ADVERTISEMENT

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7

04:40 PM Jul 25, 2018 | kamalkumar

நைல் நதி சமவெளியில் எகிப்து நாகரிகம் மலர்ந்து வந்த வேளையிலேயே மெசபடோமியாவில் யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிக்கரையோரம் புதிய நாகரிகம் ஒன்று பிறந்தது. மெசபடோமியா என்பது இன்றைய இராக்கைக் குறிக்கும். இங்கு உருவான நாகரிகம் பல்வேறு குழுக்களால் ஆட்சி செய்யப்பட்டது.


ADVERTISEMENT


ADVERTISEMENT

கி.மு. 3000களில் தொடங்கி கி.மு. 2000ம் வரை சுமேரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கி.மு. 2350 முதல் கி.மு.2218 வரை அக்காடியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கி.மு.1894 முதல் கி.மு.1595 வரை பாபிலோனியர்கள் ஆட்சிசெய்யத் தொடங்கினர். கி.மு. 1380 முதல் கி.மு.612 வரை அசிரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது. கி.மு. 550 முதல் கி.மு. 330 வரை மகா சைரஸ் என்பவரின் தலைமையில் பெர்சியர்கள் மெசபடோமியாவை கைப்பற்றி ஆட்சி செய்தனர்.

மெசபடோமியாவில் மனங்கவர்ந்த உடை நாகரிகம் உருவாகி இருந்தது. இங்கு உருவாகியிருந்த உடை நாகரிகத்தின் மிச்சங்கள் சிலைகளிலும், மண் பாண்டங்களிலும், கல்வெட்டுக்களிலும், அரச குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளிலும் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் ஜவுளித் தொழில் வளர்ச்சியடைந்திருந்ததை இந்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.


தொடக்க கால நாகரிகங்கள் விலங்குகளின் தோலை பயன்படுத்தி தங்களை பாதுகாக்கக் கற்றிருந்தனர். விரைவிலேயே கம்பளியையும், வெள்ளாடுகளின் ரோமத்திலிருந்தும் உடை நெய்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டனர். எகிப்தியர்கள் மெல்லிய லினன் உடைகளை விரும்பி அணிந்த வேளையில், மெசபடோமியாவை மையமாகக் கொண்ட சுமேரியர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களும் கம்பளியால் செய்யப்பட்ட கனமான உடைகளை விரும்பினர்.

ஏனென்றால் மெசபடோமியாவில் செம்மறி ஆடுகளை வளர்த்து அவற்றின் ரோமங்களை சேகரித்து சொந்த உபயோகத்துக்கும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தினர். மெசபடோமியர்களின் பாரம்பரிய உடை கம்பளியால் செய்யப்பட்ட பாவாடை ஆகும். காலப்போக்கில் ஆங்கில எழுத்து ‘ட்டி’ வடிவத்தில் அவர்களுடைய உடை அமைந்தது. மார்புப் பகுதிக்கு சால்வைகளை போர்த்திக் கொண்டனர். உடைகளிலும் சால்வைகளிலும் பின்னல் வேலைப்பாடுகள் இடம் பெற்றன.

சாயத்தை பயன்படுத்தியது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், தொல்லியல் அறிஞர்கள் சிலர், மெசபடோமியர்கள் வண்ணங்களை உபயோகித்து துணிகளை பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றனர். பல்வேறு வகை வண்ணங்களில் உடைகள் தயாரிக்கப்பட்டதாகவும், எந்த நிகழ்ச்சிக்கு எந்த வண்ணத்தில் உடையணிய வேண்டும் என்பதை மெசபடோமிய மதத்தலைவர்கள் முடிவு செய்தனர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆண்கள் தாடி வைத்து தலைப்பாகை வடிவத்தில் தொப்பி அணிந்தனர்.


மெல்லிய லினென் துணிகளை நெய்வதில் நவீனகால திறமைக்கு நிகராக இவர்கள் திறமை பெற்றவர்களாக இருந்தனர். இத்தகைய ஆடம்பரமான துணிகளை செல்வந்தர்களும், மதத் தலைவர்களும், கடவுளின் சிலைகளும் மட்டுமே அணியமுடிந்தது. மென்மையான பருத்தித் துணிகள் கி.மு.700களில் அசிரியர்கள் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பட்டுத்துணிகள் மிகவும் தாமதமாகத்தான் அறிமுகமாகின. பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் உடையணிந்தனர். இந்தப்பழக்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் இன்றுவரை தொடர்கிறது.


திருமணம் ஆன பெண்கள் மட்டுமே இத்தகைய உடையை அணிய அனுமதிக்கப்பட்டது. அடிமைகளும் பாலியல் தொழிலாளர்களும் இந்த உடையை அணியத் தடைவிதிக்கப்பட்டது. கி.பி. 20ஆம் நூற்றாண்டு வரை எகிப்திலும் அரேபியாவிலும் மெல்லிய துணியால் முகத்தை மூடியிருப்பது உயர்ந்த சமூக அந்தஸ்த்துக்கும் பெண்கள் நாகரிகத்துக்கும் அடையாளமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது, பர்தா எனப்படும் உடைகளின் முக்கியத்துவம் அரபு நாடுகளில் குறைந்து வருகிறது.

பெர்சியர்கள் தற்போதைய ஈரானில் மையம் கொண்டு தங்கள் பேரரசை நிறுவினர். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்தப்பேரரசு மத்திய கிழக்கு மற்றும் எகிப்து வரை பரவி இருந்தது. பெர்சியர்கள்தான் இரட்டை உடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தினார்கள்.


இடுப்புக்கு கீழே ட்ரவுசர்களாகவும் மார்புப்பகுதிக்கு கோட் வடிவிலும் இந்த உடை இருந்தது. இவை தொடக்கத்தில் விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன.

இந்த உடை அணிவதற்கு இலகுவாகவும் குளிருக்கு இதமாகவும் இருந்தது. எனவே மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் இது பிரபலம் அடைந்தது. குதிரையேற்றத்திற்கு இந்த ட்ரவுசர்கள் வசதியாக இருந்தன. அந்த தகுதியிலேயே சீனா, இந்தியா ஆகியவற்றுக்கும் இந்த உடை வடிவமைப்பு பரவியது.
இதில் குறிப்பிடத்தகுந்த சுவாரசியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, வரலாற்றுக் காலத்தில் ட்ரவுசர்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாக ஒருபோதும் இருந்ததில்லை. சீனாவில் ஆண்களும் பெண்களும் குறிப்பாக நிலத்தில் வேலைபார்ப்பவர்கள் ட்ரவுசர்களையே அணிந்தனர்.


இன்றைய துருக்கியை மையமாக் கொண்டு நிறுவப்பட்ட ஒட்டாமன் பேரரசில் பெண்கள் ட்ரவுசர்களை அணிந்தனர். ஐரோப்பிய கலாச்சாரத்தில்தான் ட்ரவுசர்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்கிற போக்கு இருந்தது.

மெஸபடோமியன் உடை நாகரிகத்தில் முடிச்சுகள் வைத்தும், சுருள்கள் வைத்தும் தைத்து அணிவது தொடர்ச்சியாக நீடித்தது.
முந்தைய பகுதி:

எகிப்திய அடிமைகளுக்கு உடையில்லை! உடையின் கதை #6

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT