உலகம் முழுவதும் கரோனா பீதி உச்சத்தில் இருக்கின்றது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் ஐரோப்பிய நாடுகளை தீவிரமாக பாதித்து வருகின்றது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு உச்சத்தில் இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை 600க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இதன் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பெரும்பாலானவர்கள் தடை உத்தரவை மீறி வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு செல்பவர்களை ஆந்திரா உள்ளிட்ட சில மாநில போலீசார் லத்தியால் அடித்து விரட்டுகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் தன்னுடைய காரை நிறுத்தியதால், போக்குவரத்து காவலரின் கையை இளம்பெண் ஒருவர் கடித்துள்ளார். மேலும் தன் கையில் இருந்த காயத்தை கைகளால் தேய்ந்து அந்த இரத்தத்தை அவர் மீது பூசியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் செயலுக்கு அனைவரும் இணையதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.