Advertisment

குழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்? ஆய்வில் வெளிவந்த உண்மைகள்!

saf

Advertisment

இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர்.

இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இயற்கை முறையில் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம்.

Advertisment

வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது.

‘இனப்பெருக்க உயிரியல் உட்சுரப்பியல்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதிலும் குழந்தையின்மை பிரச்சனையால், 15 சதவீத தம்பதிகள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் முத்திரைப் பதித்து வருகின்றனர். இருப்பினும் குழந்தையின்மையால் ஆண்களைவிட, பெண்களே அதிக அளவில் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குழந்தையின்மைக்கு, உடல் ஆரோக்கியம் சார்ந்த இந்த 5 விஷயங்கள் முக்கியக் காரணமாக அமைகின்றன.

உடற்பருமன்:

கருத்தரித்தலில் உங்கள் உடற்பருமன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடற்பருமன் அதிகரிப்பு அல்லது உடற்பருமன் குறைப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இவை கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். இவை சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். எனவே, உங்கள் உடல் எடை சமநிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம்.

உடற்பருமன் அதிகரிக்க முக்கியக் காரணம், உணவுமுறை. குண்டாவதாக கருதி காலை உணவைத் தவிர்ப்பது, தவறான எண்ணம். அதேபோன்று, அளவில்லா உணவு உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பது மட்டுமின்றி உடல் எடையினை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், மரபியல் ரீதியாகவே உடற்பருமனாக இருப்பவர்களுக்கு குழந்தையின்மைப் பிரச்சனை அரிதாகவே ஏற்படுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு:

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும், இது கருத்தரிக்கும் வாய்ப்புகளைப் பாதிக்கும். எனவே, தினமும் உணவில் பச்சைநிறக் காய்கறி அல்லது கீரை வகைகளை சுழற்சி முறையில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த உணவுகள் கருவுறுதலுக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் சில பைட்டோநியூட்ரியன்ட்டுகளை வழங்கும் திறன் கொண்டவை. இரத்த ஓட்டத்தில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பின், அண்டவிடுப்பின் மலட்டுத்தன்மையின் அபாயத்தைக் குறைக்கும்.

ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல்:

புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமின்றி, உங்கள் கருவுறுதலையும் பாதிக்கும். ‘அமெரிக்கன் சொசைட்டி ஃபார் ரிப்ரொடக்டிவ் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சிகரெட் புகையில் காணப்படும் ரசாயனங்கள் பெண்களின் கருமுட்டை சிதைவு விகிதத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வில்,அதிகப்படியாக ஆல்கஹால் குடிக்கும் பெண்களே, குழந்தையின்மைக் குறைபாடுகளை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மன அழுத்தம்:

சில சமயங்களில், உடல்நிலை சரியாக இருந்தாலும், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் கருத்தரித்தல் தாமதமாகும். மன அழுத்தம் என்பது, இன்றைய நவீன காலகட்டத்தில் முக்கியப் பிரச்சினையாக மாறிவிட்டது. குறிப்பாக, மன அழுத்தம் இனப்பெருக்க ஹார்மோன்களைப் பாதிப்பதால் கருத்தரித்தல் தடைப்படும்.

குழந்தையின்மையால் ஏற்படும் மன அழுத்தம் பெண்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதுபோன்ற சூழலில், யோகா மற்றும் நடை பயிற்சி செய்வது அவசியம். குறிப்பாக, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் வாழும் பெண்களே மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் பாதிப்படைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்மோன் சமநிலை பிரச்சனை:

இன்றைய பெண்கள் கருத்தரிக்கமிகப்பெரிய தடையாக இருப்பவற்றில் மிக முக்கியமானது `பிசிஓடி’ (PCOD) ஆகும். இளம் பெண்களிடையே பரவலாகக் காணப்படும் இந்தப் பிரச்சனைக்கு உடல் எடை அதிகரிப்பு முக்கியக் காரணமாக இருக்கிறது.இதனை முறையான நடைப்பயிற்சி, உணவு பழக்கங்கள் மூலம் சரி செய்யலாம். முடியாத பட்சத்தில் மாத்திரைகள் மூலம் சரியாக்கலாம்.

இன்றைய உணவுப் பொருட்கள் அனைத்திலும், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் அதிகமிருக்கின்றன. எனவே, தாய்மையடைய நினைப்பவர்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.

lifestyle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe