அலுவலகப் பணியில் இருப்பவர்களில் பத்திற்கு ஒன்பது பேர் ஏதேனும் ஒரு வகை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் 'உலக மனநல தின'த்தை (அக்டோபர் 10) 'பணியிட மனநல பாதுகாப்பு'க்கான நாளாக அறிவித்துள்ளது. இப்பொழுதெல்லாம் சிறு வாண்டுகளிலிருந்து எல்லோரும், எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் சொல்கிற வார்த்தைகள்,'டென்ஷன், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன்'. வேலைக்கு செல்பவருக்கு உயர் அதிகாரி தொல்லை, அவருக்கு அவர் மேலதிகாரி தொல்லை, அவருக்கு முதலாளி தொல்லை, முதலாளிக்கு நேரத்துக்கு பொருள் போகாதது, விற்பனை குறைவு, நஷ்டம் போன்ற தொல்லைகள். மாணவனுக்கு படிக்கும் சுமை, பணம் இல்லாதவனுக்கு பணம் சேர்ப்பதில் ஏற்படும் மனஉளைச்சல், பணம் அதிகமாக இருப்பவனுக்கு பாதுகாப்பதில் மனஉளைச்சல், பிரபலமாகதவனுக்கு ஏன் ஆகவில்லை என உளைச்சல், பிரபலமானவனுக்கு நிம்மதியாக வெளிய போகக்கூட முடியலேயே என்று மனஉளைச்சல். ஆக இங்கு மனஉளைச்சல், மனஅழுத்தம் எனும் மனநோய் இல்லாத ஆளே கிடையாது.

Advertisment

depression

விதவிதமான இந்த மன உளைச்சல்களுக்கு அடிப்படையாக இருப்பது, வேகமாக ஓடும் உலகத்துக்கு ஈடாக ஓட வேண்டுமென்ற மனம் தான். நாம் வாழும் தகவல் தொழில்நுட்ப வாழ்வில், தகவல்கள் நம்மைத் துரத்திக்கொண்டு படுக்கை வரை வருகின்றன. அளவுக்கு அதிகமான செய்திகள் ஏற்படுத்தும் தாக்கமும், அதற்கு எதிர்வினையாக நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற எண்ணமும், செயலாக அல்லாமல் 'கமெண்ட்களாக'ப் பேசி வடிகால் தேடும் தன்மையும் பல புதிய விதமான மனஅழுத்தங்களையும் நோய்களையும் உண்டாக்குகின்றனவாம்.

மனநோய் என்றால் தனியாக பேசுவது, தனியாக சிரிப்பது, அதிகமாக பயப்படுவது, அதிகமாக சந்தேகப்படுவது போன்றவைகள் மட்டுமல்ல. சராசரி நிலையிலும், அதிகம் கோபப்படுவது, 'யார் வீட்டிற்கு வந்தாலென்ன, போனாலென்ன, நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம்' என்று இருப்பது போன்றவைகளும்தான். இதற்கெல்லாம் மிக, மிக முக்கியமான காரணம் பொறுமையின்மைதான். அப்படி பொறுமையில்லாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பது தொழில்நுட்ப சாதனங்களே. நான் இதைப்பற்றி சொல்லவேண்டும் என்றாலும் அதற்கு தொழில்நுட்ப சாதனம் தேவைப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், அவை ஏற்படுத்தும் தீமைகளே அதிகமாக இருக்கின்றன.

Advertisment

depression 2

நம் முன்னோர்கள் ஒரு தகவலுக்காக உலகையே சுற்ற வேண்டுமானாலும் தயாராய் இருந்தார்கள், ஆனால் நாம் உலகையே உள்ளங்கையில் அடக்கிவிட்டு, வேண்டியவைகளை உடனே பெற்றுவிடுகிறோம். கைப்பேசி விளையாட்டுகளில் கூட நமக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் தைரியமோ, பொறுமையோ இருப்பதில்லை. முன்பெல்லாம் ஒரு கடிதம் எழுதிவிட்டு பதிலுக்காக வாரக்கணக்கில், மாதக்கணக்கில் காத்திருந்தனர். ஆனால் இப்போது வாட்ஸ்அப்பில் மெசேஜ் ப்ளூடிக்(message blue tick) ஆன பத்து நொடிகள் கூட பொறுக்கமுடியவில்லை.

நம்மில் எத்தனை பேர் தினமும் நிலவு, நட்சத்திரம் போன்றவைகளை பார்க்கிறோம் கடிவாளம் கட்டிவிட்ட குதிரையைப்போல தானே தினமும் இருக்கிறோம். நாலா பக்கமும் விரிந்திருக்கிறது உலகம், ஆனால் நாம் அதை நான்கு சுவற்றுக்குள்ளும், சொல்லப்போனால் கைபேசித் திரையின் நான்கு பக்கத்திற்குள் அடக்கிவிட்டோம். இந்த வாழ்க்கைமுறை நம் சிந்தனைத் திறனையும் பாதித்திருக்கிறது. ஒரு மனிதனின் மூளை ஒரு நிமிடத்தில் 50 விதமான சிந்தனைகளை சிந்திக்கும். நாம் இன்று ஒரு மணிநேரம் ஆனாலும் ஒரே விஷயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய அழுத்தங்களைக் கையாள சில சின்ன விஷயங்களைச் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்...

Advertisment

depression 3

- வாரத்தில் ஒரு நாளேனும் மெய்நிகர் உலகான கைபேசி, சமூக வலைதளம், கணினி ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மெய்யான உலகில் உரையாடுங்கள்

- நல்ல நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து சிரியுங்கள். நல்ல நண்பரிடம் நகைச்சுவையாக, கொண்டாட்டமாக பேசிக்களியுங்கள்

- வருடத்திற்கு ஓரிருமுறை ஊர் சுற்றுங்கள். செல்லும் இடத்தில், இத்தனை ஸ்பாட்களைப் பார்த்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில் செல்லாமல், ஆசுவாசமாக இருங்கள்

- நன்றாக சோம்பல் முறித்து கொட்டாவி விடுவது மனதைப் புத்துணர்ச்சியாக்குமாம். இந்த பழக்கம் மட்டும் அலுவலகத்தில் செய்வதற்கு உகந்ததல்ல

- அனைத்தையும் விட, யாரோடும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்

சின்னச் சின்ன மாற்றங்களால், மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வோம். மன நலம், வாழ்க்கையின் வளம்!