கையெழுத்திட்ட ஒரு அட்டையை தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வாங்கும் போது கொடுத்து அனுப்புவார். ஏ.பி.டி தனது அப்பாவை போல ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் தனது வாழ்க்கையில் டாக்டர்க்கு படிக்க முடியாமல் போனதற்கு வருந்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். டி வில்லியர்ஸ் தனது ஆரம்ப காலத்தில் அவரது சகோதரர்கள் கிரிக்கெட் விளையாடும் போது தண்ணீர் கொடுத்து கொண்டிருந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு இறுதியாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 

 

டி வில்லியர்ஸ் சமூகப்பணிகளிலும் அதிக ஈடுபாடு உடையவர். சமூகத்தில் வாடுகின்ற, அடிமட்டத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு பவுன்டேசன் மூலம் உதவி செய்து வருகிறார். அவர் தனது நண்பருடன் இசை ஆல்பம் (மேக் யுவர் ட்ரீம்ஸ் கம் ட்ரு) ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பம் ஐ.சி.சி. விருதுகளில் பாடப்பட்டது. தனது சுயசரிதையை செப்டம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு வெளியிட்டார். தென் ஆப்பிரிக்கா ஜூனியர் ஹாக்கி அணியில் ஒரு அங்கமாக இருந்தார். கிரிக்கெட் அணியில் தேர்வாகும் முன்பு கால்ப்பந்து மற்றும் ஹாக்கி அணியில் தேசிய அளவில் தேர்வாகியிருந்தார். பள்ளிபருவத்தில் நீச்சல் போட்டிகளில் 6 விருதுகளை வாங்கியுள்ளார். ஜூனியர் ரக்பி அணியில் கேப்டனாக  இருந்தார். 19 வயதினருக்கு உட்பட்ட பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை வழிநடத்தி சென்றார். ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஒரு அங்கமாக விளையாடினார். 100 மீட்டர் தடகள போட்டியில் ஜூனியர் பிரிவில் வேகமாக ஓடியுள்ளார். 

 

ஒருநாள் போட்டிகளில் 2005-ஆம் ஆண்டு அறிமுகமான டி. வில்லியர்ஸ் தனது முதல் சதத்தை 2007-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பதிவு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி மீது அவருக்கு அப்படி ஒரு பிணைப்பு உண்டு. ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம், சதம், 150 என அனைத்து சாதனையும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்ததுதான். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியும், ஒருநாள் போட்டிகளில் 100-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் மட்டுமே. 

 

ab de

 

தென் ஆப்பிரிக்கா அணியில்  டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் மற்றும் டி-20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ். 2015-ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு அதிசயத்தை கண்டனர். அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி வில்லியர்ஸின் மாயாஜால ஆட்டம்தான். 39 வது ஓவரில் 247  ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு  அடுத்து டி வில்லியர்ஸ் பேட் செய்ய வந்தார். அடுத்த ஒரு மணி நேரம் மைதானத்தில் நடந்தது மேஜிக் போல இருந்தது. தனது 360 டிகிரி ஆட்டத்தின் மூலம் வெறும் 44 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து வானவேடிக்கை காட்டினார்.  ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி அணிக்கும், பெங்களூர் அணிக்கும் விளையாடியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் ஒன்றாக விளையாடும்போது இரசிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். 2018-ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 39 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அணியை தனி ஒருவனாக நின்று வெற்றி பெற வைத்தார். அந்த போட்டியின் முடிவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆட்டத்தை கண்டு இது மனிதர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு. டி வில்லியர்ஸ் அவர்களை டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். உலகின் சிறந்த ஃபில்டரான ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் உலகில் சிறந்த 5 ஃபில்டர்களை கூறியுள்ளார். அதில் ஏ.பி.டி வில்லியர்ஸும் ஒருவர். 

 

இதுவரை 228 ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள், 53 அரைசதங்கள் உட்பட 9577 ரன்கள், 53.50 சராசரி, 101.10 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 176 கேட்ச்கள் பிடித்துள்ளார். 114 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள், 46 அரைசதங்கள் உட்பட 8765 ரன்கள், சராசரி 50.66, அதிகபட்சமாக 278 ரன்கள் மற்றும் 222 கேட்ச்கள் பிடித்துள்ளார். 78 டி-20 போட்டிகளில் 1672 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 135.17. 141 ஐ.பி.எல். போட்டிகளில் 3953 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 150.94.

 

ab de

 

2015-ஆம் ஆண்டு அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்று உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட தென் ஆப்பிரிக்கா அணியில் அனைத்து வீரர்களும் கண்ணீர் வடித்தனர். டி வில்லியர்ஸ் மைதானத்தில் அமர்ந்து கண்ணீர் விடும் காட்சி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கண்ணீர் விட வைத்தது. அந்த அளவிற்கு நாடுகளை தாண்டி நேசித்த ஒரு வீரர் டி வில்லியர்ஸ் மட்டுமே.   
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்