Skip to main content

நீட் தேர்வை தகர்த்தெறிந்து மருத்துவராகும் துப்புறவு தொழிலாளியின் மகன் !

indiraprojects-large indiraprojects-mobile

அரியலூர் அனிதா மற்றும் பல தந்தைகளின் உயிர்களையும் காவு வாங்கிய நீட் எனும் எமனை வறுமையிலும் அடித்து நொறுக்கி வெற்றி பெற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருக்கிறார் சுதாகர். நெல்லை மாவட்டம் டவுணைச் சேர்ந்த பாஸ்கர்-சிவசக்தியின் மகன்தான் சுதாகர். தந்தையோ நெல்லை மாநகராட்சியில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றுகிறார். தாயோ தினக்கூலிக்காக சில வீடுகளுக்கு சென்று பாத்திரம் கழுவுகிறார். அண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.இவர்களது குடும்பம் வறுமையில் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில் சுதாகரும் 1043 மார்க் எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடிக்கிறார். பொறியியல் படிப்பதற்காக விண்ணப்பித்துவிட்டு, கலந்தாய்விற்காக காத்திருக்கும் வேளையில் மாரடைப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்திருக்கிறார் சுதாகரின் தந்தை. ஒன்னும் அறியாமல் திகைத்துக் கொண்டிருந்த குடும்பம், எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடனை வாங்கித் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். கடைசியில் பொறியியல் கலந்தாய்வு செல்வதற்காக சேர்த்து வைத்த பணத்தையும் செலவழித்து காப்பாற்றிவிட்டனர். இதனால் பொறியியல் கலந்தாய்விற்கும் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் சுதாகர்.

sudhagar image

தனது தந்தை மாரடைப்பில் விழுந்ததைப் பார்த்த சுதாகருக்கு, மருத்துவம் படித்து தந்தையைக் குணப்படுத்த வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டிருக்கிறது. இதை அம்மாவிடம் சொல்லவும், உனக்கு எது விருப்பமோ அதைப் படிடா, பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே! நாங்க இருக்கோம் என்று தைரியத்தை ஊட்டியிருக்கிறார். இந்த நேரத்தில்தான் மருத்துவம் படிக்க நீட் தேர்வும் கட்டாயமாக்கப்படுகிறது.முடிவெடுக்க முடியாமல் திகைத்த குடும்பம், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அம்மாவின் தாலி செயின் உட்பட அத்தனை நகைகளையும் அடகு வைத்து நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தும் 2017-ல் நடந்த நீட் தேர்வில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். மறு வருடம் படிக்க பணம் இல்லாததால், தவணை முறையில் கட்டணத்தை செலுத்துகிறோம் என அனுமதி கேட்டு இரவும் பகலும் கண்விழித்து படித்திருக்கிறார். 2018-ல் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று பல கனவுகளோடு இப்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இன்னும் ஐந்தே வருடத்தில் உலகம் போற்றும் மருத்துவராகவும் வலம்வர இருக்கிறார் சுதாகர்.

தம்பி சுதாகரிடம் வெற்றியின் ரகசியத்தைக் கேட்டோம். “நான் +2 வரை சேப்டர் மேல்நிலைப்பள்ளியில தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். நான் நல்லா படிக்கனும்னு எங்க அப்பா தாங்க முடியாத நாற்றத்துலயும் குப்பை அள்ளுறத நினைச்சி நிறைய நாள் மனசு உடைஞ்சி போயிருக்கேன். நோயோட இருந்துக்கிட்டு அடுத்த வீட்டுல போய் பாத்திரம் கழுவி வேலை செய்றாங்க அம்மா. இந்தக் குப்பை அள்ளுற வேலை என்னோட ஒழியட்டும், நீங்களோ, உங்க சந்ததிகளோ எந்தக் காலத்துலயும் இந்த வேலைக்கு வந்துறக் கூடாது, படிச்சி நல்ல வேலைக்கு போய்ருங்கனு அடிக்கடி அப்பா சொல்லிட்டே இருப்பாங்க. இதெல்லாம்தான் நல்ல படிச்சி முன்னுக்கு வரனும்னு கஷ்டப்பட்டு படிச்சேன். விலங்கியல் பாடம் எடுத்த ஜோஸ்லின் டீச்சர்தான் என்னோட இன்ஸ்பிரேசன். எனக்காக நிறைய நேரம் ஒதுக்கி சொல்லிக் கொடுத்தாங்க. அதனாலதான் என்னால +2-ல நல்ல படிக்க முடிஞ்சது. நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய பாடம் எல்லாம் சி.பி.எஸ்.சி சிலபஸ்ல இருந்ததுனால ஒன்னுமே புரியல. இங்கிலீஸ் கத்துக்குறதுக்காக டிக்சனரி வச்சி படிச்சேன். தினமும் 20 வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சி படிப்பேன். போகப்போக ஈஸியா இங்கிலீஸ் கத்துக்கிட்டேன். முதல் வருசம் எழுதுன நீட் தேர்வுல 116 மார்க்தான் எடுக்க முடிஞ்சது. அடுத்த வருசமும் விடாம படிச்சி, 303 மார்க் எடுத்து பாஸ் ஆனேன். நீட்-லாம் உனக்கு செட் ஆகாதுப்பா, தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதனு நண்பர்கள், டீச்சர்னு நிறைய பேரு முடியாதுனு சொன்னாங்க. என் மேல நான் வச்ச நம்பிக்கையாலதான் டாக்டர் சீட் கிடைச்சிருக்கு. கார்டியாலஜில பி.ஜி படிச்சி எங்க அப்பாவை மாதிரி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது அப்பா என்ன வேலை பார்க்கிறார்னு கேட்கும்போது, சொல்லக் கூச்சப்பட்டு எத்தனையோ முறை கூனிக் குறுகி நின்றுருக்கிறேன். ஆனால் இப்போ எல்லார்கிட்டயும் தைரியமாக சொல்றேன், “என் அப்பா குப்பை அள்ளித்தான் என்னை படிக்க வைக்கிறார்” என்று.

அன்னிக்கு படிக்கவே முடியாதுனு சொன்னவங்க எல்லாரும் இன்னிக்கு கை தட்டுறாங்க. அதனால உங்க மேல உள்ள நம்பிக்கைய கைவிடக் கூடாது. நமக்கு எந்த பாடம் நல்ல வருதோ, அந்த பாடத்தை நல்ல படிச்சாலே போதும் ஈஸியா பாஸ் ஆகிடலாம். முக்கியமா புரிஞ்சி படிக்கனும். அப்பதான் மறக்காம இருக்கும். ஒரு தடவை தோத்துட்டா சோர்ந்து போய் உக்காந்துறக் கூடாது. அதேபோல் எத்தனை முறை தோற்றாலும் ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு பணம் ஒரு பெரிய தடைதான், ஆனா நம்ம நல்லா படிச்சோம்னா உதவி பண்ண இங்க நிறைய பேரு இருக்காங்க. அதேபோல் ஒரு வருடம் வீணாகிடும், இந்த வருசத்துலயே எதையாவது படிச்சிட்டு போய்ருனு சொல்வாங்க. கண்டிப்பாக இதை செஞ்சிடாதீங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் படிங்க, நீட் தேர்வை ஈஸியா தகர்த்து விடலாம்” என்று வருங்கால மாணவர்களுக்கு நம்பிக்கையான டிப்சும் கொடுக்கிறார் சுதாகர்.

sudhagar amma

சுதாகரின் தாய் சிவசக்தி நம்மிடம், “நான் எட்டாம் வகுப்புதாங்க படிச்சிருக்கேன். இவங்க அப்பா பள்ளிக்கூடம் பக்கமே போகாத மனுசன். சுதாகர் பன்னிரெண்டு படிக்கும்போது அவங்க அப்பாவுக்கு சீரீயசாயிட்டு. வட்டிக்கு மேல வட்டியாகி ஒரே கடனாகிப் போச்சி. நாங்க கஷ்டப்படுறத பாத்துட்டு, அவனால படிக்க முடியல. நான் வேணும்னா வேலைக்கு போறேம்மானு எங்கிட்ட வந்து சொன்னான். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பிள்ளைய வேலைக்கு அனுப்ப முடியுமாயா ? என் தாலி செயின் முதல் கொண்டு எல்லாத்தையும் அடகு வச்சி பணத்தைக் கொடுத்தேன். அவனா தேடிப் பிடிச்சி ஒரு கோச்சிங்ல சேர்ந்தான். நாங்க முன்னாடி இருந்த வீடு இவனுக்கு படிக்கிறதுக்கு வசதி இல்ல, அதனால படிக்க வசதியா பழையபேட்டைல வாடகை வீடு எடுத்து வந்துட்டோம். அப்புறம் நெட்ல பாத்து படிக்கனும்னு ஒரு போன் கேட்டான், கஷ்டத்தோட கஷ்டமா அதையும் வாங்கிக் கொடுத்தோம். நாங்க படுற கஷ்டத்த பாத்துட்டு ரெண்டு வருசமும் ராவும் பகலுமா முழிச்சி படிச்சான். இப்ப எனக்குத் தெரிஞ்சி எங்க சமுதாயத்துல இவன்தான் டாக்டர் ஆயிருக்கான். இவ்வளவு கடனோட இருந்தாலும் ரொம்ப பெருமையா இருக்கு தம்பி. இப்படி எல்லா பிள்ளைகளும் படிச்சி நல்ல வேலைக்குப் போகனும்பா” என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்.தந்தை குப்பை அள்ளும் தொழிலாளி, மகன் மருத்துவர். ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது சுதாகரின் வாழ்க்கையில் இருந்தே தெரிகிறது. எத்தனை தடைகள் வந்தாலும், அதை உடைத்துக் கொண்டேதான் இருப்பார்கள் அடித்தட்டு மாணவர்கள் என்பதற்கு சுதாகரே மிகப்பெரிய சாட்சி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...