ADVERTISEMENT

உலகம் போற்றிய ஆராய்ச்சியாளராகவும், குற்றம் சுமத்தப்பட்ட கைதியாகவும் நம்பி நாராயணன்... 

11:50 AM Feb 05, 2019 | george@nakkheeran.in



1994 நவம்பர் 30, அன்றைய நாளை, அந்த 53 வயது நபர் எதிர்பார்த்திருக்கவில்லை, விடியும் பொழுது அவரின் விரல்கள் சிறைக்கம்பிகளுக்கு இடையில் சிக்கியிருக்கும் என்பதை. ஏ.பி.ஜே. அப்துல்கலாமுடன் இணைந்து டி1 ராக்கெட் தயாரிப்பில் துவங்கி, உலகின் முதல் திரவ எரிபொருளில் இயங்கும் என்ஜீனை அறிமுகம் செய்தவர், ‘உளவாளி’ என்ற முத்திரையின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இஸ்ரோவின் க்ரையோஜின் மோட்டார் ஆராய்ச்சியின் இயக்குனராக பணியாற்றிவந்த நம்பி நாராயணன், பாகிஸ்தான் உட்பட சில வெளிநாடுகளுக்கு திரவ ராக்கெட் எரிபொருள் மற்றும் க்ரையோஜின் என்ஜீன் தொடர்பான செய்திகளை இஸ்ரோவிலிருந்து திருடி விற்றதாக கேரள போலீசாரால், குற்ற சதி பிரிவுகளுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இஸ்ரோவுக்கு மட்டுமல்ல, தாய் நாட்டுக்கே அவர் செய்தது மிகப்பெரிய துரோகம் என மக்கள் கொந்தளிக்க விஞ்ஞானி நம்பி நாராயணன் உளவாளியென கலங்கத்திற்கு உள்ளானார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக அவர் கொடுத்த உழைப்பின் நினைவுகள் சிறையின் வேதனையை அதிகரித்து விரக்தியை அவருக்குள் விதைத்துவிட முற்பட்டது. இப்போது விளங்குப்பூட்டி, போலிசாரால் பிடிக்கப்பட்ட கரங்கள் இதற்கு முன் சாதனைகளுக்காக கெளரவிக்கப்பட்டவை. ஆனால் அவர் கெளரவத்திற்காக உழைப்பவர் அல்ல.

ADVERTISEMENT


நம்பியின் பள்ளிப்பருவ இறுதியில், தந்தை இறப்பிற்குபின் உழைப்பது அவருக்கு அன்றாட கடமையாகிப்போனது. மதுரை தியாகராஜ கல்லூரியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுக்கு வீட்டிலிருந்து பணம் வரும் சூழலில், நம்பியோ பகுதிநேர வேலை பார்த்து வீட்டிற்கு பணம் அனுப்பிவந்தார். மிகுந்த போராட்டங்களுக்கு நடுவில் அவரின் பொறியியல் அறிவு வியக்கும் வகையில் வளர்ச்சிப்பெற்றது. அதன் விளைவாகவே அமெரிக்காவின், நியூ ஜெர்ஸி பகுதியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலையுடன் குடியுரிமை பெற்றுவிடும் கனவுடன் திரிந்த இளைஞர்கள் மத்தியில், தன் திறமையின் பொருட்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசவில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தும், அங்கிருந்து அறிவை மட்டும் பெற்றுக்கொண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.

அது இஸ்ரோவின் குழந்தைப் பருவம், அப்துல் கலாம் உட்பட வெறும் 25 பொறியாளர்கள் மட்டும் பணியாற்றிய காலம், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிசெய்யும் பொருட்டு இரவு, பகலாய் நம்பி உட்பட அனைவரும் உழைக்கவேண்டியிருந்தது. ‘ட்ரீமர்’ என்ற பொருள் கொண்ட டீ1 ராக்கெட் உருவாக்கத்தில் கலாமிற்கு பெருந்துணை பொறியாளராக பணியாற்றினார். தொடர்ந்து பல படிகளிலும் நாட்டின் வளர்ச்சியென்ற உணர்வில் மட்டும் ஊக்கம் பெற்று பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ஆகிய ராக்கெட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு நம்பியுடையதாயிற்று.

இதற்கிடையில் திரவ எரிபொருள் பற்றிய ஆராய்ச்சி நம்பி நாராயணனால் மேற்கொள்ளப்பட்டது. பல விமர்சனங்களுக்கு மத்தியில் அப்போதைய இஸ்ரோ நிர்வாக தலைவர் சதீஸ் தவானின் ஒத்துழைப்பால் உலகின் முதல் திரவ எரிபொருள் என்ஜீனை நம்பி அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு உலகையே இஸ்ரோவை திரும்பி பார்க்கச் செய்தது. அதற்கு அடையாளமாக 1992ல் ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியில் ‘க்ரையோஜீனிக் என்ஜீன்’ பற்றிய ஆய்வுகள் துவங்கப்பட்டன. முப்பது வருட உழைப்பின் பயணாய் நம்பி நாராயணன் அதன் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.


அந்த சாதனைகளுக்கான பரிசாய் கிடைத்தது சிறைவாசம்தான். கேரள போலீஸ் மற்றும் IB அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 50 நாட்கள் இன்னல்கள் அனுபவித்தப் பின்னர் 1995 ஜனவரி 19ல் பெயிலில் விடுதலையானார். நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த அறிவியலாளர், அப்போது தேச துரோகியாய் அறியப்பட்டார். தொடர்ந்து இஸ்ரோவில் பணிபுரியமாட்டாமல் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு மாற்றுதல் என தொடரும் துயரங்கள் பல. அப்போது அவரது விஞ்ஞான அறிவுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டிருந்தது. அவரது உழைப்பும், சாதனைகளும் கேள்விக்குள்ளாயின. உண்மைக்கான போராட்டத்தில் துவண்டுப்போயிருந்தார் நம்பி. ஆயினும் உண்மை மீதான நம்பிக்கையில் துவண்டுவிடவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ கைக்கு மாறியது. ஒன்றரை வருட விசாரணைக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டு சி.பி.ஐ. அளித்த முடிவுகளின் பேரில் இது பொய்யான வழக்கு என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை துடைத்தது. தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையம் சார்பில் பொய்யான வழக்குப்பதிந்த கேரள போலீஸ் மீதும் IB அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும், நம்பி நாராயணனுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு இழப்பீடு கொடுக்கவும் வழக்குத் தொடரப்பட்டது.

நீண்டகால போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் 2018ல் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கூறி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருது டாக்டர்.நம்பி நாராயணனுக்கு 2019ம் ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. பழியால் நேர்ந்த தாழ் நிலையிலிருந்து, புகழின் உச்சிக்கு உயர்ந்தார் நம்பி.

உலகம் போற்றிய ஆராய்ச்சியாளராகவும், குற்றம் சுமத்தப்பட்ட கைதியாகவும், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாக பாவித்து உழைத்தவர் நம்பி நாராயணன். பழிகளும் சூழ்ச்சிகளும் சூழ்ந்து தாக்கினாலும், உண்மை கேடயமாய் காத்து வெற்றித் தரும் என்பதற்கு சாட்சியாய் நிற்கிறார் இந்த வெண்தாடி விஞ்ஞானி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT