Skip to main content

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? - சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் விளக்கம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

 

Renal surgeon health tips

 

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. சரியான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிறுநீரகக் கற்கள் குறித்தும், நம்மை நாம் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நமக்கு விளக்குகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் அவர்கள்...

 

வெயில் காலங்களில் சிறுநீர் வெளியேறுவதில் பலருக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதும் இந்தக் காலத்தில் அதிகம் நடக்கிறது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது தான் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம். சிறுநீர் தொடர்ந்து மஞ்சளாக வெளியேறினால் நாம் குறைவான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். நம் கையில் இருக்கும் முக்கியமான ஆயுதமே தண்ணீர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

உணவில் அதிகமான உப்பு சேர்ப்பதும் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். உணவில் குறைவான அளவு உப்பையே சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். புரோட்டின் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருமுறை சிறுநீரகத்தில் கற்கள் வந்துவிட்டால் அவருக்கு மீண்டும் கற்கள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. 

 

பின்பகுதியில் வலி ஏற்படுவது தான் இதற்கு முக்கியமான அறிகுறி. சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், ரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஸ்கேன் செய்வதன் மூலம் சிறுநீரகக் கற்களைக் கண்டறியலாம். சிடி ஸ்கேன் இதற்கான சிறந்த பரிசோதனை முறை. கற்களின் அளவுக்கு ஏற்ப மருந்துகளின் மூலமாகவோ, அறுவை சிகிச்சை மூலமாகவோ இதை குணப்படுத்தலாம். பெரும்பாலும் அறுவை சிகிச்சை இல்லாமல், லேசர் சிகிச்சை மூலமாகவே சிறுநீரகக் கற்களை அகற்றி விடலாம்.

 

பெரிய கற்களாக இருந்தால் ஷாக் ட்ரீட்மெண்ட் மூலம் உடைக்க முடியும். அறுவை சிகிச்சை என்பது அனைவருக்கும் தேவைப்படாது. இப்போது சிறுவயது குழந்தைகளுக்குக் கூட சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகின்றன. வெளி உணவுகளை அதிகம் உண்ணுதல், அதிகம் உப்பு சேர்த்துக்கொள்ளுதல், குறைவான தண்ணீர் குடித்தல் ஆகியவையே இதற்குக் காரணம். பெரியவர்களுக்குச் செய்யும் அதே சிகிச்சைகள்தான் குழந்தைகளுக்கும் செய்யப்படும். இளநீர், வாழைத்தண்டு போன்றவை சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கும். அனைவரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.