18 year old IPL The Bengaluru team that made the dream of the trophy come true

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (3.06.2025) இரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 190 ரன்களை குவித்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். ராஜ் பட்டிதார் 26 பந்துகளில் 16 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டன் 15 பந்துகளில் 25 ரன்களையும் எடுத்தனர். எனவே பஞ்சாப் அணி வெற்றி பெற 191 ரன்களை பெங்களூரு அணி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. இருப்பினும் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

Advertisment

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாசாந்த் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். ஜோஷ் இங்லீஸ் 23 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். அதே போன்று பிரப் சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ரன்களையும் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப்அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டுஇறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.