What types of treatments are available for back pain?

Advertisment

அன்றாடம் நாம் சந்திக்கும் முதுகு வலி பிரச்சனைக்கு பலவிதமான சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால் எல்லோருக்கும் எல்லா வகையான சிகிச்சைகளும் தேவைப்படாது. முதுகு வலிக்கான காரணங்களைப் பொறுத்தே அதற்கான சிகிச்சைகளும் முடிவு செய்யப்படும். அந்தக் காரணங்கள் என்னென்ன?சிகிச்சை முறைகள் என்னென்ன? என்பதையெல்லாம் பட்டியலிடுகிறார் மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மரியானோ புருனோ.

ஒருவர் தொடர்ந்து நான்கு நாட்கள் தன்னுடைய கழுத்தையோ இடுப்பையோ தவறான முறையில் பயன்படுத்தி வந்தால் அவருக்குத் தேவை மருந்தோ மாத்திரையோ அல்ல.வாழ்க்கை முறை மாற்றம் தான். புத்தகம் படிப்பது, கம்ப்யூட்டர் பார்ப்பது, குனிந்து வேலை செய்வது என அனைத்தையும் தவறான முறையில் செய்துவிட்டு, மருந்து மாத்திரையின் மூலம் நிவாரணம் பெற இது ஒன்றும் மேஜிக் அல்ல. இவர்களுக்கு உடனடித் தேவை வாழ்வியல் முறை மாற்றங்கள் தான். எப்படி தொலைக்காட்சி, மொபைல், கார் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கென்று ஒரு முறை இருக்கிறதோ அதைப்போல உங்களுடைய முதுகையும் பயன்படுத்த சரியான முறை இருக்கிறது. முதுகை சரியான முறையில் பயன்படுத்துவதே முதல் நிலை சிகிச்சை. உங்களுக்கு தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் மாத்திரை மூலம் சரி செய்யலாம். ஆனால் வலி நிவாரணிகள் என்பது குறைந்த காலத்திற்கு அதாவதுஅடிப்படைபிரச்சனைகளை கண்டறிவதற்கான காலத்திற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர நீண்ட காலத்திற்குப் பயன் தராது.

இரத்த சோகை, கால்சியம் குறைபாடு போன்றவற்றிற்கு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். பிறவியிலிருந்து முதுகுத்தண்டில் பிரச்சனை இருந்தால், நரம்புகளில் கட்டி இருந்தால், அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், உடனடியாக செய்து கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சையைத் தாமதப்படுத்துவது தவறு. இவை அனைத்தையும் போல சரியான உணவு முறையை அமைத்துக் கொள்வதும் முக்கியமான ஒன்று. அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய காரிலோ பைக்கிலோ அதிக எடையை ஏற்றும்போது வேகத்தடையில் இடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதைப்போல அதிக எடை கொண்ட ஒருவர் முதுகு எலும்புகளுக்கும் அதைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறார். அப்போது தேய்மானம், தசைப்பிடிப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் ஏற்படலாம். இவர்களுக்கு உடனடியான தேவை என்பது எடை குறைப்பு தான்.

Advertisment

தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு முதுகு வலி ஏற்படுவதற்குக் காரணம் கழுத்தையோ இடுப்பையோ தவறாகப் பயன்படுத்துவது, வைட்டமின் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு ஆகியவற்றினால் தான். இவற்றை மாத்திரைகள் மற்றும் உணவுகளின் மூலம் குணப்படுத்தலாம். மிகச் சிலருக்கு மட்டுமே முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது மற்றும் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கிறது.

வாழ்வியல் முறை, உணவு முறை, தசைப்பிடிப்பு, எலும்பு தேய்மானம், இரத்த ஓட்ட குறைபாடு, உடல் எடை, கட்டி ஆகிய பல்வேறு காரணங்களினால் முதுகு வலி ஏற்படலாம். இவற்றில் சரியான காரணம் எது என்பதைக் கண்டறியாமல் பொதுவான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதால் தான் பலர் நீண்ட காலமாக முதுகு வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். நோய் கண்டறிவதைத் தாமதப்படுத்துவது;சரியான நேரத்தில் ஸ்கேன் செய்துகொள்ளாமல் இருப்பது;தவறான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.