Skip to main content

சாம்பிராணினா சும்மா இல்ல! 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை!

Published on 28/09/2020 | Edited on 06/11/2020
srimathi sambrani jk muthu

ஆரம்பம்...

 

"ஒரு நாள் எங்க வாத்தியார் ஒருத்தர் கூப்பிட்டுக் கேட்டார், 'தம்பி டேய்... நீ பிசினஸ் பண்றியாடா?'ன்னு. அப்போதான் தோனுச்சு, 'ஓஹோ... நாம பண்றதுக்கு பேர்தான் பிசினஸ்ஸா'ன்னு" என்று சொல்லி மனம் விட்டு சிரிக்கிறார் ஜே.கே.முத்து. பிசினஸ் என்ற வார்த்தை தெரியும் முன்பே, தான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொழில் செய்யத் தொடங்கி, இன்று தனது தயாரிப்பை  இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். வடஇந்தியாவில் இவரது ப்ராண்ட்தான் முன்னணியில் இருக்கிறது. இவரது பகுதியில் உள்ள சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களையும் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள்.

 

srimathy stall

 

 

அப்படி என்ன தயாரிக்கிறார்கள்? சாம்பிராணி! நாம் சாதாரணமாக நினைக்கும் சாம்பிராணியின் உலக அளவிலான வர்த்தகம் மிகப்பெரியது. அதில் பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கெல்லாம் 'டஃப்' கொடுக்கிறார்கள் இரண்டு தமிழர்கள். ஜே.கே.முத்து  - சம்பத்குமார் ஆகிய இரு மதுரை நண்பர்கள்தான் தங்களது 'கமலம் க்ரூப் - டோன் டீலிங்ஸ் ப்ரைவேட் லிமிட்டட்' நிறுவனத்தின் தயாரிப்பான 'ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள்' மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வடஇந்தியாவையும் மணக்கச் செய்கிறார்கள். இவர்களது தயாரிப்புகளுக்கு வடஇந்தியாவில் நல்ல வரவேற்பு. பல மாநிலங்களின் முக்கிய பிரமுகர்கள் இவர்களை அழைத்துப் பேசிப் பாராட்டி இருக்கிறார்களாம். “நாங்க எங்களோட வெப்சைட்ல நேரடியா எங்க மொபைல் நம்பரை கொடுத்திருப்பதால, எங்க கஸ்டமர்ஸ் அடிக்கடி கூப்பிட்டு பேசுவாங்க, பாராட்டுவாங்க. ஒரு முறை சீரடி சாய்பாபா கோவிலின் தலைமை அர்ச்சகரே நேரடியா எனக்கு ஃபோன் பண்ணி, உங்க தயாரிப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினார். எம்.பி., எம்.எல்.ஏ, பெரிய அதிகாரிகள் இப்படி பலர் பேசிருக்காங்க. இப்படி வந்த ஃபோன்களில் என்னால் இன்னும் நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி தந்த விசயம், சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி எங்க தயாரிப்புகளை ரொம்ப விரும்பிக் கேட்டு வாங்குவாங்கன்னு எங்க டீலர் சொன்னது. அவர் சொல்லும்போது, முதலில் அஞ்சலின்னா யாருன்னு தெரியாம, சரி சரின்னு பேசிட்டு இருந்தேன். அவர்தான் ‘சச்சின் மனைவிய்யா’ என்று குறிப்பிட்டு சொன்னார். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது" என்கிறார்கள் நண்பர்கள்.

