/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_93.jpg)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் போலண்ட் வீசிய 8 ஆவது ஓவரில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். க்ரீன் தனது இடது கையால் பந்தை பிடித்தாலும் பந்து தரையில் பட்டது போல் காணப்பட்டது. கள நடுவர் மேல்முறையீட்டிற்கு செல்ல மூன்றாம் நடுவர் அவுட் என முடிவு வழங்கினார். இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
கடந்த 10 ஆம் தேதி சுப்மன் கில் தனது ட்விட்டர் பதிவில் க்ரீன் பந்தை பிடித்த காட்சியை பதிவிட்டு விமர்சனம் செய்திருந்தார். அதில் பூதக்கண்ணாடியையும் தலையில் அடித்துக் கொள்ளும்படியான எமோஜியையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடுவரின் முடிவை விமர்சனம் செய்ததாக சுப்மன் கில்லுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதமும் ஆஸ்திரேலிய அணிக்கு 80% அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சுப்மன் கில்லுக்கு 115% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)