Skip to main content

அடிக்கடி வேலை மாறுபவர்களா இதை படிங்க...

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

நம்மில் பல பேர் அடிக்கடி வேலை மாறிக்கொண்டு இருப்பார்கள்.அதற்கு காரணம் கேட்டால் எனக்கு பிடிக்கவில்லை என் உயர் அதிகாரி எனக்கு எதிராக செயல்படுகிறார்,அவருக்கு சாதகமான ஆட்களுக்கு எல்லாம் பன்றாங்க அப்படி,இப்பிடின்னு காரணம்  சொல்லி கொண்டு அந்த சூழ்நிலையை பிடிக்காதவாறு மாற்றி கொண்டு இருப்பார்கள்.இந்த காரணத்தால் ஒரு சில ஆண்டுகளில் நான்கு அல்லது ஐந்து கம்பெனி மாறிடுவாங்க இதுவே அவங்களுக்கு அடுத்து கிடைக்க கூடிய வாய்ப்புக்கு எதிர்மறையா அமைந்து விடுகிறது .

job changes

உண்மையிலேயே அவர்களுடைய வளர்ச்சியை அவர்கள்  வேலை பார்க்கும் கம்பெனி விரும்ப வில்லையா என்று சந்தேகங்கள் நெறய எழுகின்றன .தொடர்ந்து குற்றம் சொல்பவர்களுக்கு அங்கு இருக்க கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். எல்லாரும் ஒரு மித்த கருத்து சிந்தனையோடு இருப்பார்கள் என்று  சொல்ல முடியாது அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களையும் மாற்றி கொள்ள வேண்டும் .ஏற்றவாறு ஒரு இடம் பாக்க வேண்டும் என்றால் இந்த உலகத்தில் அப்படி ஒரு இடம் இல்லை அப்படி நினைத்தால் நம்மளால் வெற்றி பெற முடியாது .அதே மாதிரி எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறது என்றும் நினைக்க கூடாது .

எல்லா மனிதர்களுக்கும் தங்களுடைய வேலை மற்றும் வாழ்க்கையில் நிறைய சவால்கள் இருக்கின்றன .அதனால் எல்லா வகையான சவால்களை சமாளிக்கும் அளவுக்கு அறிவும் மற்றும் புரிதலும் இருந்தால் போதும் எளிதாக வெற்றி பெற முடியும் .அதனால் நமக்கு ஏற்றவாறு உலகத்தை மாற்ற முடியாது முடிந்தால் உலகத்துக்கு ஏற்றார் போல் நம்மளை மாற்றி கொண்டால் அணைத்து சவால்களையும் எதிர் கொள்ளலாம் .

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

'இது தான் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?'-ராமதாஸ் கண்டனம்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'This is the beauty that creates job opportunities?'- Ramadoss condemned

'தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரீசியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான  ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த  ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை  செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல்,  கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூக நீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக  வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.