ADVERTISEMENT

படிப்பதெல்லாம் இயல்பாக யாரிடம் ஒட்டிக்கொள்கிறது? ஒரு பேப்பர்.. ஒரு பேனா.. கொஞ்சம் சிந்தனை!

05:59 PM Aug 26, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெண்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர், அனுபவரீதியாக தனது சிந்தனையில் உதித்தவற்றை, நக்கீரன் இணையத்தள வாசகர்களிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவரது கருத்துகளைக் கவனிப்போம்!


“அவன் சொன்னான்; இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும், அதை உனது சுயபுத்தியால், ஏன், எதற்கு என்று சிந்தித்துப் பார்..”- தீர்க்கமாக இப்படிச் சொன்னார், தத்துவமேதை என்று உலகமே போற்றும் சாக்ரடீஸ்.


எது கடினமான வேலை?


இமயமலை போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? கடும்பாலைவனத்தில் அதிக பாரத்தோடு வெறும் காலோடு நடப்பதா? வெறும் கோடரி கொண்டு பெரிய காட்டு மரத்தை வெட்டிக் கீழே சாய்ப்பதா? போர்க்களத்தில் உயிரைப் பணயமாக வைத்துப் போரிடுவதா?

இவைகள் எல்லாம் சிரமமான வேலையா? கிடையாது... கிடையவே கிடையாது!

நம்மில் நிறைய பேருக்கு இவை எல்லாவற்றையும் விட மிகச் சிரமமாகத் தோன்றும் வேலை ஒன்று உண்டு.

அதுதான் சிந்திப்பது! மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எது? சிந்திப்பது! ஆம்... அதுவேதான்.


மனிதனின் பலம் எது?


குதிரைகளைப் போல் ஓட முடியுமா? பறவைகளைப் போல் பறக்க முடியுமா? யானையைகளைப் போல் மரங்களைச் சாய்க்க முடியுமா? சிங்கத்தைப் போல் வேட்டையாட முடியுமா? மாடுகளுக்கு உள்ளது போன்ற உறுதியான கொம்புகளால் எதிரிகளை முட்டிச்சாய்க்க முடியுமா?

நம்மால் ஒரு நாயை அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ, கையினாலோ அடித்துவிட முடியாது. அதற்குக்கூட ஒரு கம்பின் துணை வேண்டும்..!

மனித உடல்தான் எவ்வளவு மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் காலணியின் துணை தேவைப்படுகிறது. இத்தனை பலவீனமான உடலைக்கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்? எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான்?

அப்படியென்றால் மனிதனின் பலம் எது? அதுதான் சிந்திக்கும் அறிவு!


தலை வாலாக மாறலாமா?


நம்மில் பலரும், நமக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவான, மனிதனின் மிகச்சிறந்த பலமான இந்த அறிவைப் பயன்படுத்துகிறோமா?

இந்த அறிவு தேவையே இல்லை என்று, மனதளவில் மூட்டை கட்டிப் பரணில் போட்டு விட்டவர்கள் பலர். பலரும் தாங்கள் போகும் இடத்திற்கு இந்த அறிவை எடுத்துச்செல்வதே இல்லை.

எல்லா மனிதர்களுக்கும் தலை இருக்கிறது. ஆனால், தலை, தலையாக இல்லை. தலை, வாலாக மாறிவிட்டது! எது ஆடுகிறதோ, அது வால்! எது சிந்திக்கிறதோ அது தலை!


சிந்திக்கும் பழக்கம் இல்லை; அது தேவையும் இல்லை!


நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? இல்லை.. ஏன் சிந்திக்கத் தயங்குகிறோம்?

அப்படி ஒரு பழக்கம் இல்லீங்க! அது நமக்கு தேவை இல்லீங்க! ரிஸ்க் எடுக்க விரும்பலீங்க! ஏதோ நடக்குதா, அது போதும். எதுக்கு இந்த வேண்டாத வேலை. மூளைக்கு வேலை கொடுத்தால் நிம்மதி கெட்டுப்போகும் என்று சொல்லி, போகிற போக்கை மாற்ற, புதிய வழியைக் காண பலருக்கும் தயக்கமோ, தயக்கம்!

ஆறுகள் கூட, தான் போகும் வழியில் தடங்கல் ஏற்பட்டால் தங்கள் போக்கை மாற்றிவிடுகின்றன. ஆனால், மனிதர்களில் பலரும் தங்களின் போக்கை மாற்ற விரும்புவதில்லை.

மாறுபட்டுச் சிந்திக்க, வேறுபட்டுச் செயல்பட, ஒரு துணிவு வேண்டியதிருக்கிறது. ஒரு வித அச்ச உணர்வு, நம்மை மாறுபட்டு சிந்திக்க, நாம் சில விதிகளைத் தாண்டி வர அனுமதிப்பதில்லை.


உலகை மாற்றியமைப்பவர்கள் யார்?


ஒரு தொடர் வண்டியில் நிறைய பெட்டிகள் இருக்கலாம். ஆனால் அத்தனை பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் இஞ்சின், ஒரே ஒரு பெட்டியில்தான் இருக்கிறது. அது போலவே இந்த உலகை இழுத்துச் செல்பவர்கள், இந்த உலகை மாற்றியமைப்பவர்கள், இந்த உலகை உருவாக்குபவர்கள் யாரென்றால்- சிந்திக்கும் சில மனிதர்களே!

இப்படிச் சிந்திப்பவர்கள், அறிவியல் அறிஞர்களாகவும், ஆன்மிக அறிஞர்களாகவும், பெரிய தலைவர்களாகவும், சிறந்த ஆளுமைகளாகவும் விளங்குகிறார்கள். இந்த உலகம் என்ற சிற்பத்தைச் செதுக்கும் சிற்பிகள் இவர்களே!


எது சிந்தனை?


நம்மில் பலருக்கும் எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால், அதை மனதில் இடையறாது நினைத்து கவலைப்படுவதையே சிந்தனை எனத் தவறாக நினைக்கிறார்கள்.

இது போலவே, இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சி, நடந்து முடிந்த மனதுக்குப் பிடித்த நிகழ்வு, இவைகளை நினைத்து கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!

கணிதத்திற்கு விடைகாண முயலும்போதும், புதிர்களுக்கு விடை தேடும்போதும்தான், நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். பிரச்சனைகளை அலசி ஆராய்தல், கணக்கிடல், திட்டமிடல், புதிய வழிகாணல் இவைகளே சிந்தனை எனப்படும்.

ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைத்திறனுக்கு வேலை கொடுக்க வந்தவையாகும். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சிந்திக்கப் பழக வேண்டும்.

இதுபோன்று நாம் சிந்திக்க முயற்சிக்கும்போது, மனம் அங்கும் இங்குமாக அலைபாயும், தடம் மாறிப் போகும். ஆகவே தெளிவாகச் சிந்திக்க வேண்டும் என விரும்பினால் ஒரு பேப்பர், ஒரு பேனா, கொஞ்சம் மூளை.. அதாவது மூளைத்திறனைப் பயன்படுத்துவது. இவற்றோடு, ஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால், எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம்.


யார் அறிவாளி? யார் பலசாலி!


நிறைய புத்தகங்களைப் படித்தவர்கள் அறிவாளிகளா? நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா?

எவர் நல்ல உணவுகளையும் உண்டு, கடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ, அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ, அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது.

அது போலவே, நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும். நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால், அறிவாளிகள் ஆக முடியுமா? படிப்பானது, நல்ல தகவல்களை அளித்து, நமது சிந்தனையைத் தூண்ட உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன்?


சிந்தனைத்திறன் உள்ளவன் காட்டும் வழியே சிறந்தது!


எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோ, எவரிடம் சிந்தனைத்திறன் இருக்கிறதோ, அவர் படிப்பதெல்லாம் அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது படிக்கும் படிப்புகள், அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. சிந்தனைத்திறன் இல்லாமல் படிக்கும் படிப்பினால் எந்த பிரயோஜனமும் இல்லை.

மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் புதிய வழிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஆராய்ச்சி பகுதி என ஒன்று செயல்படுகிறது. பெரிய நிறுவனங்கள் இந்தப் பகுதிக்கென்றே பெரும்செலவு செய்கின்றன. இந்த (R & D – Research and Development) சிந்தனைப்பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த நிறுவனம் வளர்ச்சியடைகிறது.

இதுபோலவே, எந்த மனிதன் சிந்திக்கிறானோ, அவனே இச்சமுதாயம் செல்லும் பாதையில் தடங்கல்கள் ஏற்படும் போது, மாற்றுப்பாதையை ஏற்படுத்தியும், புதிய பாதைகளை அடையாளம் காட்டியும், சமுதாயம் பயணிக்க புதிய வழிகளைக் காண்பிக்கிறான். அவ்வாறு சிந்தனைத்திறன் கொண்ட மனிதன் காட்டும் வழியைப் பின்பற்றும் சமுதாயம் விரைவாக உயர்கிறது.

முந்தைய பகுதி: குறிவைக்கப்படும் அன்பிற்குரியோரின் கரும்பக்கங்கள்! -தொழிலதிபர் ஒருவரின் அனுபவப் பகிர்வு!

அனுபவத் தெறிப்புகள் தொடரும்…

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT