Skip to main content

அன்று தமிழகத்தின் இரண்டாம் எய்ட்ஸ் நோயாளி... இன்று 26 நாடுகளில் விழிப்புணர்வு உருவாக்கியவர்... 

Published on 15/04/2018 | Edited on 16/04/2018

இன்று தமிழ்நாட்டில் திருநங்கையர் தினம். இதே ஏப்ரல் 15இல் 2008ஆம் ஆண்டு தமிழகத்தில் திருநங்கைகளுக்கென தனி வாரியம் அமைக்கப்பட்டது. அந்த நாளை 2011இல் இருந்து திருநங்கையர் தினமாக கொண்டாடுகிறோம். உண்மையில் 'கொண்டாடுகிறோம்'-ஆ? இன்னும் அது பொதுவாகவில்லை. கொண்டாடுகிறார்கள். ஆணிற்கும், பெண்ணிற்கும் கிடைக்கும் அங்கீகாரம், சலுகை, பாதுகாப்பு எதுவும் மூன்றாம் பாலினத்தவர்க்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கான சுதந்திரம், உரிமை அனைத்துமே இன்றும் ஒரு வித இறுக்கமான சூழ்நிலையில்தான் உள்ளது. நமது சமூகம் இவர்களை இன்றும் தூரப்பார்வையில் பார்த்தாலும் அதையும் மீறி இந்த சமூகத்தில் வெற்றிநடைபோட்டு வாழ்ந்து காட்டியவர்களும் உள்ளனர். அதில் ஒருவர்தான் சமூக ஆர்வலர் திருநங்கை  "நூரி அம்மா" 

 

Noori transgender


உங்களை  பற்றி  சொல்லுங்க அம்மா ?

என் பெயர் நூரி. நான் ஒரு திருநங்கை, நான் பிறந்தது சென்னைதான். என்னோட பூர்வீகம்  ராமநாதபுரம். எங்க அம்மா எனக்கு நாலு வயசா இருக்கும்போது இறந்துட்டாங்க. எங்க அப்பா என்னோட பதினெட்டாவது வயசுல இறந்துட்டாரு. அதுக்கப்புறம் வறுமைதான். இடையில் என்னை நான் பெண்ணாக உணர்ந்து திருநங்கையா மாறி வீட்டிலிருந்து வெளியேறி வாழ்க்கையில பல கஷ்டங்கள் பட்டேன். சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டேன். 1987ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதலில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரை கண்டறிந்தனர். இரண்டாவது  நபர்  நான்.  முதலில்  கண்டறியப்பட்டவர் இறந்துவிட்டார். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.

எய்ட்ஸ் நோய் உங்க வாழ்க்கையை எப்படி மாற்றியது?

முதலில் எனக்கு இந்த நோய் இருப்பது தெரிந்தவுடன் மனதளவில் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எனக்கு ஊக்கம் கொடுத்தது  டாக்டர்.உஷா ராகவன் மேடம்தான். எனக்கு மாத சாப்பாடு செலவுக்கு 750 ரூபாய் ஆகும். அதையும் மேடம்தான் தந்தாங்க. இந்த நோய் இருப்பதா நினைக்காம 'காசுடன் வந்த எச்.ஐ.வியை, ஓசியில் கொடுக்க விரும்பவில்லை நண்பா'னு  போஸ்டர் வெளியிட்டு  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். அதுக்கப்புறம் அரசு மருத்துவமனையில் இருந்த எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சேவை செய்யத் தொடங்குனேன். சிறிது காலம் எனக்கு மேடம் உதவி பண்ணாங்க. என் சேவை தொடரவேண்டும் என்பதற்காக பல தன்னார்வு தொண்டு நிறுவனங்களில்  பணியாற்றி அது மூலம் எனக்கு வருமானமும் வந்துச்சு. பால்வினை நோய்களுக்கு  எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். ஆனா என்னோட உழைப்பை வாங்கிட்டு என்னை விளம்பரத்துக்கு மட்டும் முன்னிலைப்படுத்துனாங்க. எனக்கு அதனால் எந்த பலனுமில்லை.

அந்தத் தருணத்துல உறுதுணையா இருந்து, 'நூரி உங்களால ஜெயிச்சு காட்ட முடியும்'னு ஊக்கம் கொடுத்தது டாக்டர்.ஜோசப் வில்லியம்ஸ்தான். 'சார் எனக்கு படிப்பறிவு அதிகமில்ல சார்'னு சொன்னேன். 'உங்களுக்குப் படிப்பறிவை விட பகுத்தறிவு அதிகம்னு சொல்லி டாக்டர் கொடுத்த நம்பிக்கையில் 'தென்னிந்திய எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பை' 2001இல் 26  பேரைக் கொண்டு ஆரம்பித்தேன். இந்த அமைப்பின் மூலமாக பாலியல் தொழில் செய்தவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் திருங்கைகள் எல்லோருக்கும் சேவை செய்தோம். 2003இல் எஸ்.ஐ.பி மெமோரியல் டிரஸ்ட்னு ஒன்றை ஆரம்பிச்சேன். 'எஸ்.ஐ.பி'னா என்னோட பழகிய மூன்று திருநங்கை நண்பர்களின் பெயரின் முதல் எழுத்து. செல்வி, இந்திரா, பழனி மூனு பேரும் எச்.ஐ.வியால பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க. அவங்க ஞாபகமா அந்தப் பெயரை வைத்தேன். இந்தக் கூட்டமைப்பு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

விழிப்புணர்வு கொடுக்க நீங்க எந்தெந்த நாடுகளுக்கு போயிருக்கீங்க, எத்தனை விருதுகள் வாங்கியிருக்கீங்க?

நான் 2001ல் முதன்முதலாக ஆஸ்திரேலியா போனேன். அதுக்கப்புறம் 26 நாடுகள் இதுவரைக்கும் போயிருக்கேன். இந்தியாவில கேரளா தவிர மற்ற எல்லா மாநிலத்துக்கும் போயிருக்கேன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்ள பேசியிருக்கேன். விருதுகள்னு பார்த்தீங்கனா 2006ல "வாழ்நாள் சாதனையாளர் விருது" தமிழ்நாடு அரசிடமிருந்து வாங்கியிருக்கேன். அப்போதைய ஆளுநர் ரோசையா அவர்கள் கையாள "பெஸ்ட் மதர் விருது" வாங்குனேன். மும்பைல டாக்டர் பத்ரா விருதுல "வில் பவர் லேடி விருது" வாங்கிருக்கேன். இது மாதிரி பல விருதுகள் வாங்கிருக்கேன்.  எஸ்.ஐ.பி டிரஸ்ட்ல இப்ப ஒரு 45 குழந்தைங்க இருக்காங்க. அந்த பிள்ளைங்களுக்கு தாயாவும், தந்தையாவும் இருந்துட்டு இருக்கேன்.  நான் இல்லனாலும் இந்த இல்லம் மூலமா என் பேரு சொல்லி குழந்தைகள் வாழனும்.

 

Noori transgenderதிருநங்கைகளுக்கான சலுகைகளை பற்றியும், அவர்களுக்கான  அங்கீகாரங்களை பற்றியும் என்ன நினைக்குறீங்க?

திருநங்கைகளுக்கு அங்கீகாரமும், சலுகையும் கொடுத்தோம்னு சொல்றாங்க. ஆனா அதுவும் எங்கள மாதிரி அரைகுறையாதான் இருக்கு. இந்திய அரசாங்கம் என்ன சொல்லுது? பாலியல் தொழில்ல ஈடுபடாதீங்க, கடைகள்ள போய் காசு கேக்காதீங்க, அது சட்டபடி குற்றம் அப்படின்னு சொல்றாங்க. ஆனா அதுக்கு மாற்றா எந்த வேலை வாய்ப்பையும் அமைச்சுக் கொடுக்கலையே? இப்போதைக்கு எங்கள மாதிரி உள்ளவுங்கள்ள சாதிச்சவுங்கனு பாத்தா விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் இருக்காங்க. இதுக்கும் சேர்த்துதான் நான் போராடிட்டு இருக்கேன். எனக்கு உறுதுணையா இன்னும் சிலர் தேவை. அதுமட்டுமில்ல எங்கள மாதிரி பிறக்குற குழந்தைங்கள முதல்ல பெத்தவுங்க ஒதுக்காம இருந்தா போதும், அவுங்க ஒதுக்காம இருந்தா இந்த சமூகம் எங்களை தள்ளிவச்சு பார்க்காது. அதனால பெற்றோரும் எங்கள மாதிரி உள்ள குழந்தைகளை ஏத்துக்கனும்.

இந்த சமூகத்திற்காக நூரி போன்று உள்ளவர்களும் பல நல்ல விஷயங்களை  செய்து வருகின்றனர். அவர்கள்தான் தன்னம்பிக்கையின் உருவாகவும், மற்ற திருநங்கைகளுக்கு உதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். தன் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாயின் பாசத்தையும், தந்தையின் வழிகாட்டுதலையும் ஓர் உருவில் வழங்கி வரும் நல்ல ஆத்மாதான் இந்த நூரி அம்மா.

 

Next Story

‘3ஆம் பாலினத்தவர் உள் இடஒதுக்கீடு ரத்து’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Court action order on Cancellation of seat reservation for 3rd gender

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்‌ஷிதா ராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (02-06-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Next Story

தடைகளைத் தாண்டி சாதித்த மாணவர்கள்; முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
achieve Students who overcome obstacles Greetings from CM MK Stalin

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். வெளியான தேர்வு முடிவுகளின் படி, தமிழ்நாட்டில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 மாணவிகளும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர்கள் சிலரால், சாதிய காரணத்தால் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை இருவரும் கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்போது அந்த மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்திருந்தார். இந்தத் தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியியல் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். அதே போன்று தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஒரே திருநங்கை சென்னையைச் சேர்ந்த நிவேதா (வயது 20) 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் இவர் மருத்துவம் படிக்க விரும்புவதாகவும், இதற்காக நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

achieve Students who overcome obstacles Greetings from CM MK Stalin

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை மாணவி நிவேதா ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து நிவேதா பேசுகையில், “பொதுத் தேர்வில் திருநங்கைகள் பிரிவில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளேன். இதனால் என்னைப் போன்ற திருநங்களுக்கும், என் தாய் தந்தையருக்கும் எனக்கும் பாராட்டுகள் குவிகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரையும், கல்வித்துறை அமைச்சரையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன். உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

achieve Students who overcome obstacles Greetings from CM MK Stalin

இதனையடுத்து சின்னதுரை பேசுகையில், “நான் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. வணிகவியல் (COMMERCE) படிப்பை முடித்துவிட்டு பட்டய கணக்கர் (C.A.) ஆக வேண்டும் என்பது எனது ஆசை. உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட சம்பவம் போன்று இனி நடக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.