Skip to main content

சத்யராஜ் மகள் பிரதமருக்கு எழுதிய கடிதம் என்னாச்சு?

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா கடந்த வருடம் ஜூலை மாதம் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

 

dhivya sathyaraj‘உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை பரிந்துரைக்கும்படி சில வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் என்னை அணுகி லஞ்சம் கொடுக்க முயற்சிக்கின்றன. அப்படி பரிந்துரைக்க முடியாது என்று சொன்னதால் கொலை மிரட்டல் விடுக்கின்றன. அங்கீகரிக்கப்படாத அபாயகரமான ஊட்டச்சத்து மருந்துகளை தடை செய்யவேண்டும்' என்று பிரதமருக்கு திவ்யா அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு வருடமாகியும் இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும்… ஃபார்மாசூட்டிகல் லாபி  டூ நியூட்ராசூட்டிகல் லாபி, இளம்பெண்களை குறிவைக்கும் ஸ்லிம்மிங் செண்டர்கள், இளைஞர்களைக் குறிவைக்கும் டுபாக்கூர் ஜிம்கள், மூன்றே மாதத்தில் நியூட்ரிஷியன் ஆகிவிடும் போலிகள் என ஏ டூ செட் தகவல்களையும் “ஊட்டச்சத்து எமன்…சாட்டையை சுழற்றிய சத்யராஜின் மகள்! ஷாக் ரிப்போர்ட்!” என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரையை எழுதியது நக்கீரன்… அந்த விரிவான கட்டுரை இதோ…

“உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்து மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும்படி மருந்துக்கம்பெனிகள் என்னை மிரட்டுகின்றன” என்று நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா பிரதமருக்கு அனுப்பிய புகார் கடிதத்தால்… ‘ஊட்டச்சத்து மருந்து’ என்னும் பெயரில் உலாவும் ஊழல்களும் அதனால் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளும் வெளிச்சத்துக்கு   வரத்தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்து, நாம் மேலும் தோண்ட ஆரம்பித்தோம்.

 

nutritionஃபார்மாசூட்டிகல் லாபி  டூ நியூட்ராசூட்டிகல் லாபி!

சாதாரண காய்ச்சலுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் வேதிப்பெயர் பேரசிட்டமால். உதாரணத்துக்கு, பால் என்பது வேதிப்பெயர். ஆனால், அதையே நிறுவனங்கள் தயாரித்து ஆவின், ஆரோக்கியா, ஜெர்சி என்று பெயர்களை சூட்டி விற்றால் அவை பிராண்ட் பெயர்கள். காய்ச்சலுக்கு தரமான பாரசிட்டமால் மாத்திரை என்றால் ‘கால்பால்’தான். கால்பால் என்பது பிராண்ட் பெயர். ஆனால், பல்வேறு புதிய மருந்து நிறுவனங்கள் கால்பால் மாத்திரையை காப்பியடித்து ‘பேரசிப்’ போன்ற பெயர்களில் (பிராண்ட்) விற்பனை செய்கின்றன. விலையும் கூடுதலாக இருக்கும். தரமும் கால்பால் மாத்திரை அளவுக்கு இருக்காது. இப்படிப்பட்ட,  புதிய மருந்துக் கம்பெனிகள் தங்களது விற்பனை   பிரதிநிதிகளை டாக்டர்களிடம் அனுப்பி... ‘எங்கள் நிறுவனத்தின் மருந்து மாத்திரைகளை நோயாளிக்கு (பரிந்துரை செய்தால்) எழுதிக்கொடுத்தால் அதற்கேற்றபடி உங்களுக்கு கமிஷன் தருகிறோம்’ என்று டீல் பேசும். அதனால்தான், பல மருத்துவர்கள் தேவையற்ற விலை அதிகமான மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுக்கிறார்கள். இதற்காக,  அடிக்கடி ஸ்டார் ஹோட்டல்களில் பார்ட்டிகளும களைகட்டும். வெளிநாடுகளுக்கு ‘ஜாலி டூர்’களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். எந்த டாக்டர் எதில் ‘வீக்’காக இருக்கிறாரோ அதை வைத்து கரெக்ட் செய்து தங்களின் மருந்துகளை விற்றுவிடும். இதுதான் ஃபார்மாசூட்டிகல் (Pharmaceutical) லாபி. அதாவது, மருந்துக்கொள்ளை.

‘உணவே சாப்பிடவேண்டாம்… இந்தப் பவுடரை சாப்பிட்டால் ஒரு மாதத்திலேயே இலியானா மாதிரி ஒல்லியாகிவிடலாம்… வேறு பவுடரை சாப்பிட்டால் அர்னால்ட் மாதிரி கட்டுமஸ்தான உடல் வந்துவிடும்… உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் ஐன்ஸ்டீனின் மூளை வந்துவிடும்.   உயரமாகிவிடுவான்… எந்த எக்ஸாம் வெச்சாலும் அவன்தான் ஃபர்ஸ்ட்… உலக அறிவு மொத்தமும் உங்கள் குழந்தைக்கு வந்துவிடும்… உலக சாம்பியன் ஆகிவிடுவான்… என்றெல்லாம் புருடா விட்டுக்கொண்டு சந்தைகளில் உலாவும் பவுடர்களை விற்று கொள்ளையடிப்பதுதான் நியூட்ராசிட்டிகல் (Nutraceutical) லாபி. அதாவது, ஊட்டச்சத்து மருந்துக் கொள்ளை. இவர்களது, டார்கெட்டே குழந்தைகள் நல மருத்துவர்கள், சர்க்கரை வியாதி நிபுணர்கள்,  சிறுநீரக மருத்துவர்கள், இதயநல மருத்துவர்கள்,  குடல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்,  நியூட்ரிஷியனிஸ்ட் அண்ட் டயட்டீஷியன் எனப்படும் ஊட்டச்சத்து நிபுணர்கள், உடல் எடையை குறைப்போம்-கூட்டுவோம் என்று சொல்லிக்கொண்டு திரியும் ‘ஷார்ட் ரூட்’ ஸ்லிம்மிங் செண்டர்கள்,  உடனடியாக சிக்ஸ் பேக்… எய்ட் பேக்குகளை உருவாகவேண்டும் என்றால் இந்த புரோட்டின் பவுடரை சாப்பிடுங்க’ என்று உசுப்பேற்றி உடம்பை ரணகளமாக்கும் டுபாக்கூர் ‘ஜிம்’கள்தான்.  இவர்களின், டார்கெட் யார் தெரியுமா? ஏமாளிகள் அண்ட் நோகாமல் நொங்கு திங்க நினைக்கும் சோம்பேறிகள்!

 

workoutஇளம்பெண்களை குறிவைக்கும் ஸ்லிம்மிங் செண்டர்கள்!

ஒபிசிட்டி ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் நிறுவனத்தலைவரும் குடல் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவீந்திரன் குமரனோ,

“ 'எனக்கு வீட்டுல மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க டாக்டர். எவ்ளோ சீக்க்க்க்க்கிரம் ஒடம்பைக் குறைச்சி ஸ்லிம்மாக்கணுமோ அவ்ளோ சீக்கிரம் ஆகணும். ஏதாவது, ட்ரீட்மெண்ட் கொடுங்க ப்ளீஸ்’ என்று படபடப்போடு வருகிறவர்களுக்கு மருத்துவரீதியாக உடனடியாக உடம்பைக் குறைப்பதற்கு சாத்தியம் குறைவு. ஏன்னா, உடம்பை குறைக்கிறதுக்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிதான் முழுமையான தீர்வு. எந்த மருந்து மாத்திரையாலும் உடனடியாக உடம்பை ஸ்லிம்மாக்க முடியாதுன்னு டாக்டர்கள் சொன்னதும் இளம்பெண்கள் உடனே ஓடுவது ஸ்லிம்மிங் செண்டர்களை நோக்கித்தான். ஸ்லிம்மிங்க் செண்டர்களோ மருத்துவமனைக்கான எந்த அனுமதியும் வாங்கியிருக்கமாட்டாங்க. இன்னும், சொல்லப்போனா முடிதிருத்தும் கடையில் முடிநடும் ட்ரீட்மெண்ட் பண்ணி சென்னையில ஒரு மருத்துவ மாணவரே இறந்துபோனாரே அந்த மாதிரி, ஸ்லிம்மிங் செண்டர்களில் உடனடியா உடல் எடையை குறைக்க சில புரோட்டின் பவுடர்களை, ஹெல்த் ட்ரிங்குகளையும் ஊட்டச்சத்து மருந்து என்கிற பெயரில் தகுதியில்லாதவர்கள் பரிந்துரை செய்யுறாங்க.

 

ravindran kumaranஇந்த மாதிரியான ஊட்டச்சத்து மருந்துகள் உடம்புல இருக்கிற நீரை வெளியேற்றி ஆரம்பத்துல உடல் எடையை குறைக்கும். ஆனா, போகப்போக உடலுக்கு ஆபத்தை உண்டாக்கி உயிருக்கே உலைவைத்துவிடும். ஏன்னா, ஆம்வே எப்படி டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி தன்னோட தயாரிப்புகளை விற்கிறதோ அதேமாதிரி பல ஹெல்த் ஃபுட் நிறுவனங்கள் ஏஜண்ட்களிடம் டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி விற்கவைக்கின்றன. அதைத்தான் ஸ்லிம்மிங் செண்டர்களில் மூளைச்சலைவை செய்து விற்பனை செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு என்பது வெறும் உணவுப்பழக்கவழக்கத்தால் மட்டுமே அல்ல.  மன அழுத்தம், தைராய்டு போன்ற பல்வேறு காரணங்களாலும் ஏற்படலாம். அதை, கண்டுபிடித்து சரியான சிகிச்சை செய்துகொள்ளவேண்டுமே தவிர ஸ்லிம்மிங் செண்டர்களில் போய் ஆபத்தை விலைக்கு வாங்கக்கூடாது.”என்று எச்சரிக்கிறார்.

 

 


இளைஞர்களை குறிவைக்கும் டுபாக்கூர் ஜிம்கள்!

இந்திய ஊட்டச்சத்து நிபுணர்கள் கூட்டமைப்பின் (Indian Dietetic Association) சென்னை தலைவரும் தமிழக அரசின் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் பணிபுரிபவருமான பிரபல ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் நம்மிடம்,

“ஜிம்முல சேர்ந்த கொஞ்ச நாள்லேயே சிக்ஸ்பேக்… எய்ட் பேக் வேணுமா? பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷன் மாதிரி மசில்ஸ் வேணும்னா இந்த பவுடரை சாப்பிடுங்க’என்று சில தகுதியில்லாத நியூட்ரிஷியன்களும் தகுதியில்லாத ஜிம் ட்ரெயினர்களுமே இளைஞர்களுக்கு கொடுத்து உயிருக்கு உலைவைக்கிறார்கள். இதைவிடக்கொடுமை, விளையாட்டு வீரர்களும்கூட இதுபோன்ற ஹெல்த் ஃபுட், ஹெல்த் ட்ரிங்குகளை நம்பி சாப்பிட்டு ஏமாந்துபோகிறார்கள். என்னதான், இருந்தாலும் நம்ப உடம்புக்கு ஐந்துவிதமான சத்துக்கள் தேவை. அந்த ஐந்துவிதமான சத்துக்களும் இயற்கையா சாப்பிடுற உணவு வகைகளிலேயே இருக்கு. ஆனா, அதை சாப்பிட சோம்பேறித்தனப்பட்டுக்கிட்டு பலர் இந்தமாதிரி கெமிக்கல் கலந்த ஊட்டச்சத்து மருந்துகளை சாப்பிட ஆரம்பிச்சுடுறாங்க. புரோட்டின் பவுடர்களை சரியான நியூட்ரிஷியன்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளும்போது கிட்னி ஃபெயிலியரில்தான் முடியும்.

  meenakshi bajajஅதேமாதிரி, எல்லாவிதமான ஊட்டச்சத்து மருந்துகளுமே ஆபத்தானதுன்னு சொல்லமுடியாது. உதாரணத்துக்கு, சர்க்கரைவியாதியுள்ளவர் கோமா ஸ்டேஜுக்கு போயிடுறாரு. அவருக்கு மூக்கு வழியா ட்யூப் போடப்பட்டிருக்கு. ஆகாரம் கொடுக்கணும். பால், கஞ்சி, சூப், ஜூஸ், இளநீர்ன்னு இயற்கை உணவுகளை கொடுக்கும்போது அந்த நோயாளிக்கு தேவையான மைக்ரோ நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்காது. அத்தனை சத்துக்களையும் ஒரே நேரத்துல நோயாளிக்கு கொடுக்கணும்னா என்ன செய்யணும்? அதுக்கேற்ற ஊட்டச்சத்து மருந்துகளைத்தான் அளவா கொடுக்கவேண்டியிருக்கும். அப்போதான், ஊட்டச்சத்து நிபுணரின் சரியான பரிந்துரை தேவைப்படுகிறது. சிறுநீரகம் பாதித்தவர்கள், வெண்டிலேட்டர், ஐ.சி.யூ.விலுள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை கொடுக்கவேண்டியிருக்கும். ஆனால், அப்படிப்பட்ட சூழலில் எந்த பிராண்டை நியூட்ரிஷியன்கள் பரிந்துரை செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். எது குவாலிட்டியானதோ எது  இந்திய உணவு தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India) அனுமதி பெற்றதோ அந்த பிராண்டை பரிந்துரை செய்யவேண்டும். அப்படி, அனுமதி வாங்காத பிராண்டுகளை பரிந்துரை செய்யும்போதுதான் ஆபத்து ஏற்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் ஊட்டச்சத்து மருந்துகளுக்கு யு.எஸ். எஃப்.டி.ஏ. (Food and Drug Administration) அனுமதி வாங்கியிருக்கிறதா என்று பார்த்து நோயாளிக்கு பரிந்துரை செய்யவேண்டும்.

மூன்றே மாதத்தில் நீங்களும் நியூட்ரிஷியன்தான்!

மூன்றே மாதத்தில் இங்கிலீஷ் கற்றுக்கொள்ளலாம்… ஹிந்தி கற்றுக்கொள்ளலாம் என்று புத்தகங்கள் விற்குமே… அதேபோல், பல ஸ்லிம்மிங் செண்டர்களில் மூன்றே மாதங்களில்… ஆறே மாதங்களில் நியூட்ரிஷின்கள் ஆகலாம் என்று விளம்பரம் கொடுத்து கோர்ஸுகளை நடத்தி சர்டிஃபிகேட்டுகளையும் கொடுத்துவிடுகிறார்கள். இதனால், எந்தவிதமான தகுதியுமில்லாமல் நியூட்ரிஷியனிஸ்ட் ஆகிவிடுகிறார்கள் பலரும். பி.எஸ்.சி., நியூட்ரிஷியன் படிப்பை முடித்துவிட்டு எம்.எஸ்.சி.யும் படித்துவிட்டு முறையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வரும் நியூட்ரிஷியன்களே சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற ஊட்டச்சத்து மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரை செய்துவிடுகிறார்கள். அப்படியிருக்க, எந்தவிதமான தகுதியுமில்லாத சர்டிஃபிகேட் கோர்ஸுகளை படித்துவிட்டு நியூட்ரிஷியனிஸ்ட் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படியிருப்பார்கள்?

 

 


இப்படிப்பட்டவர்களை கட்டுப்படுத்த, முறைப்படுத்த, ஒழுங்குபடுத்த எந்த விதிமுறையும் இல்லை. காரணம், அலோபதி டாக்டர்களுக்கான மெடிக்கல் கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், நர்ஸிங் கவுன்சில்போல நியூட்ரிஷியன்களுக்கு இந்தியாவில் கவுன்சிலும் இல்லை. யாரிடம் போய் புகார் கொடுப்பது? யார் நடவடிக்கை எடுப்பது? வெளிநாடுகளில் எல்லாம் பதிவுசெய்யப்பட்ட முறையான பயிற்சி (registered dietitian training) இல்லாமல் நியூட்ரிஷியன்களாக பணிபுரியவே முடியாது. அதனால்தான், எங்களது கூட்டமைப்பு மூலம் முறையாக நியூட்ரிஷியன் கோர்ஸ் முடித்தவர்களுக்கு பயிற்சி கொடுத்து தேர்வு நடத்தி சர்டிஃபிகேட்டுகளையும் வழங்குகிறோம். ஆனால், சிலர் ஆன்லைனிலேயே நியூட்ரிஷியன் கோர்ஸுகளை முடித்துவிட்டு  ஊட்டச்சத்து நிபுணர்களாகிவிடுகிறார்கள்”என்கிறார் வேதனையோடு.

 

 


தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் துணைப் பொதுசெயலாளர் பி.எம். முரளியோ,  “ஊட்டத்து மருந்து என்பது மருந்துத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. பிரைஸ் கண்ட்ரோலில் வராததால் இஷ்டத்துக்கு விலைவைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். தரத்தோடு விலையும்கட்டுப்படுத்த வேண்டும்” என்கிறார் கோரிக்கையாக.

ஊட்டச்சத்து மருந்து எமன்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய சத்யராஜின் மகள் திவ்யா அத்துறையின் உண்மைகளையும் அம்பலப்படுத்திவிட்டார். ஓராண்டாகியும் ஒரு அடி முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என்றுதான் தெரிகிறது. மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும், குறுக்கு வழி எப்பொழுதும் ஆபத்து என்பதை உணரவேண்டும். 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்