 

jkmuthu sampath old pic

ஜே.கே.முத்து  - சம்பத்குமார் (அப்போது)

 

jk muthu sampathkumar

ஜே.கே.முத்து  - சம்பத்குமார் (இப்போது)

 

இப்படி, தங்கள் தரத்தாலும் சரியான வியாபார வியூகத்தாலும் வெற்றியைப் பெற்று, பலருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து, தங்கள் பயணத்தின் 23 ஆண்டுகளை கடந்திருக்கிறார்கள் இவர்கள். இந்த பிசினஸ் பயணத்தை தனது பதினாறாம் வயதிலேயே, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, 1990ஆம் ஆண்டில் தொடங்கிவிட்டார் முத்து. 'டோன் மியூஸிக்கல்ஸ்' என்ற பெயரில் ஆடியோ கேசட் விற்பனை செய்திருக்கிறார். அப்போதுதான் இவரது ஆசிரியர் ஒருவர் இவரிடம் 'நீ பிசினஸ் பண்றியா தம்பி?' என்று கேட்க, 'பிசினஸ்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. இவரது ஆர்வத்தாலும், அவர் நடத்தி வந்த ஆடியோ கேசட் வியாபாரத்தாலும் ஈர்க்கப்பட்ட இவரது நண்பர் சம்பத்குமார், 1992ஆம் வருடம் இவருடன் இணைகிறார். இருவரும் இணைந்து, 'டோன் ட்ரானிக்ஸ்' என்ற எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனத்தை தொடங்குகின்றனர். பொருட்களை வாங்கி விற்கும் ஏஜென்சியாக பல வியாபாரங்களை செய்து 2000ஆம் ஆண்டில் ஒரு கட்டத்தில் சாம்பிராணி வியாபாரத்தில் இறங்குகின்றனர். தரமான சாம்பிராணியை நாமே தயாரித்து விற்கலாம் என்ற எண்ணம் ஏற்பட, உருவானதுதான் 'ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள்' என்ற ப்ராண்ட்.

 

"நம்ம வீட்டுக்கு ஒரு பொருளை செஞ்சா எப்படி செய்வோமோ அப்படி செஞ்சு தரணும்னுதான் இந்தத் தயாரிப்பை தொடங்கினோம். அப்படி தரமா செஞ்சா வரவேற்பு இருக்கும்னு நம்புனோம். அதே மாதிரி இருந்தது. ஆரம்பத்துல ரொம்ப கடினமா இருந்தது. தொடர் முயற்சிகள் மற்றும் மெல்ல வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்டது மூலமா இப்போ ஸ்ரீமதி மட்டுமல்லாமல் பாஞ்சஜன்யா, வாசம் உள்ளிட்ட பிராண்ட்களில் எங்கள் தயாரிப்புகள் வருகின்றன. வடஇந்தியாவில் பல மாநிலங்களில் எங்க சாம்பிராணி, ஊதுபத்திதான் நம்பர் 1" என்று பெருமையுடனும் பக்குவத்துடனும் தங்கள் பயணத்தை பகிர்கிறார் ஜே.கே.முத்து.

 

ஒவ்வொரு நாளும் இவர்களது நிறுவனத்தில் பணிபுரிவோர், தயாரிப்புப் பணிகளில் ஈடுபடும் முன் ஒரு உறுதிமொழியை ஏற்கின்றனர். "நம்ம வீட்டுல மனைவியோ அம்மாவோ சமைக்கும்போது சுவை முன்ன பின்ன இருக்கலாம், ஆனால் தரம் குறையாது... வீட்ல சாப்பிட்டு ஒருத்தருக்கு உடம்பு கெட்டுப்போறது பொதுவா நடக்குறதில்ல. அதுக்குக் காரணம், அவுங்க ஆத்மார்த்தமா செய்றாங்க. இந்த கான்செப்ட்டை நாங்க எங்க நிறுவனத்தில் கொண்டு வரணும்னு நினைச்சோம். அதே ஆத்மார்த்தமான உணர்வு நம் தொழிலாளர்களுக்கும் வரணும்னுதான் இந்த உறுதிமொழியை ஏற்கிறோம். இதுக்கு பெரிய எஃபக்ட் இருக்கு..." என்கிறார் முத்து. "எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துவோர் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் செழிப்பாக வாழ வேண்டுமென்று ஆத்மார்த்தமான வேண்டுதலுடன் நான் தயாரிக்கும் என்னிடமிருந்து வெளியாகும் ஒவ்வொரு பொருளும் தரமாகவும் தூய்மையாகவும் இருக்குமென்று உறுதி கூர்கிறேன்" - இதுதான் அவர்கள் ஏற்கும் உறுதிமொழி. வாடிக்கையாளர்கள் மீது இவ்வளவு அக்கறை என்றால், தொழிலாளர்கள் மீதும் அதே அக்கறை காட்டுகிறார்கள். கரோனா காரணமாக லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம் விடுமுறை கொடுத்து ஊதியமும் வழங்கியுள்ளனர். அது தங்களுக்கு ஆத்மதிருப்தியளித்ததாகக் கூறுகிறார் முத்து.

