Advertisment

தங்கத்தை விட வெள்ளி பெரியதா ?

நம்மவர்களிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால் அந்த வேலையை ஒரு சிலர் முட்டாள் தனமாக செய்வார்கள், ஒரு சிலர் புத்திசாலித்தனமாக செய்வார்கள் இன்னும் ஒரு சிலர் சாதுர்யமாக செய்வார்கள் .சாதுர்யத்தின் கையில் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை என்ன செய்ய வேண்டும் என்பது சாமர்த்தியத்திற்குத் தெரியும்.அதேநேரத்தில் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது சாதுர்யத்திற்குத் தெரியும். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசமாகும். எனவே சாமர்த்தியமாக இருப்பதைக் காட்டிலும் சாதுர்யமாக இருப்பதே சரியானதாக நம்பப்படுகிறது.கடுமையாக உழைப்பதாலும், திட்டமிடுதலாலும் மட்டுமே முன்னேற்றம் அடைந்துவிட முடியாது. அதனை புத்தி சாதுர்யத்துடன் செயல்படுத்தும் திறன் வேண்டும்.

Advertisment

talent workers

கிராமம் ஒன்றில் அறிஞர் ஒருவர் இருந்தார். மன்னரே நிதிவிவகாரம் குறித்து அவரிடம் கருத்துக்களைக் கேட்பார் என்றால் அவரின் அறிவைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.அக்கிராமத் தலைவர் ஒருநாள் அறிஞரிடம், நீங்கள் பெரிய அறிஞர் என்று நாடே போற்றுகிறது. மன்னரும் கூறுகிறார். ஆனால் உங்கள் பையனோ அடி முட்டாளாக இருக்கிறானே என்று கிண்டலாகக் கூறினார்.அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவென்று விளக்கமாக சொன்னால் தானே புரியும் என்றார் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டில் மதிப்பு கூடியது எது என்று உங்கள் பையனிடம் கேட்டதற்கு வெள்ளி என்று பதில் சொல்கிறான் என்றார் தலைவர். இது அறிஞரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது மகன் அவ்வளவு முட்டாளா என்ன? தங்கத்திற்கும் வெள்ளிக்கும் உள்ள மதிப்பு கூட அவனுக்குத் தெரியாதா என்ன? என்று மனதிற்குள் எண்ணி வருத்தமுற்றார்.வீட்டிற்குச் சென்ற அறிஞர் மகனை அழைத்து, தங்கம், வெள்ளி இவை இரண்டிலும் அதிக மதிப்பானது எது? என்று கேட்டார்.உடனே அவன், தங்கம் என்று பட்டென்று கூறினான்.மகன் சரியான பதிலைச் சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் ஊர்த் தலைவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது குழப்பமாக இருந்தது.அப்புறம் எதற்காக தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று தப்பாகப் பதில் சொன்னாய்? என்று கேட்டார்.

நான் பள்ளிக்குச் செல்லும்போது கையில் தங்க நாணயம் ஒன்றையும், வெள்ளி நாணயம் ஒன்றையும் வைத்துக் கொண்டு தலைவர் என்னை அறிஞரின் மகனே இங்கே வா என்று கிண்டலாக அழைப்பார். இந்த இரண்டில் எது மதிப்பு அதிகமானதோ அதை நீ எடுத்துக் கொள் என்பார். உடனே நான் வெள்ளியை எடுத்துக் கொள்வேன். அவரும், அவரைச் சுற்றி இருப்பவர்களும் என்னைப் பார்த்துக் கிண்டலும் கேலியுமாக சிரிப்பார்கள். ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொண்டு திரும்பிடுவேன். ஓராண்டாக இந்தக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது. என்னிடம் வெள்ளி நாணயங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒருவேளை நான் தங்கக் காசை எடுத்திருந்தால், அந்த விளையாட்டை அத்துடன் அவர் முடித்துக் கொண்டிருப்பார். எனக்கு இவ்வளவு காசுகள் கிடைக்காமல் போயிருக்கும் என்றான்.தனது மகனின் புத்தி சாதுர்யத்தை நினைத்து அளவற்ற மகிழ்ச்சியில் திகைத்துத் திளைத்தார் அறிஞர்.அறிஞர்கள் சிலர் முட்டாள்களாக வேடமணிந்திருப்பார்கள். அது அவர்களின் புத்தி சாதுர்யமாகும். அவர்களை உண்மையிலேயே முட்டாள்கள் என்று கருதினால் நாம்தான் முட்டாள்கள்.

workers life monday motivation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe