Skip to main content

பயமுறுத்தும் கருப்பு பூஞ்சை; என்ன சொல்கிறது சித்த மருத்துவம்?

 

sivaraman

 

கரோனா தொற்று ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்தே இந்தியச் சமூகம் இன்னும் மீண்டுவராத நிலையில், கருப்பு பூஞ்சையும் மக்களை ஒருபுறம் பயமுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தாக்குதலுக்கு உள்ளான சிலர் மரணித்துள்ளதால் இந்த நோய் குறித்தான அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும், அதற்கான சிகிச்சையாக சித்த மருத்துவம் என்ன முன்வைக்கிறது என்பது குறித்தும் அறிய சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

கருப்பு பூஞ்சை என்பது பூஞ்சையின் நிறமல்ல. மியூகார் என்ற இனத்தைச் சேர்ந்த பூஞ்சை உடலுக்குள் நுழையும்போது அது பாதிப்பு உண்டாக்கும் செல்கள் செயல்திறனற்று அழுகி இறந்தவுடன் அவை கருமை நிறமாகின்றன. அதனால்தான் அதற்குக் கருப்பு பூஞ்சை என்று பெயர். மியூகார் மைக்கோசிஸ் என்ற பூஞ்சை  பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் உள்ளது. அது கரோனா பாதித்த நோயாளிகளை அதிகம் தாக்குகிறது என்பதுதான் தற்போதைய சூழலில் வருத்தமான விஷயம். கரோனா தொற்றுக்குள்ளாவோர்கள் தீவிர மருந்து எடுப்பதினாலும், மோனோகுளோனல் ஆண்டிபாடீஸ் எனச் சொல்லப்படுகிற நோய் எதிர்ப்பு ஆற்றலில் மாற்றம் செய்யக்கூடிய மருந்துகளை எடுப்பதினாலும் இந்தப் பூஞ்சை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என முதலில் சந்தேகிக்கப்பட்டது. 

 

ஆனால், கடந்த இருநாட்களாக இது குறித்தப் பார்வை மாறியிருக்கிறது. "இதே மருந்துகளை 20 ஆண்டுகாலமாக பயன்படுத்தியுள்ளோம். அப்போதெல்லாம் இது மாதிரியான பூஞ்சை நோய் தாக்கவில்லை" என அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்தக் கரோனா வைரஸின் மாற்றுரு மூக்கின் உட்புறத்திலுள்ள சைனஸ் பகுதியில் உள்ள ரத்த நாளங்களைச் சிதைக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதான் தற்போதைய சூழலில் அனைத்து மருத்துவர்களின் ஒருமித்த குரலாகவும் உள்ளது. சைனஸ் பகுதியில் உள்ள இரத்த நாளங்களைச் சிதைப்பதினால் சிதைவுபட்ட இறந்த நெக்ரோடிக் திசுக்களோடு காற்றில் உள்ள பூஞ்சைகள் கலந்து எளிதில் வளர்ந்துவிடுகின்றன. சாதாரணமாக  நம்முடைய சைனஸ் பகுதியில் அதுபோன்ற பாதிப்புகள் இல்லாததால் அந்த பூஞ்சை நம்மைத் தாக்குவதில்லை. இந்த சிக்கலுக்கான முழுக்காரணமும் கோவிட் கிருமித்தொற்றினாலேயொழிய கையாளும் மருந்துகளால் அல்ல. 

 

பூஞ்சை தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாகக் கவனித்துவிட்டால் மருந்துகளில் காப்பாற்றிவிடலாம். பூஞ்சை தாக்குதல் ஏற்பட்ட உடனேயே மூக்கடைப்பு ஏற்பட்டு கருப்பு நிறத்திலோ அல்லது பழுப்பு நிறத்திலோ கெட்ட துர்நாற்றத்துடன் திரவம் வழியலாம். அதைத் தவிர்த்து, ஒரு பக்க தலைவலி, ஒரு பக்க கண் சிவந்துபோதல், ஒரு பக்க கண் மேல்கீழ் இமைகள் பிதுங்குதல் ஆகியனவும் கருப்பு பூஞ்சை அறிகுறிகளாக கணிக்கப்பட்டுள்ளன. 

 

கரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் சுகாதாரம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாகக் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களைப் பார்க்க வேண்டும். அல்லது, வழக்கமாக நீங்கள் மருத்துவம் பார்க்கும் மருத்துவரைச் சந்திக்கவேண்டும். அவர்கள் பூஞ்சைகளுக்கு எதிரான மருந்துகளைக் கொடுத்து கட்டுப்படுத்திவிடுவார்கள். சித்த மருத்துவத்தில் கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்திட முடியும் என அந்த ஆய்வுகளுக்கும் தற்போதுவரை இல்லை.

 

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, இறந்துபோன திசுக்களின் மீது பூஞ்சை படிகிறது என்கிற அறிவியல் தெரியும்போது, திசுக்களில் இறப்பு நடக்காமல் இருப்பதற்கு ஆடாதொடை இலை கொடுக்கிறோம். அது ரத்தம் உறைந்துவிடாமலும் கசிந்துவிடாமலும் இருப்பதற்கு உதவியாக இருக்கும். நோய் எதிர்ப்பு குறைவதினால்தான் இது ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளதால் கசப்பு மற்றும் துவர்ப்பு மிக்க உணவுகளை எடுத்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். இன்றளவில் அதைத்தான் பரிந்துரைக்க முடிகிறது. இனி வரும்காலங்களில் நடைபெறும் ஆய்வுகளில் என்ன காரணத்தினால் இந்தத் தொற்று ஏற்படுகிறது என்பது விரிவாகத் தெரியவரும்போது என்ன மாதிரியான சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியும் என முடிவெடுக்கலாம். 

 

ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பூஞ்சை என்பது தொற்றல்ல. கரோனா வைரஸ்போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கெல்லாம் பரவாது. நம்முடைய வீட்டில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் மற்றொருவருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், கருப்பு பூஞ்சை விஷயத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டாலும் அடுத்த 15 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருந்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்த வேண்டும்.