Skip to main content

தங்கத்தை விட வெள்ளி பெரியதா ?

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

நம்மவர்களிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால் அந்த வேலையை ஒரு சிலர் முட்டாள் தனமாக செய்வார்கள், ஒரு சிலர் புத்திசாலித்தனமாக செய்வார்கள் இன்னும் ஒரு சிலர் சாதுர்யமாக செய்வார்கள் .சாதுர்யத்தின் கையில் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை என்ன செய்ய வேண்டும் என்பது சாமர்த்தியத்திற்குத் தெரியும்.அதேநேரத்தில் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது சாதுர்யத்திற்குத் தெரியும். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசமாகும். எனவே சாமர்த்தியமாக இருப்பதைக் காட்டிலும் சாதுர்யமாக இருப்பதே சரியானதாக நம்பப்படுகிறது.கடுமையாக உழைப்பதாலும், திட்டமிடுதலாலும் மட்டுமே முன்னேற்றம் அடைந்துவிட முடியாது. அதனை புத்தி சாதுர்யத்துடன் செயல்படுத்தும் திறன் வேண்டும். 
 

talent workers

 கிராமம் ஒன்றில் அறிஞர் ஒருவர் இருந்தார். மன்னரே நிதிவிவகாரம் குறித்து அவரிடம் கருத்துக்களைக் கேட்பார் என்றால் அவரின் அறிவைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.அக்கிராமத் தலைவர் ஒருநாள் அறிஞரிடம், நீங்கள் பெரிய அறிஞர் என்று நாடே போற்றுகிறது. மன்னரும் கூறுகிறார். ஆனால் உங்கள் பையனோ அடி முட்டாளாக இருக்கிறானே என்று கிண்டலாகக் கூறினார்.அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவென்று விளக்கமாக சொன்னால் தானே புரியும் என்றார் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டில் மதிப்பு கூடியது எது என்று உங்கள் பையனிடம் கேட்டதற்கு வெள்ளி என்று பதில் சொல்கிறான் என்றார் தலைவர். இது அறிஞரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது மகன் அவ்வளவு முட்டாளா என்ன? தங்கத்திற்கும் வெள்ளிக்கும் உள்ள மதிப்பு கூட அவனுக்குத் தெரியாதா என்ன? என்று மனதிற்குள் எண்ணி வருத்தமுற்றார்.வீட்டிற்குச் சென்ற அறிஞர் மகனை அழைத்து, தங்கம், வெள்ளி இவை இரண்டிலும் அதிக மதிப்பானது எது?  என்று கேட்டார்.உடனே அவன், தங்கம் என்று பட்டென்று கூறினான்.மகன் சரியான பதிலைச் சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் ஊர்த் தலைவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது குழப்பமாக இருந்தது.அப்புறம் எதற்காக தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று தப்பாகப் பதில் சொன்னாய்? என்று கேட்டார்.

நான் பள்ளிக்குச் செல்லும்போது கையில் தங்க நாணயம் ஒன்றையும், வெள்ளி நாணயம் ஒன்றையும் வைத்துக் கொண்டு தலைவர் என்னை அறிஞரின் மகனே இங்கே வா என்று கிண்டலாக அழைப்பார். இந்த இரண்டில் எது மதிப்பு அதிகமானதோ அதை நீ எடுத்துக் கொள் என்பார். உடனே நான் வெள்ளியை எடுத்துக் கொள்வேன். அவரும், அவரைச் சுற்றி இருப்பவர்களும் என்னைப் பார்த்துக் கிண்டலும் கேலியுமாக சிரிப்பார்கள். ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொண்டு திரும்பிடுவேன். ஓராண்டாக இந்தக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது. என்னிடம் வெள்ளி நாணயங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒருவேளை நான் தங்கக் காசை எடுத்திருந்தால், அந்த விளையாட்டை அத்துடன் அவர் முடித்துக் கொண்டிருப்பார். எனக்கு இவ்வளவு காசுகள் கிடைக்காமல் போயிருக்கும் என்றான்.தனது மகனின் புத்தி சாதுர்யத்தை நினைத்து அளவற்ற மகிழ்ச்சியில் திகைத்துத் திளைத்தார் அறிஞர்.அறிஞர்கள் சிலர் முட்டாள்களாக வேடமணிந்திருப்பார்கள். அது அவர்களின் புத்தி சாதுர்யமாகும். அவர்களை உண்மையிலேயே  முட்டாள்கள் என்று கருதினால் நாம்தான் முட்டாள்கள்.

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

‘16 வருடமாகப் பார்த்து வந்த வேலை நாளையிலிருந்து இல்லை’ - பணியாளர்கள் கவலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Trichy 120 sanitation workers sacked from tomorrow

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காகத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததைக் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.