குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி நக்கீரன் 360 சேனலில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ். அந்த வகையில் தான் சந்தித்த வழக்கு பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சக ஆண் வகுப்பு தோழர்களிடம் சகஜமாக பேசியதால், ஒட்டுமொத்த பள்ளியும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். 6ஆம் வகுப்பு வரை ஜெர்மனியில் படித்த ஒரு பெண் குழந்தையை, இந்தியாவின் கலாச்சாரம் நன்றாக இருக்கும் என்று சொல்லி பெற்றோர்கள் இங்கு அழைத்து வந்து ஒரு பிரபலாமான பள்ளியில் 7ஆம் வகுப்பில் சேர்த்து விட்டுள்ளார்கள். ஜெர்மனியில் வளர்ந்ததால், இந்த பெண் குழந்தை தன்னுடைய ஆண் நண்பர்களிடம் எப்போதும் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனை பள்ளி ஆசிரியர்கள் பார்த்து குழந்தையை கண்டித்துள்ளனர். மேலும் பெற்றோரை அழைத்து, குழந்தையை வளர்க்க தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், பெற்றோரை அழைத்து இது போன்று பேசியதால் ஆண் நண்பர்களிடம் பேசுவதை குழந்தை நிறுத்தியுள்ளது. ஆனால் பள்ளியில் என்ன நடந்தாலும், இந்த குழந்தையை திட்டுவது, வாஷ் ரூமுக்கு அனுப்பாமல் இருப்பது என ஒட்டுமொத்த பள்ளியுமே குழந்தையை ஒதுக்கி வைத்துள்ளது. சொல்ல கூடாத வார்த்தைகளை வைத்து எல்லாம் அந்த குழந்தையை திட்டியிருக்கிறார்கள். இந்த குழந்தை நிறைய பேசுவாள். சின்ன குழந்தைகளிடம் பேசுவதற்கு கூட பள்ளி ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.

இதில் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் குழந்தை, பள்ளிக்கே செல்வதை விரும்பாமல் இருந்துள்ளது. ஆனால், எந்த தவறும் செய்யாமல் இருக்கும் போது அந்த குழந்தைக்கு நான் கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை. தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அந்த குழந்தையும் உணர்ந்துள்ளது. அந்த குழந்தைக்கு முன்னவே நிறைய நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பெற்றோர் பாதிப்படைவதை பார்த்து அந்த குழந்தையும் பாதிப்புக்குள்ளாகிறது. நான் அந்த குழந்தையிடம் பேசும்போது, ஜெர்மனியில் இப்படி எல்லாம் இருக்காது, எந்தவித ஜஜ்மெண்ட்டும் இல்லாமல் மற்றவர்கள் பேசுவார்கள் என்றாள். அந்த பள்ளி, இந்த குழந்தைக்கு டிசியும் தரமாட்டிக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு வாரமும் பெற்றோரை அழைத்து மனதளவில் காயப்படுத்திருக்கிறார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசி அந்த பள்ளியில் இருந்து டிசி வாங்கி வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று பெற்றோரிடம் நான் தெரிவித்தேன். ஒரு வருடம் குழந்தையின் படிப்பு போனாலும் பரவாயில்லை, குழந்தை மனநிலை முக்கியம், டிசி வாங்கிவிடுங்கள் என்றேன். இது குறித்து அவர்கள் கண்டிப்பாக முடிவெடுப்பார்கள்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் எந்தளவுக்கு முக்கியமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு பள்ளியும், பள்ளி ஆசிரியர்களும் முக்கியமாக இருக்கிறார்கள். ஏனென்றால், ஒரு நாளில் அதிக நேரம் குழந்தைகள் பள்ளியில் தான் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் குழந்தைகள் எல்லாம் மனதளவில் நிறையவே சென்சிட்டிவாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நாம் குழந்தைகளிடம் பார்த்து தான் பேச வேண்டும்.