Skip to main content

15 வருட சோகத்தை தீர்த்துக்கொண்ட ராஜஸ்தான்; சென்னை போராடி தோல்வி

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

15 years of tragedy resolved Rajasthan; Chennai fought and lost

 

16 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று சென்னையில் நடந்த 17 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.

 

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 10 ரன்களில் வெளியேற பின் வந்த படிக்கல், பட்லருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படிக்கல் 38 ரன்களில் வெளியேற தொடர்ந்து வந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

 

தொடர்ந்து அஸ்வின், பட்லருக்கு கைக்கொடுத்து அவருக்கு இணையாக ஆட ராஜஸ்தான் அணியின் ரன்கள் வேகமாக உயர்ந்தது. இறுதியில் ஹெட்மயர் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி போதுமான ரன்னை இலக்காக நிர்ணயித்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 175 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய பட்லர் 52 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணியில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

 

176 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் ருதுராஜ் 8 ரன்களில் வெளியேற டெவோன் கான்வே நிலையாக ஆடி ரன்களை சேர்த்தவண்ணம் இருந்தார். அஜிங்கியா அதிரடியாக ஆடி 31 ரன்களைக் குவித்து வெளியேறினார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் கேப்டன் தோனியும் ஜடேஜாவும் இணைந்து அணியை மீட்டனர். இறுதி 2 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹோல்டர் வீசிய 19 ஆவது ஓவரில் ஜடேஜா 19 ரன்களை விளாச இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 

 

சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரில் 2 மற்றும் 3 ஆம் பந்துகளை தோனி சிக்ஸர்களாக்க இறுதிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன. அவுட்சைட் ஆஃப்-ல் யார்க்கராக வீசப்பட்ட அந்த பந்தை தோனி மிட்-விக்கெட் திசையில் அடிக்க சிங்கிள் மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் சீசன் துவங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய 3 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வென்றது. அதன் பின் சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி இதுவரை சென்னையை வீழ்த்தியது இல்லை. சுமார், 15 வருடங்கள் கழித்து ராஜஸ்தான் அணி வென்றுள்ளது. இடைப்பட்ட வருடங்களில் நடந்த 6 போட்டிகளில் சென்னை அணியே வென்றுள்ளது. 

 

சுழலுக்கு ஏற்ற சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்றைய போட்டியிலும் சென்னை அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்களை வீசி 84 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். ராஜஸ்தான் அணியிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்களை வீசி 95 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

 

 

 

Next Story

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் - வெற்றியின் ரகசியம் குறித்து பட்லர்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
The mind is a powerful thing - Butler says on the secret of success

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என தனது ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 19ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளசிஸ், கோலி இணை சிறப்பான ஆடினர். மிகவும் சிறப்பாக ஆடிய கோலி ஐபிஎல்-இல் தனது 8ஆவது சதத்தைப் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 113 ரன்கள் குவித்தார். 

பின்னர், 184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கேப்டன் சாம்சன், பட்லர் இணை அட்டகாசமாய் ஆடியது. சாம்சன் அரை சதம் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி வரை களத்தில் நின்ற பட்லர் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இறுதியில் அணி வெற்றி பெற 1 ரன்னும், பட்லர் சதம் அடிக்க 6 ரன்களும் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடித்து சதம் கடந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். இதன் மூலம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கடந்த சில ஆட்டங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த பட்லர், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதம் கடந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியதால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அப்போது பேசிய பட்லர் “இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது, கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. அதையெல்லாம் தாண்டி தற்போது பெற்றுள்ள வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கிரிக்கெட்டை எவ்வளவு காலம் விளையாடியிருந்தாலும், அந்த ஆட்டத்தில் கவலைகள் மற்றும் அழுத்தங்கள் உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதைப் போக்க மனம்தான் ஒரு சக்திவாய்ந்த விஷயம், மனதைத் தோண்டிக்கொண்டே இருங்கள், கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். அதோடு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாகிவிடும், சில சமயங்களில் அது சரியாகிவிடும் என்று நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும். நான் கடந்த ஆட்டத்தில் 13 ரன்களைப் பெற்றிருந்தாலும், மிகவும் நன்றாக உணர்ந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் சிறப்பாக ஆடியிருந்தேன், அதைப் போல் ஆட எனக்கு ஒரு இன்னிங்ஸ் தேவை என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நாங்கள் இந்த சீசனை நன்றாகத் தொடங்கி இருக்கிறோம். நாங்கள் இப்போது மூன்று சீசன்களாக இணைந்து ஆடி வருகிறோம், எங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது, ஆனால் ஒரு அணியாக தொடர்ந்து கடினமாக உழைத்து இதே மாதிரியான சிறப்பான ஆட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.

Next Story

பந்து வீச்சில் கலக்கிய ராஜஸ்தான்; ஜெய்ப்பூரில் கிடைத்த இரண்டாவது வெற்றி!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc live score update rajasthan wins

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.  பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார்.

ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிரடி துவக்கம் தந்த மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் டக் அவுட் ஆனார்.பின்னர் இணைந்த கேப்டன் பண்ட் நிதானம் காட்ட வார்னர் ஓரளவு அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் வார்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில பந்துகளில் கேப்டன் பண்ட்டும் 28 ரன்களில் வீழ்ந்தார். பின்னட் வந்த ஸ்டப்ஸ் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். அபிஷேக் பொரேல் 9 ரன்னில் வெளியேற, அக்சர் படேல் வந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட , பந்து வீச வந்த சந்தீப் சர்மா முதல் இரண்டு பந்துகளில் 6, 4 என ஸ்டப்ஸ் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், தனது அனுபவம் மூலம் அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசி அடுத்த 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட பந்து வீச வந்த ஆவேஷ் கான் சிறப்பாக வீசி ஸ்டப்ஸ், அக்சரை ரன் எடுக்க விடாமல் தடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகனாக ரியான் பராக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.