Skip to main content

உங்கள் பயணங்களை மறக்க முடியாததாக மாற்றும் ரம்மியமான 6 ரயில் வழித்தடங்கள்!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

six beautiful Mountain railways of India

 

இந்தியாவின் பொம்மை அல்லது மலை ரயில்கள் என்பவை, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் மலைப் பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஐந்து ரயில்வே பாதைகளைக் குறிக்கும்.

 

இந்த ரயில் பயணங்கள், மலைகள் மற்றும் அழகான பள்ளத்தாக்குகள் வழியாகச் செல்லும்போது, மிகச் சிறந்த அனுபவங்களை நமக்கு வழங்குகின்றது.

 

இந்தப் பொம்மை ரயில்கள் மற்ற இந்திய ரயில்களை விட சிறியதாக இருந்தாலும், விண்ணை முட்டும் அளவிற்கு அமைத்துள்ள அழகிய மலைகள், கண்ணுக்கெட்டும் தூரம் வரை அடர்ந்த வனங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றை ரசிக்க வைப்பதோடு, நம் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் பயணங்களையும் வழங்கி வருகிறது. இப்படியான சில ரசிக்க வைக்கும் ரயில் பாதைகள் குறித்து இப்பகுதியில் அறிவோம். 

 

six beautiful Mountain railways of India

 

டார்ஜிலிங் இமயமலை ரயில்வே, மேற்கு வங்கம்:

 

ஆங்கிலேயர் காலத்திலேயே, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக வர்ணிக்கப்பட்ட டார்ஜிலிங் மலை வாசஸ்தலம், மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது. டார்ஜிலிங் இமயமலை ரயில்வே என்று சொல்லப்பட்டாலும், இது டார்ஜிலிங் பொம்மை ரயில் என்றே அன்புடன் அழைக்கப்படுகிறது.

 

இந்த ரயில் பாதை (1881) ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது குறுகிய ரயில் பாதையாக இருப்பினும், அழகிய பள்ளத்தாக்குகள் மற்றும்  மலைகள் வழியாகச் செல்லும் இந்த ரயில் பயணம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இது, ஐந்து பெரிய பாலங்களையும் 450 -க்கும் அதிகமான சிறு பாலங்களையும் 870-க்கும் மேற்பட்ட வளைவுகளையும் கடந்து செல்கிறது.

 

இன்று இந்தியாவில் மீதமுள்ள சில நீராவி எஞ்ஜின்கள் கொண்ட ரயில்களில் இதுவும் ஒன்று. சிலிகுரி, குர்சியோங் மற்றும் கூம் வழியாக டார்ஜிலிங் வரை 80 கி.மீ. தூரம் வரை கடந்து செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடம்தான் கூம். இந்த ரயில் பாதை 1999 - ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

six beautiful Mountain railways of India

 

கல்கா-சிம்லா மலை ரயில்வே, இமாச்சல பிரதேசம்:

 

இமாச்சலப்பிரதேசம் எப்போதுமே, ஒரு சுற்றுலாத் தலத்தின் மிகப்பெரிய மையமாக இருந்து வருகிறது. இங்கு அமைந்துள்ள கல்கா - சிம்லா பொம்மை ரயில் பயணம், 20 ரயில்வே நிலையங்கள், 103 சுரங்கங்கள், 800 பாலங்கள், மற்றும்  900 வளைவுகள் ஆகியவற்றுடன் 96  கிலோமீட்டர் (60 மைல்களுக்கு) கடந்து செல்லும். இந்த ரயில் பயணத்தை முடிக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆகும்.  

 

குறிப்பாக, கடைசி சுரங்கப்பாதை, அதாவது, 103வது பாதை ஒரு பேய் சுரங்கப்பாதை என்று நம்பப்படுகிறது. இது இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையாகக் கருதப்படுகிறது. நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய் மதிப்பிற்கும், இந்த ரயில் பயணம் நிச்சயமாக  ஓர் மறக்க முடியாத அனுபவத்தை நமக்குத்  தருகிறது.

 

six beautiful Mountain railways of India

 

மாதெரன் மலை ரயில்வே, மகாராஷ்ட்ரா:

 

மாதெரன் பொம்மை ரயில் முதன் முதலில் 1907 ஆம் ஆண்டு தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த வழித்தட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து இல்லாததால், பசுமையான நிலப்பரப்பில், மாசு இல்லாத பயணத்தை நீங்கள் மேற்கொள்ள முடியும்.

 

மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு நடுவில் நேராலில் இதன் பயணம் தொடங்குகிறது. இந்த ரயில் பயணம் சுமார் இரண்டரை மணி நேரம் எடுக்கும். நேராலில் இதன் தொடக்கத்திலிருந்து, 20 கிலோமீட்டர் (12 மைல்) நீளமுள்ளதாக இருந்தாலும், மாதெரனுக்கு செல்லும் வழியிலேயே மலை உச்சியை அடைய, மெதுவாக ஒரு ஜிக்சாக் முறையில் வலம் வர வேண்டும். அதேசமயம், அதன் பாதை மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான பள்ளத்தாக்குகள் வழியாக அமைத்திருக்கும். இந்த ரயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியான ஓர் அனுபவமாகும்.

 

six beautiful Mountain railways of India

 

நீலகிரி மலை ரயில்வே, தமிழ்நாடு:

 

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த நீலகிரி மலை ரயில்வே, நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இது 2005ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது. இந்த தளம் பின்னர் இந்தியாவின் மலை ரயில்வே என அறியப்பட்டது.

 

இந்த ரயில் பயணம், மேட்டுப்பாளையத்திலிருந்து தொடங்கி கூனூர் வழியாக ஊட்டி வரை உங்களை 46 கிலோமீட்டர் (28.5 மைல்) பாதையில் அழைத்துச் செல்லும். இது, 250க்கும் மேற்பட்ட பாலங்கள் (32 பெரியவை உட்பட) மற்றும் 16 சுரங்கங்கள் வழியாகக் கடந்து செல்கிறது. எனவே, இப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும்போது குன்னூரில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் என்கின்றனர்.

 

இந்த நீராவி இன்ஜின் மலை ரயில், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை 16 பெரிய பாலங்கள், 32 சிறு பாலங்கள், 15-க்கும் மேற்பட்ட குகைகளுக்குள் நுழைந்து கடந்து செல்லும்.

 

சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இருப்பினும், கடந்த 2020ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகக் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகளே வந்து சென்றனர். 

 

six beautiful Mountain railways of India

 

காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில்வே, இமாச்சல பிரதேசம்:

 

இந்தியாவில் 1929 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட மிக நீளமான கடைசி மலை ரயில் பாதை ஆகும். இதன் ரயில் பயணம் இந்தியாவின் மற்ற பொம்மை ரயில்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், இது இரண்டு சுரங்கங்கள் வழியாக உங்களை அழைத்துச் செல்லும்.

 

இந்த ரயில் பாதையின் முழு பயணமும் சுமார் 10 மணி நேரம் ஆகும். அதன் நீளமான பாதையானது பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட்டில் இருந்து இமாச்சலப்பிரதேசத்தில் ஜோகிந்தர் நகர், காங்க்ரா (தர்மசாலா அருகில்) மற்றும் பாலம்பூர் வழியாக 164 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

 

இந்த ரயில் பயணமானது, இயற்கை அழகு மிகுந்த ரயில்வே கிராமங்கள் மற்றும் பசுமையான பண்ணைகள் வழியாகக் கடந்து செல்கிறது. இது ஒரு மறக்கமுடியாத உள்ளூர் அனுபவமாகும்.

 

எனவே, நீங்கள் ரயில் பயணங்கள் மூலம் சுற்றுலா செல்ல விரும்பினால் இந்தியாவில் உள்ள மேற்கூறிய 6 சுவாரஸ்யமான ரயில் பயணங்களைத் தேர்வு செய்து உங்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று மகிழலாம்.