ADVERTISEMENT

சோஹைலுக்கு வெங்கடேஷ் பிரசாத்தின் ரிவன்ச்... காம்ப்ளியின் அழுகை...

04:10 PM Jun 05, 2019 | kirubahar@nakk…

1996-ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. தொடர் தொடங்குவதற்கு முன்பு இலங்கையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாதுகாப்பு காரணமாக இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. அந்தப் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சுலபமாக அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை.

லீக் போட்டிகளில் கென்யா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளை வென்று காலிறுதிச்சுற்றுக்கு சென்றது இந்திய அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அமீர் சோஹைல் கேப்டனாக விளையாடினார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது. சித்து 93 ரன்களும், அதிரடியாக விளையாடிய ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான சோஹைல் மற்றும் சயீத் அன்வர் அதிரடியாக விளையாடி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெங்கடேஷ் பிரசாத் வீசிய 15-வது ஓவரில் 5-வது பந்தை பவுண்டரி அடித்த சோஹைல் பிரசாத்தை நோக்கி பவுண்டரியை பார்த்தாயா என்பதை போல பேட்டை நீட்டி கூறினார். ஆஃப் ஸ்டம்புக்கு நேர் வந்த அடுத்த பந்தையும் அதேபோல அடிக்க முயன்றார் அமீர் சோஹைல். ஆனால் பேட்டில் படாமல் ஸ்டம்பைச் சாய்த்தது பந்து. ரன்கள் கொடுத்த கோபத்தில் இருந்த பிரசாத் கடும் ஆக்ரோஷத்தில் சோஹைலை வெளியேறுமாறு சைகையில் கூறினார்.

ஒரு விக்கெட் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை மாற்றும் என்பதை போல அடுத்தடுத்து பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சித்து பெற்றார்.

கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற அரைஇறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் இந்திய அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்திலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அரவிந்த டி செல்வா மற்றும் ரோஷன் மஹானமா ஆகியோர் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹசன் திலகரத்னே, அர்ஜுனா ரணதுங்கா ஆகியோர் ஓரளவு நல்ல ஸ்கோர் அடிக்க இலங்கை அணி 251 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்தது. விரைவில் சித்துவின் விக்கெட்டை இழந்தாலும் சச்சினும் மஞ்ச்ரேக்கரும் நிதானமாக விளையாடினார்கள். இந்திய அணி 98 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. ஒப்பனிங் இறங்கிய சச்சின் சீரான வேகத்தில் ரன்கள் குவித்து வந்தார். 65 ரன்கள் எடுத்திருந்த போது ஜெயசூர்யா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் கலுவித்தரனாவிடம் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்தார் சச்சின். அணியின் ஸ்கோர் 98 ரன்களுக்கு 2 விக்கெட்கள்.

பின்னர் வந்த வீரர்கள் ரன்களை அடிக்க தவறி விக்கெட்களை பறிகொடுத்தனர். 98 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இருந்த நிலையிலிருந்து 120 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி. வினோத் காம்ப்ளி 10 ரன்களும், அனில் கும்ப்ளே ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தோல்வியடையும் நிலையில் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து மைதானத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வீரர்கள் அவசர அவசரமாக பெவிலியன் திரும்பினார்கள். களத்தில் அவுட் ஆகாமல் இருந்த வினோத் காம்ப்ளி இந்த நிகழ்வை கண்டு மனமுடைந்து அழுது கொண்டே பெவிலியன் திரும்பினார். அரை இறுதிப்போட்டியில் முடிவு தெரியவேண்டும் என்பதால் கலவரம் காரணமாக நிறுத்தப்பட்ட போட்டியில் இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு விக்கெட் ஆட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு இந்திய அணி விளையாடிய காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் உதாரணமாக அமைந்தது.

இந்த உலகக்கோப்பை தொடரில் காம்ப்ளி ஒரு சதம், சராசரி 44.00 உட்பட 176 ரன்கள் எடுத்திருந்தார். கும்ப்ளே 15 விக்கெட்கள், எகானமி ரேட் 4.03 என தொடர் முழுவதும் சிறப்பாக பவுலிங் செய்திருந்தார். வெங்கடபதி ராஜு, ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் தலா 8 விக்கெட்கள் எடுத்து தங்களது பங்கை அணிக்கு அளித்தனர்.

இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசிய மெக்ராத்தின் அடுத்த 5 ஓவர்களில் 48 ரன்களை விளாசினார்கள் சச்சின் & கோ. மெக்ராத்தின் ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என அமர்க்களப்படுத்தினார் சச்சின். தொடரில் அதிக பட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் 523 ரன்கள், சராசரி 81.17, 3 அரைசதங்கள், 2 சதங்கள் அடித்திருந்தார்.

இந்திய அணி சொந்த மண்ணில் அரைஇறுதியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காலங்கள் கடந்தும் வெங்கடேஷ் பிரசாத்தின் ஆக்ரோஷமான செயலும், காம்ப்ளியின் அழுகையும் இந்த உலகக்கோப்பை தொடரில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT