ADVERTISEMENT

குட்டையன்; அணிக்கு வேண்டாம் என்று புறக்கணிக்கப்பட்டவன் - உலகக்கோப்பை கால்பந்து நாயகன் ‘மெஸ்ஸி’

05:35 PM Dec 22, 2022 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

22வது உலகக் கோப்பை கால்பந்தின் கோப்பையை வென்ற நாயகன்; உலகமெங்கும் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் கால்பந்து வீரன்; அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற இன்றைய புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் மெஸ்ஸியின் வாழ்க்கைப் பயணம் என்பது அவர் விளையாடும் மைதானத்தைப் போல சமதளமானதல்ல; அது மேடு பள்ளமும் ஏற்ற இறக்கமும் நிறைந்தது.

மெஸ்ஸி கோப்பையைக் கைகளில் ஏந்த வேண்டும் என்றும், அதைப் பார்க்க வேண்டுமென்றும் உலகமெங்கும் ஏங்கிய ரசிகர்கள் கோடிக்கணக்கானோர். ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறார் என்பதற்குப் பின்னே அந்த வீரன் சந்தித்த அவமானங்களும் புறக்கணிப்புகளுமே காரணமாக இருக்கிறது.

சாதாரண கூலித்தொழிலாளியான அப்பாவுக்கும் தூய்மைப் பணி செய்யும் அம்மாவுக்கும் பிறந்த மெஸ்ஸி., சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது ஆர்வத்துடன் விளையாடி வந்திருக்கிறார். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றதும் அவரது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த மெஸ்ஸியை அவரது பாட்டி கால்பந்து விளையாட ஊக்குவித்து இருக்கிறார். அத்தோடு “நீ பெரிய கால்பந்து வீரனாக வருவ” என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

சிறிய வயதிலேயே திறமையாக விளையாடிய மெஸ்ஸிக்கு 11 வயதில்தான் தான் பாதிக்கப்பட்டிருந்த நோயைப் பற்றித் தெரிய வந்தது. மெஸ்ஸி இனிமேல் உயரமாக வளரவேமாட்டான் என்றும்; அப்படி ஒருவேளை வளர வேண்டுமென்றால் மாதம் ஒருமுறை இந்திய மதிப்பிற்கு கிட்டத்தட்ட 70ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசியைத் தொடைகளில் போட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதுவும் ஒரு சதவீதம்தான் வளர்ச்சி மாற்றம் நடக்கவும் வாய்ப்புள்ளது என்றிருக்கிறார்கள்.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கே தவித்த மெஸ்ஸியின் பெற்றோர்களுக்கு இந்தச் செய்தி இடியாக இறங்கியது. ஆனாலும் மெஸ்ஸியின் விளையாட்டைப் பார்த்த ஸ்பெயின் கால்பந்து கிளப் பயிற்சியாளர் கார்லஸ், ஸ்பெயின் கிளப்பிற்காக விளையாட மெஸ்ஸியின் தந்தையை அணுகுகிறார். அத்தோடு மருத்துவச் செலவையும் தாங்களே ஏற்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அர்ஜெண்டினாவிலிருந்து ஸ்பெயினுக்கு கால்பந்து விளையாடுவதற்காகக் குடிபெயர்ந்த மெஸ்ஸிக்கு அங்கே அவமானமும் புறக்கணிப்பும் காத்திருந்தது. “இந்தக் குட்டையனை ஏன் நமது கிளப்பிற்குச் செலவு செய்து கூட்டி வந்தீர்கள்” என்றும் “இவனால எல்லாம் விளையாட முடியுமா” என்றும் பயிற்சி பெற்றும் போட்டி நடக்கும்போது மைதானத்திற்குள் இறக்காமல் மைதானத்திற்கு வெளியேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

தொடைகளில் போட்ட ஊசியைத் தாங்கிய வலி ஒரு புறமும்; குட்டையன் குட்டையன் எனக் கூப்பிடப்படும் அவமானம் ஒரு புறமும்; மைதானத்திற்குள் இறக்காமல் வைத்திருந்த புறக்கணிப்பு ஒருபுறமும் என பல்வேறு வலிகளையும் தாங்கிக் கொண்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு ஈடு இணையற்ற வீரனாய் தன்னை தயார்படுத்திக்கொண்டார் மெஸ்ஸி.

அதற்குப் பிறகு கால்பந்தினை உதைத்து உதைத்து தன் கோவத்தையெல்லாம் காட்டிய அந்த வீரன் உதைத்த பந்தெல்லாம் கோல்களாக மாறியது; பல கிளப்புகள் போட்டி போட்டுக் கொண்டு மெஸ்ஸியை ஏலத்தில் எடுக்க வந்தார்கள்.

சில போட்டிகளில் தன்னை நிரூபிக்க முடியாததால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா “கால்பந்து கூட்டு உழைப்பு; நீங்கள் மட்டும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியதில்லை; தொடர்ந்து விளையாடுங்கள்” என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தொடர்ந்து விளையாடினார். 2022-ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த அர்ஜெண்டினா அணி அடுத்தடுத்த அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை வென்று வெற்றி வாகை சூடியது.

உலகமே எதிர்பார்த்த அந்த நொடி நடந்தேறியது. வெற்றிக் கோப்பையை வாங்கியதும் முத்தமிட்டு மெல்ல நடந்து வந்து தன் அணியோடு சேர்ந்து நின்ற மெஸ்ஸி கோப்பையை உயர்த்திய அந்த நொடி உலகமெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது என்றால் மிகையாகாது.

குட்டையன், குட்டையன் என்று சொல்லிய வாய்களெல்லாம் மெஸ்ஸி மெஸ்ஸி என்று சொல்ல வைத்த அந்த விளையாட்டு வீரனின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

Lionel Messi - Greatest Of All Time !


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT