Skip to main content

இந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை ஏன் இல்லை? வழியெல்லாம் வாழ்வோம் #9

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
VV title image



சென்ற 'வழியெல்லாம் வாழ்வோம்' பாகத்தில் 'மெக்காலே கல்விமுறை' பற்றி பார்த்தோம். இந்த வாரம் சில பிற கல்விமுறையில் குறித்து விவாதிக்கலாம்.

மாண்டிசோரி கல்விமுறை:

இத்தாலியில் பிறந்த மருத்துவர் மரியா மாண்டிசோரி என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விமுறை இது. குழந்தைகளின் ஆளுமை வளர்வதற்கு ஏதுவாய் இக்கல்வி முறை இருப்பதாக சில ஆசிரியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு இந்த மாண்டிசோரி முறை மிகவும் உதவுவதாக கல்வியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் அவர்களுக்கே உரித்தான வேகத்தில் பாடங்களைக் கற்றுக்கொள்ள மாண்டிசோரி முறை வழிவகை செய்கிறது. மூன்று மாதத்தில் சில குறிப்பிட்ட பாடங்களைக் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்தாத இக்கல்விமுறை மெக்காலே கல்விமுறையைவிட ஓரளவு சிறப்பானதாய் உள்ளது. முதலில் அடிப்படைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பின் தெரியாதவற்றை அவர்களாகவே கற்றுக்கொள்ள வழிவகை செய்யும் வழிமுறை இது. From Known to Unknown என்பதே மாண்டிசோரி கல்விமுறையின் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது. இப்படி பிரிட்டிஸ்காரர்களும், இத்தாலியர்களும் உருவாக்கிய கல்விமுறையிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம் நாம்.

 

Maria montessori



ஏன் இல்லை இந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை?

உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மக்களாட்சி நாடு என்று பெருமை பேசும் இந்த இந்தியத்துக்கென்று, இன்றுவரை எந்தக் கல்விமுறையும் உருவாக்கப்படாதது ஏன்? இது யார் பிழை? மகாபாரத காலத்திலேயே செயற்கைக்கோள் இருந்ததாய் ஊடகங்களின் முன் தம்பட்டம் அடிக்கும் அமைச்சர்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனக்கென ஒரு கல்விமுறையை உருவாக்குவதில் என்ன சிக்கல், யாரால் உருவாகிறது?

குருகுலக்கல்வி:

குருகுலக்கல்வி என்று முன்பு ஒரு கல்விமுறை வழக்கத்தில் இருந்தது. குருவின் இல்லத்தில் தங்கி மாணவர்கள் கல்வி கற்கும் முறை. Boarding School போல. குருவே வார்டன். அவர் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் அறிவுக்கும் வாழ்வியலுக்கும் தொழிலுக்கும் சேர்ந்தே பயன்படும் வண்ணம் இருந்ததாகத் தெரிகிறது. இன்று பல்கலைக்கழகங்கள் Choice Based Credit System எனப்படும் ஒரு முறையை அறிமுகப்படுத்திவருகின்றன. அதாவது, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடங்களை தெரிவு செய்துகொண்டு, அவற்றைப் பயின்று அதில் நிபுணத்துவம் பெறும் முறை இது. இந்த முறையில் பல வகையான பல புலங்களைச் சேர்ந்த பாடங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படும். அவற்றுள் தங்களுக்குப் பிடித்த பாடத்தை மாணவர்கள் தெரிவுசெய்து அவற்றை படித்து அதில் தேர்வு எழுதலாம்.

 

gurukula kalvi



இன்று பல்கலைக்கழகங்கள் கொண்டு வந்துள்ள இந்த முறையின் வேர்கள் முன்பே குருகுலக்கல்வியில் இருந்திருக்க வேண்டும் என்பது  எண்ணம். அப்போதே இப்படி ஒரு கல்வியியல் முறை இருந்தது உண்மையெனில், இன்று வெறும் பழம்பெருமை பேசுவதோடு நில்லாமல் ஏன் இந்த அரசுகள் இந்நாட்டு மாணவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கல்வியியல் முறையை உருவாக்கவில்லை என்பது ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழும் கேள்வி. ஆனால், குருகுலக்கல்வி பிறப்பு ரீதியாகவே இருந்தது என்பது வருந்தத்தக்க விடயம்.

மேலும், பள்ளிக்கல்வி சரியாக இருந்தால் மட்டுமே கல்லூரிக்கல்வி சிறப்பாய் அமையும். இவை இரண்டும் சரியாக இருக்கும்போது மட்டுமே ஒரு நாட்டின் சிறந்த குடிமகன்கள் உருவாக்க முடியும். இங்கோ, முதல் கோணல் முற்றும் கோணல் கதை தான். ஆரம்பிக்க கல்வியிலே A for Apple என்பதில் சுருங்கிப் போகிறது குழந்தைகளின் உலகம்.

பின்லாந்து கல்விமுறை:

இன்று உலக நாடுகளில் ஆரம்பக் கல்வியில் முதலிடத்தை வகிக்கும் நாடு பின்லாந்து. அங்கு குழந்தைகள் 7 வயதில்தான் பள்ளிக்கே செல்கின்றனர். ஏனெனில், ஏழு வயதில்தான் குழந்தைகளின் மூளை சிலவற்றை உள்வாங்கத் தயாராகும். இங்கு நாம் மூன்று வயதில் குழந்தைகளின் கையில் பென்சில் கொடுத்து எழுதப் பழக்கும்போது குழந்தைகளின் விரல்கள்கூட எழுதுவதற்கு தயாரானதாய் இருப்பதில்லை. பின்லாந்தில் கல்வி ஒரு விளையாட்டைப் போல் தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. முதல் ஆறு வருடங்கள் குழந்தைகளுக்கு எந்த தேர்வும் வீட்டுப்பாடமும் கிடையாது. பதினாறு வயதில்தான் குழந்தைகள் தேர்வுகளுக்குத் தயார்படுத்தப்படுகின்றனர்.
 

finland school



பின்லாந்து கல்வியியல் முறையில் இருக்கும் சிறப்பம்சங்கள்:

1. முதல் ஆறு வருடங்கள் ஒரே ஆசிரியரிடம் குழந்தைகள் பாடம் கற்கும். அதனால் குழந்தைகளின் நிறைகுறைகளை அந்த ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தமுடியும்.

 

 

2. வெறும் நான்கு மணிநேரம் மட்டுமே வகுப்புகள். ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் இடையே ஒரு மணி நேர இடைவெளி. இந்த இடைவெளி, குழந்தைகளின் மூளையை ஒரு பாடத்திலிருந்து இன்னொரு பாடத்தைக் கற்க ஆயத்தமாக்கத் தேவையான இடைவெளியாகும்.

3. வாழ்வியல் சார்ந்த கல்வியியல்: இதில் அன்றாட வேலைகளான துணி துவைத்தல், மடித்தல், சமையல் போன்றவை கூட குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகின்றன.

4. படைப்பாற்றலும் இணைந்து செயல்பட வழிவகுக்கும் Team Work போன்றவற்றிக்கு முக்கியத்துவம்.

5. அனைத்திற்கும் மேலாய் அனைத்து பள்ளிக்கூடங்களும் அரசு நடத்தும் பள்ளிக்கூடங்கள். இதனால் லாபநோக்கில் தனியார்மயமாக்கப்படுவது மொத்தமாய் இல்லை அங்கே.

இதெல்லாம் இங்கு சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி நம் பிள்ளைகளை எப்படி உடலாலும் மனதாலும் வலிமையாக்கி நெறிப்படுத்தலாம் என்று அடுத்த வாரம் காண்போம்.

 

 

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.