Skip to main content

ட்ராக் வியூ! - விபரீத செயலியால் விஷமாகும் சமூகம்!

இந்தியாவின் மக்கள்தொகையை வெறும் சந்தையாகவே பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள், புதுப்புது பெயர்களில் புதுப்புது ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து கடைவிரித்துக் கொண்டிருக்கின்றன. இவை வெறும் தொழில்நுட்பங்களாக மட்டும் இல்லாமல், ஒருவரை தொடர்ந்து கண்காணிக்கும் ஏவுதல் சாதனமாகவும் செயல்படுகின்றன. 


எக்கச்சக்க மாடல்கள், இத்தனை வசதிகள் என குவிந்து கிடக்கும் இந்த மலிவு விலை அரக்கன்களால், மிகப்பெரிய உளவியல் மாறுதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது உலகம். ‘ஒருமுறை சொடுக்கினால் உலகமே தெரியும்போது யாரிடம் என்ன கேட்பது?’ என்ற மனநிலைக்கு சமூகம் பழகிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்தே எல்லா சிக்கல்களும் தொடங்குகின்றன. 
 

track

 

 

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தினேஷ்குமார் பாலியல் புகாரில் சிக்கினார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், தனது சகோதரி ஒருவரின் செல்போனில், அவருக்குத் தெரியாமலேயே ட்ராக் வியூ (Track view) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து மறைத்து வைத்துள்ளார். இதன்மூலம், அந்தப்பெண் வெளிநாட்டில் வேலைசெய்யும் தனது கணவருடன் அந்தரங்கமாகப் பேசிய ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படங்களைத் திருடி, அதை யாரோ ஒருவரைப் போல அவருக்கே அனுப்பி தனது இச்சைக்கு அடிபணியும்படி மிரட்டியிருக்கிறார். இதுபற்றி மற்றொரு சகோதரரிடம் கூறிய அந்தப்பெண், அவரது உதவியுடன் தினேஷ்குமாரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து மடக்கிப்பிடித்து காவல்துறையிடமும் ஒப்படைத்திருக்கிறார்.

 

 

காவல்துறை முறைப்படி கவனித்ததில் கிடைத்த பல அதிர்ச்சித் தகவல்கள் நம்மை முகம்சுழிக்கச் செய்கின்றன. தினேஷ்குமார் ரொம்பகாலமாகவே இதே வேலையாகத்தான் இருந்திருக்கிறார். அவரது லேப்டாப், செல்போன்களில் அளவுக்கதிகமான அந்தரங்க சமாச்சாரங்கள் இருந்திருக்கின்றன. அதேபோல், அவரது வீட்டிலிருந்து பெண்களின் விதவிதமான உள்ளாடைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தற்போது தினேஷ்குமாரின் மீது பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து காவல்துறை. 

 

track

 

 

தினேஷ்குமார் தனது இச்சைக்காக பயன்படுத்திய ட்ராக் வியூ செயலி, உண்மையில் நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலமாக, இணைப்பில் இருக்கும் இரண்டு அலைபேசிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். வீடியோ, லொக்கேஷன், ஆடியோ, அசைவுகள் என பலவற்றையும் இதன்மூலம் கண்காணித்து, தவறுகளைத் தவிர்க்கமுடியும். ஆனால், இதைத்தான் தினேஷ்குமார் தன் குரூரமான மூளையின் சிந்தனையால் சிதைவு வேலைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். 
 

 

 

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்பாட்டை எதிர்த்து வரும் எழுத்தாளர் இமையம், ஒவ்வொரு செல்போனிலும் ஒரு ஆபாசத் திரையரங்கம் இருக்கிறது எனக் கூறியிருந்தார். அதேபோல், செல்போன்களால் நிகழும் அழிவுகள் பெண் என்ற மையத்தில் வந்து குவிவதாகவும், பெண்களே அவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
 

track

 

 

80 பெண்களின் அந்தரங்கத் தகவல்களைத் திருடி, செக்ஸ் டார்ச்சர் தந்த தினேஷ்குமார், தன் தங்கையையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் துயரத்தின் உச்சகட்டம். செல்போன்களைத் தவிரவும் ரசிப்பதற்கு உலகில் நிறையவே இருக்கின்றன. பளிச் திரைக்குள் முகம் புதைப்பதற்கு முன்னால், திரைக்குப் பின்னால் இருந்து நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள் என்பதையும் நாம் உணரவேண்டும்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்