சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா (வயது 37) அறிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஓய்வு அறிவிப்பு தொடர்பான அறிக்கையில், “குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த நான், இளம் வயதில் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவை நோக்கி நகர்ந்த எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ உள்ளிட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே போன்று கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக எனக்கு உறுதுணையாக இருந்த சக வீரர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர் புஜாரா ஆவார். இதுவரை இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்களும், 35 அரை சதங்களும் என மொத்தமாக 7 ஆயிரத்து 195 ரன்கள் விளாசியுள்ளார். இந்திய அணியில் முக்கிய வீரரான ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பின்பு அவர் விளையாடி வந்த மூன்றாவது இடத்தை புஜாரா நிரப்பியிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய வீரராக பங்காற்றியிருந்தவர் புஜாரா ஆவார். அதிலும் குறிப்பாக 2014இல் இருந்து 2024 வரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்ததற்கும், அதே போன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மிக மிக முக்கிய வீரராக திகழ்ந்தவர் புஜாரா ஆவார். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளது அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.