Skip to main content

பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் ஜீரோ சைஸ் மிஸ் ஆகிறதா? வழியெல்லாம் வாழ்வோம் #15

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

 

life style

 

ஓர் ஆணின் உடல்நலமும் அறிவுநலமும் அவனுக்கு மட்டுமே பயன்படும். அவனது உடல்நலக்கேடு அவனை மட்டுமே பாதிக்கும். ஆனால் ஒரு பெண்ணின் உடல்நலமும் அறிவு நலமும் அவளது பரம்பரைக்கே தேவையான காரணிகள். ஆனால், துரித உணவென்பது மட்டுமே வாழ்வியலாய் மாறிப்போன இந்தப் பதின் ஆண்டுகளில் தான் பெண்களின் உடல்நலம் என்பது மொத்தமாய்க் கேள்விக்குறியாகி நிற்கிறது. பொருளாதார உறவு நிமித்தமாய் ஒவ்வொரு பெண்ணும் அவரவர் படிப்புத்தகுதிக்கு ஏற்ற வகையில் பணிக்கு செல்லவேண்டிய நிலை கட்டாயமாகிப்போனது இன்று. அந்தக் கட்டாயத்தின் பிடியில் சிக்குண்டு அவர்கள் கவனிக்க மறந்தது உணவு முறைகளை. 2 மினிட்ஸ் நூடுல்ஸ் மட்டுமே தேசிய உணவாகிவிட்டது. ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்ற பேதமெல்லாம் இதில் மட்டும் இல்லவே இல்லை.


இன்றைய இளம்பெண்களின் மனோநிலை:


தங்கள் உடல்நலனைப் பேணவேண்டிய பெண்கள், தங்கள் வடிவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கரீனா கபூருக்குப் போட்டியாய், "சைஸ் ஜீரோ" வடிவத்துக்கு மாறிவிட வேண்டும் என்று கொலைபட்டினி கிடப்பது மேல்த்தட்டு பெண்களின்  வாடிக்கையாகிவிட்டது. உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் இன்று எல்லாப் பெண்களின் நோக்கம், எடைக்குறைப்பு மட்டுமே. இன்றைய பெண்கள் இப்படித் தன்னைத்தானே காத்துக்கொள்வதும் இல்லை. மேலும், தங்கள் வடிவத்தைக் காத்துக்கொள்கிறோம் என்று, குழந்தைகளுக்கு பாலூட்டாமல் இருப்பதை நாகரீகமாக நினைத்துக்கொள்கின்றனர். இப்படியாக இரெண்டு தலைமுறைகளின் உடல்நலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த சமூகமும் பெண்களின் உடல்நிலையில் பெரிதாய்க் கவனம் கொள்வதாகத் தெரியவில்லை. ஒரு முறை பூக்கும் பூக்களின் நலம் காக்க உரம் தொடங்கி ஓராயிரம் வகையில் கவலை கொண்டு, அதீத அக்கறை கொள்ளும் யாரும்; பூப்படைந்த பின்னும் கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்களான பெண்களின் நலனில் கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.


பெண்களின் பருவங்கள்:


பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என்று பெண்களை வாழ்நாளின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளது நம் தமிழ் நாகரீகம்.


1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 க்கு மேல்

 

இந்த ஏழு பருவங்களிலும் பெண்களின் உடல் சார்ந்து வரும்பிரச்சனைகளும், அதை எப்படி இயற்கையோடு இயைந்த உணவியல் முறைகளில் சரிப்படுத்த இயலும் என்பதை பார்க்கலாம்.


தாய்ப்பாலின் முக்கியத்துவம்:


குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குறைந்தது ஆறு மாத காலம் வரையாவது தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், சுவாசக்குழாய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கின்றன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு எந்த நோயாயினும் அந்தநோயின் தாக்கம் குறைவாகவே ஏற்படுகிறது. மற்ற உணவுகளையும், பானங்களையும் உண்டு வளர்ந்த குழந்தைகளை விட, தாய்ப்பால் குடித்துவளர்ந்த குழந்தைகள் ஊட்டமாக இருப்பதாக உலக சுகாதர நிறுவனம்தெரிவிக்கிறது. பிறந்து ஆறுமாதம் வரை எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்டால், ஒரு ஆண்டிற்கு சுமார் 1.5 மில்லியன் சிசுக்களை காப்பாற்ற முடியும், மேலும் பல மில்லியன் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஹெச்.ஐ.வீ யால் பாதிக்கப்பட்ட பெண், தாய்ப்பால் மூலம் சிசுவிற்கு வியாதியை தொற்றுவிப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே அவர்களைத் தவிர பிற பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுத்தல் நலம்.

 
தாய்ப்பால் வங்கி:


தாய்ப்பால் சுரப்பு அதிகமில்லாத தாய்மார்களுக்கும், தொட்டில் குழந்தை திட்டத்தால் அரசால் எடுத்து வளர்க்கப்படும் அனாதைக் குழந்தைகளுக்காகவும் தாய்ப்பால் வங்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான தாய்ப்பால் சுரப்பு உள்ள அன்னையர்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டு முறையாக சேமிக்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த அடிப்படை ஊட்டச்சத்துக்கு பிறகான உணவியல் தேவைகளை வரும் வாரங்களில் பார்ப்போம்.


குழந்தைகளின் உணவும் கார்ப்ரேட் கலாச்சாரமும்:

 
கண்ணே, மணியே என்று பிள்ளைகளைக் கொஞ்சிய காலம் போய், அமுல் பேபி என்று எப்போது கொஞ்ச வைத்ததோ அப்போதே குழந்தைகள் சார்ந்த அனைத்திலும் தன் ஆக்கிரமிப்பை அரங்கேற்றத தொடங்கிவிட்டது கார்ப்ரேட் உலகம். உணவு, உடை, மருந்துகள், சோப்பு என்று அத்தனையும் பிராண்டட் மயமாய் ஆகிப்போனதையும், அதையே பெருமையென்று எண்ணிய பெற்றோரையும் இரெண்டு தலைமுறைகளாய் நம் வீட்டுப் பெரியவர்கள் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் இருக்கின்றனர்.


இந்த உலகமயமாக்கலில் ஒழிந்தே போனது நம் ஒட்டு மொத்தப் பாரம்பரியம். அவையென்ன என்பதை பின்வரும் நாட்களில் அலசலாம்.

முந்தைய பதிவு: பெண்கள் மனம் மாறுவது ஏன் தெரியுமா? வழியெல்லாம் வாழ்வோம் #14

 

 

Next Story

பட்டப்பகலில் கத்திக்குத்து; ரத்த வெள்ளத்தில் அலறிய பெண் காவலர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
stabbing in broad daylight; The female guard screamed in blood

காஞ்சிபுரத்தில் சீருடையிலிருந்த பெண் காவலரை, அவரின் கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக இன்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர்  வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையிலிருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் கணவன் மனைவியைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தாய்ப்பால் பவுடர் விற்பனை; அரும்பாக்கத்தில் அதிகாரிகள் ஆய்வு

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
sale of breast milk powder; Officials inspect Arumbakkam

பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பாலை அடைத்து சட்டவிரோதமாக விற்பனை நடத்தியதாக வெளியான சம்பவம் சென்னை மாதவரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தாய்ப்பால் விற்பனை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை மாவட்டத்தில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மாதவரம் பகுதியில் தாய்ப்பாலை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து சட்டவிரோதமாக ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தகவல் அடிப்படையில் தாய்ப்பால் விற்பனை மையங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

தாய்ப்பாலை விற்பது சட்டப்படி குற்றம் என்பதால் வேறு சத்துணவு பொருட்களை விற்பனை செய்ய அனுமதிகோரி அனுமதி வாங்கிவிட்டு அதற்கான லைசென்ஸை வைத்து சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனையில் ஈடுபடுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது.  இதுகுறித்து சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டது.தாய்ப்பால் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் மக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

sale of breast milk powder; Officials inspect Arumbakkam

இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே மருந்து கடையில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் வந்த அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சோதனையில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. 50 மில்லி கிராம் அளவுள்ள தாய்ப்பாலின் விலை 500 ரூபாய் என விற்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் பவுடர் வடிவில் தாய்ப்பாலை குளிர்ச்சியாக்கி விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. தாய்ப்பால் பவுடரை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவை 'கிங்க் இன்ஸ்டியூட்' ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.