Skip to main content

‘என்னங்க சார் உங்க சட்டம்’ நான் எழுதிய ஆத்மார்த்தமான பாடல், கவிஞர் யுகபாரதி பேச்சு...

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

புதுக்கோட்டையில் அறிவியல் இயக்கம் சார்பில் பிப்ரவரி 14 ந் தேதி தொடங்கிய புத்தகத்திருவிழாவில் மாணவ, மாணவிகள், வாசகர்கள் திரளாக வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு நாள் மாலை, இரவு நேரங்களில் மக்கள் மனம் கவர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்த நிலையில் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டார்.

 

yugabarathi speech at puthukottai book fair

 

 

அப்போது பேசிய அவர், "திரைப்படங்களுக்கு பாட்டு எழுதுவது கடினமானதல்ல. தமிழர்களாகப் பிறந்த எல்லோரும் பாடல் எழுதுவது இயற்கையானது. சில இயக்குனர்கள் விலக்கி வைத்த எனது பாடல்களை, வேறு படங்களுக்குப் பயன்படுத்தும் போது மக்கள் கொண்டாடியுள்ளனர். பொழுதுபோக்கு பாடல்களை எழுதிவரும்  அதேவேளையில் மிகவும் கவனத்தோடு தவறான பொருளில்லாமல் பாடல்களை எழுதவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். அப்படி எனக்கு  ஆத்மார்த்தமாக நான் எழுதிய பாடல், ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற ஜோக்கர் படப் பாடல். 

மக்கள் ரசிக்கும்படியான, அவர்கள் புழங்கும் மொழியிலேயே எளிய வார்த்தைகளால் எழுதப்படும் பாடல்; பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும். ஆனால், அந்த எளிய சொற்களை இயல்பாகக் கொண்டுவருவதற்கு ஏராளமான புத்தகங்களை வாசிக்க வேண்டும். தான் புழங்கும் துறைக்கான புத்தகங்களை மட்டுமே படைப்பாளிகள் வாசிக்கக்கூடாது. அனைத்து வகையான புத்தகங்களையும் வாசிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும். கவிஞர்கள், பாடலாசிரியர்கள் உரைநடையையும் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான், ஜனரஞ்சமாக பாடல்களை எழுத முடியும். கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும், கூடவே நல்ல வாசிப்பு இருந்தால் திரைப்படப் பாடல்களைத் தாராளமாக எழுத முடியும்" என்றார். 

விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் பேசும்போது, "அடித்தட்டு மக்களிடம் இருந்து வரும் படைப்பாளிகளின் வளர்ச்சிக்கு பல முட்டுக்கட்டைகள், தடைகள் வரலாம். அதற்கு என் அனுபவத்திலிருந்தே ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். அவற்றை எதிர்கொள்ள வேறு எந்த ஆயுதமும் நமக்கு கைகொடுக்காது. நமக்குத் துணையாக இருப்பவை புத்தகங்கள் மட்டுமே. வாசிப்பதுதான் நம்மை எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளைத் தகர்க்கும்" என்றார்.

தொல்லியல் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் பேராசிரியர் சு.ராஜவேலு பேசும்போது, "அதிக தொல்லியல் எச்சங்களைக் கொண்டது புதுக்கோட்டை மாவட்டம். கீழடிக்கு நிகராக தொல்லியல் தடயங்கள் இங்கு நிறைய உள்ளன.  புதுக்கோட்டையை மையப்படுத்தியே மாநிலத்தின் தெற்குப் பகுதியை எல்லையாகக் கொண்ட தனித் தொல்லியல் வட்டம் மத்திய தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சங்க காலக் கோட்டையான பொற்பனைக்கோட்டையை அழகப்பா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆய்வு செய்ய இருக்கிறோம். 

நாடு முழுவதும் 600, 700 இடங்களில் ஆய்வுகள் நடந்துள்ளது. ஆனால் எளிய மக்கள் பானை ஓடுகளில் எழுதி வைத்த சின்னங்கள் தமிழ்நாட்டுப் பகுதியில்தான் கிடைத்துள்ளன. அந்தளவுக்கு சாதரண பாமர மக்களும், பெண்களும் எழுத்தறிவு மிக்கவர்களாக தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இதுவே சான்றாக உள்ளது" என்றார்.

 


 

Next Story

சென்னை புத்தகக் காட்சி நிறைவு!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Chennai book fair complete

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பப்பாசி) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த புத்தகக் காட்சியானது கடந்த 3 ஆம் தேதி முதல் இன்று (21.01.2024) வரை நடைபெற்றது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் நடைபெற்றது. அதன்படி மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது. நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பபாசி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புத்தகக் காட்சிக்கு மொத்தமாக சுமார் 15 லட்சம் வாசகர்கள் வந்துள்ளார்கள். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கி இருந்தோம். மேலும், சுமார் ரூ.18 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாபாசி தலைவர் கூறுகையில், “புத்தக கண்காட்சியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வாசகர்கள் மழையிலும் கூட குடையைப் பிடித்துக்கொண்டு புத்தகக் காட்சிக்கு வந்ததிருந்தனர். மழையின் போதும் நீண்ட வரிசையில் நிற்கும் அளவுக்கு வாசகர்கள் வந்தனர். புதிய புத்தகத்தை ஒவ்வொரு பதிப்பகமும் வெளியிட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

Next Story

'அறிவுத் திருவிழாவில் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்'-முதல்வர் வேண்டுகோள்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Participate in the festival of knowledge and benefit' - Principal appeals

சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கும் நிலையில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பதிவில், 'தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் CIBF2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் நமது அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்' என தெரிவித்துள்ளார்.