Skip to main content

அல்சர் அலர்ட்... நீங்கள் செய்யக் கூடாதது இதுதான்...

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

அல்சர் ஒரு சிறு நோய்தான், அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் வரை...  அடப்போங்க இது கல்லையே கரைக்கும் வயிறு அப்படினு பன்ச் டயலாக் பேசாதீங்க. ஏனென்றால் அல்சர் வந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி.


 

ulcer

 

சாப்பிடாவிட்டாலும் வலிக்கும், சாப்பிட்டாலும் வலிக்கும், கண்ணுக்குமுன் ஆயிரம் நல்ல சுவையான உணவுகள் இருந்தாலும் எதையும் சாப்பிடமுடியாது. காரம் அதிகமிருந்தாலும் வலிக்கும், புளிப்பு அதிகம் இருந்தாலும் வலிக்கும் என தெனாலி கமல் போல அடுக்கிக்கொண்டே போவார்கள். முன்பு கூறியதுபோல அல்சர் சிறு நோய்தான், அது நமக்கு வராதவரை.

இரைப்பை சுவர்களில் ஏற்படும் புண்களுக்கு பெயர்தான் அல்சர். இது ஒன்றுதான் சமத்துவத்தை பின்பற்றுகிறது. ஆம் இது ஆண், பெண், வயதானவர்கள், குழந்தைகள், பணக்காரர்கள், ஏழைகள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. அல்சர் மூன்று வகைப்படும்.  முன்சிறுகுடலில் ஏற்படும் புண் "டியோடினல் அல்சர்" என்றும், இரைப்பையில் ஏற்படும் புண் "கேஸ்ட்ரிக் அல்சர்" என்றும், உணவுக்குழல், சிறுகுடல், இரைப்பை ஆகியவற்றில் ஏற்படும் அல்சர் "பெப்டிக் அல்சர்" என்றும் அழைக்கப்படுகிறது. 

இதற்கான காரணங்கள் என பார்க்கும்போது, நேரத்திற்கு சாப்பிடாததுதான் முதலாவதாக வந்து நிற்கும் (பேச்சுலர்ஸ் கவனத்திற்கு). இரண்டாவதாக, புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது. 'நான் நன்றாக சாப்பிடுகிறேன் இருந்தும் எனக்கு அல்சர் வந்துவிட்டதே' என்பவரா நீங்கள் அப்போது உங்கள் உணவு பழக்கம் தவறு என்று அர்த்தம். காரம், புளிப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை முடிந்தவரை தவிருங்கள். எனக்கு நேரமில்லை என கூறாதீர்கள், நேரம் தவறி சாப்பிடுவதும் அல்சருக்கு வழிவகுக்கும். நாம் இப்போது கடைபிடிக்கும் அந்நிய உணவுப்பழக்கங்களும் அல்சருக்கு வழிவகுக்கும். தண்ணீர் மற்றும் உணவுகளில் உள்ள பாக்டீரியாக்களாலும் அல்சர் ஏற்படும்.  நீங்கள் சொல்வதை பார்த்தால் என்ன செய்தாலும் அல்சர் வரும்போலேயே என நினைப்பவர்களுக்கு....  வேறுவழியில்லை நாம் அந்தமாதிரியான காலகட்டத்தில்தான் உள்ளோம். 

 

ulcer


இதற்கான அறிகுறிகள் பல நிலைகளில் ஏற்படுகிறது. முதல்நிலையில் ஏற்படுவது நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம், அதைத் தொடர்ந்து பசியின்மை மற்றும் சிறிதளவு உணவு உண்டவுடனே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுதல். அடுத்த நிலை அடிவயிற்றில் வலி, இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் வயிற்றுவலி ஏற்படும். இவைகளுக்கெல்லாம் காரணம் புண்ணின்மீது அமிலம் படுவதுதான். அல்சரை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாமல் விட்டுவிட்டால் புண்ணில் இரத்த கசிவு ஏற்பட்டு இரத்த வாந்தி வரலாம், குடலில் துளை விழுவதற்கான வாய்ப்பும் உண்டு. 

இதற்கு மாத்திரை, மருந்துகள் என நிறைய உள்ளன. நாம் அன்றாட உணவின்மூலம் இதை எப்படி சரிசெய்வது என பார்ப்போம். 
 

fruits & vegetablesதினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என கேள்விப்பட்டிருப்போம். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆப்பிள் சாப்பிடுங்கள், அது அல்சர் வரும் வாய்ப்பைக் குறைக்கும். வீட்டு சாப்பாட்டில் முட்டைக்கோஸ், காலி ஃபிளவர், ப்ரோக்கோலி, முள்ளங்கி, பொரியல் வைக்கும் போது  வேணாம், வேணாம்னு சொன்ன பாவம்தான் நாம இப்படி இருக்க காரணம் அப்படினு நெறைய பேர் புலம்புவாங்க. அப்படி நீங்களும் புலம்பக் கூடாதுனா  இந்தக் காய்களையெல்லாம் சாப்பிடுங்கள். கேரட், கண்ணுக்கு மட்டுமில்ல, வயித்துக்கும் நல்லதுதான். அதனால கேரட் சாப்பிட்டாலும் அல்சர் குணமாகும். க்ரீன் டீ யும் அல்சரை குணப்படுத்தும். தேன், ஆலிவ் ஆயில், தயிர் ஆகியவையும் அல்சரை குணப்படுத்தும். 

இவைகளெல்லாம் அல்சரை குணப்படுத்தும் அன்றாடம் கிடைக்கக் கூடிய உணவுகள். உங்களுக்கு அல்சருக்கான அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள். அது போல உணவே மருந்து என்று முன்னோர்களை கூறியது என்றும் தவறுவதில்லை. அதனால், பேச்சுலரென்றாலும் சேல்ஸ் வேலைகளில் உள்ளவர்களென்றாலும் உணவின் மீது அக்கறை காட்டுங்கள்.