17வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிபோட்டி, 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து, 2025 ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள், பரிசளிப்பு விழாவிற்காக மேடைக்கு அழைக்கப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவருமான மொஹ்சின் நக்வி, இந்திய அணிக்கு கோப்பையும் பதக்கங்களும் வழங்குவதாக இருந்தார். ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்த இந்திய அணி வீரர்கள், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்துவிட்டனர். மாறாக, கோப்பையைத் தாங்களே கையில் எடுத்துக்கொண்டது போல் சைகை செய்து வெற்றியைக் கொண்டாடினர். இதனால் அதிருப்தியடைந்த மொஹ்சின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணி கோப்பையைப் பெறாததால், ஆசியக் கோப்பை நிர்வாகம் கோப்பையைத் திரும்ப எடுத்துச் சென்றது.
பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததால் கோப்பையை நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து நாங்கள் கோப்பையை வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதற்காக ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் எடுத்து செல்லலாம் என அர்த்தமல்ல. விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, கோப்பையை இந்தியாவிற்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) புகார் அளிக்கவுள்ளதாக பி.சி.சி.ஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா தெரிவித்தார். இதனிடையே, போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக வாரியத்திடம் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி ஒப்படைத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோப்பையை ஒப்படைத்ததாக வெளியான தகவலுக்கு பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் தலைவருமான மொஹ்வின் நக்வி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், கோப்பை வழங்க வேண்டுமென்றால் முறையான ஒரு விழா நடத்தப்பட வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.