 

 

 
சாம்பிராணி, பழைய விஷயம்தான். ஆனால் அதில் புதுமையை புகுத்தியிருக்கிறார்கள் இவர்கள். கப் சாம்பிராணி என்ற புதிய வகை சாம்பிராணியை பல ஆய்வுகளுக்கும், முயற்சிகளுக்கும் பிறகு கண்டுபிடித்திருக்கிறார்கள். மதுரையில் நடந்த கண்காட்சிகளில் மக்களுக்கு இலவசமாக விநியோகித்திருக்கிறார்கள். ஆனாலும் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லையாம். இருந்தாலும் தொடர்ந்து முயன்றதில் வடஇந்தியாவிலும் ஏற்றுமதி சந்தையிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர்கள் கண்டுபிடித்த இந்த 'கப் சாம்பிராணி' வகையை பலரும் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் காப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்ததால், அப்படி தயாரிப்பவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி தடுத்திருக்கிறார்கள். பின் ஒரு கட்டத்தில் 'இந்தத் தொழிலை செய்பவர்கள் பெரும்பாலும் குடிசைத் தொழிலாகத்தான் செய்கிறார்கள். அவர்கள் தொழிலை தடுத்து நாம் என்ன சாதிக்கப்போகிறோம்?' என்ற கேள்வி தோன்ற, அந்த நடவடிக்கைகளை கைவிட்டிருக்கிறார்கள்.

 

    
இவர்களின் மனிதாபிமானத்தை பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன. இதே வகை சாம்பிராணிகளை அவர்களும் தயாரித்து விற்கிறார்கள். ஆனால், முத்து - சம்பத் இருவரும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கிச் சென்றனர். அது, தங்கள் 'பிராண்டை' வலிமைப்படுத்துவது. எத்தனை கப் சாம்பிராணிகள் இருந்தாலும் 'ஸ்ரீமதி சாம்பிராணி', ’ஸ்ரீமதி அகர்பத்தி' வேண்டும் என்று மக்கள் கேட்டு வாங்குமாறு செய்யவேண்டும் என்று அதை நோக்கி உழைத்தனர். அதை சாதிக்கவும் செய்தனர். இவர்கள் அறிமுகம் செய்த கப் சாம்பிராணியால் இன்சென்ஸ் இண்டஸ்ட்ரி என்றழைக்கப்படும் ஊதுபத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருள்களின் மொத்த சந்தை மதிப்பில் சாம்பிராணியின் பங்கு அதிகரித்திருக்கிறது. வர்த்தக உலகில் இது மிகப்பெரிய தாக்கம். அவர்கள் செயல்படுத்திய யுக்திகள் எல்லாம் உலகத்தரமான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படித்த, பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பிசினஸ் வல்லுனர்கள் செய்வது. புதிய தொழில்முனைவோருக்குப் பாடங்கள்... அப்படி என்ன யுக்திகள்? அடுத்த பகுதியில் பார்ப்போம்... 

கட்டுரையின் தொடர்ச்சி...

இந்தியாக்காரங்களே இப்படித்தான்னு சொன்னாங்க... கோபம் வந்தது! - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை! #2