Skip to main content

சிலரிடம் நாம் செவிடராக நடந்துகொள்ள வேண்டும்... யாரிடம் தெரியுமா?

Published on 07/02/2019 | Edited on 09/02/2019

இன்றைய சமூகத்தில் எதிர் மறையான சிந்தனைகள் அதிகமாக வந்து கொண்டு இருக்கின்றன .அதுவும் சமூக வலைதளத்தில் நம்மளுடைய எதிர் மறையான கருத்துகளும் வன்மமும் அதிகமாக காணப்படுகிறது .‘தீயதைப் பார்க்காதீர்கள்; தீயதைப் பேசாதீர்கள்; தீயதைக் கேட்காதீர்கள்’ என்பார்கள். இதில் இன்னொன்றையும் -அதாவது தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிற மாதிரியான எந்தப் பேச்சையும் கேட்காதீர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். இன்று அவநம்பிக்கை அளிக்கும் பேச்சுக்கள் தான் நம்மவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. ‘‘உங்க பையனை மெடிக்கலில் சேர்க்க வேண்டியது தானே?’’‘‘ஆமா, இவன் படிக்கிற படிப்புக்கு பாஸானா போதாதா!’’இப்படித் தனது மகனைப் பற்றி அவநம்பிக்கையோடு பேசும் அப்பாக்கள்தான் இன்று அதிகமாக இருக்கிறார்கள்.அதிகாரியிடம் ஏதாவது ஒரு புதிய யோசனையை உதவியாளர் தெரிவித்தால், ‘‘அதெல்லாம் சரிப்பட்டு வராது’’ என்று உடனேயே தட்டிக்கழிப்பார். இப்படி எந்தவொரு செயல்பாட்டிலும் அவநம்பிக்கையான சிந்தனை. அதைரியம் ஊட்டும் பேச்சு. ஊக்கத்தைக் கெடுக்கும் வகையான உரையாடல். இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களிடம் போய் யோசனை கேட்பது மிகவும் தவறு. எந்தவொரு செயலையும் நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே அதில் நிச்சயமான வெற்றியைப் பெற முடியும்.


 

confident image

 

ஒரு ஊரில் ஒரு பந்தயம் நடந்தது. அதாவது மேற்கே உள்ள சிறிய மலையின் உச்சியை முதலில் போய் தொடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதுதான் அந்தப் போட்டி.பந்தயத்தில் பலர் பங்கு பெற்றனர். எல்லோரும் ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடியிருந்தோர்களில் சிலர் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களிடம், ‘இது அத்தனை சுலபமான போட்டி கிடையாது. மலை உச்சியைத் தொடுவது என்பது மிகவும் கஷ்டம். உயரமான இடத்தை நோக்கி ஓடுவதால் மூச்சிரைப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் வந்துவிடக்கூடும். இன்னும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.  ஒரு லட்சம் ரூபாய்க்காக உயிரையே விடுவது சரியாக இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். அத்துடன் மலை சிறியது என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அதன் உச்சியைத் தொடுவது என்பது எளிதல்ல. எவராலும் அங்கே செல்ல முடியாது. எனவே பரிசுப் பணம் யாருக்குமே கிடைக்கப் போவதில்லை’’ என்று அவநம்பிக்கை தரும் விதமாகப் பேசினர்.இதனைக்கேட்டதும் நிறைய பேர் பயந்துவிட்டனர். தைரியம் இழந்தனர். போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.இன்னும் சிலரோ ஓடத் தொடங்கினர். சற்று தூரம் மலையில் ஓடியபோது மூச்சிரைக்கவே, மாரடைப்பு வந்துவிடுமோ என்று பயந்து போட்டியில் இருந்து விலகிவிட்டனர்.இவ்வாறு பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருமே பாதி தூரம் சென்றதுமே போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.ஆனால் ஒருவர் மட்டும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஓடிக் கொண்டே இருந்தார்.

 

எல்லோருக்கும் ஆச்சரியம்!எப்படி அவர் மட்டும் நம்பிக்கை இழக்காமல் ஓடுகிறார் என்று வியந்தனர்.கடைசியாக அந்த நபர் மலை உச்சியை அடைந்து வெற்றி வாகை சூடினார்.அவநம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசிய கூட்டத்தினர் அனைவரும் இப்போது அந்த நபரைப் பாராட்டினார்கள். ஒரு லட்சம் ரூபாயும் அவருக்குக் கிடைத்தது.‘‘எல்லோரும் நம்பிக்கை தளர்ந்து பந்தயத்தில் இருந்து விலகிய பிறகும் அந்த நபர் மட்டும் எப்படி நம்பிக்கையோடு ஓடினார்’’ என்று யோசித்தனர்.பிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது. அதாவது, அந்த நபர் கேட்கும் திறன் இல்லாதவர்!இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் ஊர் என்ன சொன்னாலும், எத்தனை அவநம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தாலும் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், கேட்கும் திறனை இழந்தவரைப்போல இருக்க வேண்டும் .

 

Next Story

கொலையுண்ட மகனை உயிர்ப்பித்த சிவன்; ‘குஷ்மேஷ்வர் ஜோதி லிங்கம்’ சிவாலயத்தின் கதை

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

குஸ்மேஷ்வர் நாத் மந்திர் என்பதொரு சிவாலயம். இந்த ஆலயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஹேலா என்னுமிடத்தில் பிரதாப்காட் மாவட்டத்தில் இருக்கிறது. ‌வேத காலத்தில் கூறப்படும் "ஸை' என்னும் நதியின் கரையில் ஆலயம் உள்ளது. குட்ஸார்நாத் மந்திர் என்ற பெயரிலும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. சிவபுராணத்தில் இந்த கோவிலைப் பற்றிய கதை உள்ளது.

 

பரத்வாஜ வம்சத்தைச் சேர்ந்தவர் சுதர்மா. ஆற்றின் கரையில் இவரது வீடு இருந்தது. இவர் சிவபக்தர். எப்போதும் சிவனை வழிபட்டுக் கொண்டேயிருப்பார். இவருடைய மனைவியின் பெயர் சுதேஹா. வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்கும் அவள் தன் கணவருக்கு சேவை செய்வதிலும் மிகுந்த அக்கறையுடன் இருந்தாள்.

 

சுதர்மா அனைவரையும் மதிப்பார். தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பார். தினமும் "அக்னிஹோத்ரம்' என்னும் சடங்கைச் செய்வார். மூன்று நேரங்களிலும் பூஜையில் ஈடுபடுவார். சூரியனைப் போல் அனைவரையும் அவர் ஈர்ப்பார். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் பின்பற்றி நடப்பார். அவர் தன் சீடர்களுக்கு வேதத்தைக் கற்றுத்தந்தார். வசதி படைத்தவராகவும் தர்மப்பிரபுவாகவும் இருந்த அவர் நல்ல மனம் கொண்டவராகவும் இருந்தார்.

 

எனினும் அவருக்கு வாரிசில்லை.அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஆனால் அவரது மனைவி கவலைப்பட்டாள். தனியாக அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதாள். குழந்தையில்லாத அவர்களை கேலியும் கிண்டலுமாக பலரும் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து தன் தங்கையை இரண்டாவது மனைவியாக கணவருக்கு திருமணம் செய்துவைக்க அவள் தீர்மானித்தாள். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ள சுதர்மா மறுத்தார். அவள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்க, இறுதியில் அவர் சம்மதித்தார். அக்காவின் விருப்பத்திற்கு தங்கையும் ஒப்புக்கொண்டாள்.

 

அவளது தங்கைக்கும் கணவருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் மூவரும் தினமும் 100 சிவலிங்கங்களை களிமண்ணில் செய்து, அவற்றை அருகிலிருக்கும் குளத்தில் கொண்டுபோய் போடுவார்கள். இதையொரு சடங்காகவே அவர்கள் செய்து வந்தார்கள். தங்கை குஸ்மாவுக்கு சிவபெருமானின் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அதற்காக சந்தோஷப்பட்ட அக்கா சுதேஹா காலப்போக்கில் தன் தங்கையின் மீது பொறாமை கொண்டாள்.

 

சிறுவன் வளர்ந்து வாலிபப்பருவம் எய்தினான். அவனுக்கு திருமணம் நடந்தது. மணப்பெண் வீட்டிற்கு வந்ததும் அவளைப் பார்த்து சுதேஹா எரிச்சலடைந்தாள். ஒருநாள் யாருமில்லாத நேரத்தில் தன் தங்கையின் மகனை சுதேஹா பல துண்டுகளாக வெட்டி, ஆற்றில் கொண்டுபோய் போட்டாள்.  இப்படிப்பட்ட கொடூரச் செயலைச் செய்து விட்டு எதுவுமே தெரியாததைப் போல அவள் இருந்தாள்.

 

புதிதாக வந்த மணப்பெண் மறுநாள் கண்விழிக்கும்போது தன் கணவன் இல்லாததைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதறினாள். வீட்டில் சில இடங்களில் குருதிக்கறை இருப்பதை அவள் பார்த்தாள். எனினும் அதற்குப் பின்னணியில் நடந்திருக்கும் சதியை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் எதுவுமே நடக்காததைப் போல தினமும் சிவனுக்கு பூஜை செய்துகொண்டே இருந்தார் சுதர்மா. பூஜையில் கணவருக்கு உதவியாக இருந்தாள் குஸ்மா.

 

தன் மகன் படுத்திருந்த கட்டிலையே கவலையுடன் சுதர்மா பார்த்தார். தனக்கு குழந்தையை அளித்த சிவபெருமான் நிச்சயம் தனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். தான் எப்போதும் செய்யக்கூடிய 100 மண் சிவலிங்கங்களை நீரில் போடுவதற்காக அவர் சென்றார்.

 

அப்போது அங்கு கரையில் தன் மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. அனைத்துமே சிவனின் திருவிளையாடல்கள் என்று எண்ணிக்கொண்டார். அவருடன் குஸ்மாவும் அப்போதிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சிவபெருமான் ஜோதி வடிவத்தில் தோன்றி, "கொடூரச் செயலைச் செய்த சுதேஹாவை நான் வதம் செய்யட்டுமா?'' எனக் கேட்க, "வேண்டாம்'' எனக் கூறினாள் குஸ்மா.

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

மேலும், ஜோதி வடிவத்தில் சிவன் தோன்றிய இடத்திலேயே நிரந்தரமாக இருந்து மக்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க வேண்டுமென அவள் சிவனைக் கேட்டுக்கொண்டாள். அதற்கு சிவன் சம்மதித்தார். அந்த இடத்தில் தான் இப்போதைய ஆலயம் இருக்கிறது.

 

குஸ்மா கேட்ட வரத்தின்படி அமைந்த கோவில் என்பதால் அவளின் பெயரும் ஆலயத்தின் பெயருடன் சேர்ந்துகொண்டது. இதுதான் "குஸ்மேஷ்வர்நாத் மந்திர்' என்ற சிவாலயத்தின் கதை. இந்த ஆலயத்திற்கு வந்து நீராடிவிட்டு சிவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து பிரச்சினைகளும் தீருமென்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தைத் தேடி உலகமெங்குமுள்ள சிவபக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். அலஹாபாத் நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம்.

 

 

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #03

Published on 25/01/2022 | Edited on 27/01/2022

 

 

maayapuraa series part-3

 

 

நிலாவில் வீடு கட்டி, விண்மீன்கள் பொறுக்கிவந்து, மின்னலில் தோரணம் கட்டி, மேகத்தினை மெத்தை ஆக்கிக் கனவு காணுகின்ற வயது சங்கவிக்கு. ஆம்! 16-ல் இருக்கும் இளைய வசந்தம் அவள். ஆனாலும் அக்காலம் அவளைப் போன்ற கிராமத்துக் கவிதைகளை அப்பாவியாகவே வைத்திருந்தது. சைக்கிள் வைத்திருப்பவர்களையே பணக்காரர்கள் என்று நினைக்கிற காலகட்டம் அது. இட்லி, தோசை, அரிசி சாப்பாடு சாப்பிட்டாலே வசதி படைத்தவர்கள் என்று நினைக்கும் கிராமத்து வாழ்க்கை. இட்லி தோசையே அந்நாளில் பலகாரம் என்று பலராலும் அழைக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் காலை உணவாக இட்லி சாப்பிடும் நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிருத்திகை ,அமாவாசை, தீபாவளி உள்ளிட்ட விசேச நாட்களிலும், வீட்டிற்கு உறவினர் வரும் நாட்களிலும் தான் இவை கிடைக்கும்.

 

‘சகலகலா வல்லவன்’ படத்தில் "இளமை.. இதோ.. இதோ... ” என்று கமல் போன்ற ஹீரோக்கள் புல்லட்டில் ஸ்டைலாக பறந்து வரும் போதெல்லாம், சிவப்பாக இருப்பவர்கள் தான் புல்லட் ஓட்ட வேண்டும். அவர்கள்தான் புல்லட் வைத்திருப்பார்கள் என்று அப்பாவியாக நினைத்த அறியாத வயது சங்கவிக்கு. அத்தை வீட்டில் இப்படி ஒரு புல்லட்டை பார்த்ததும்,  ஜூவில் சிங்கத்தைப் பார்த்ததுபோல, அப்படியே அசந்து நின்றுவிட்டாள். அந்த புல்லட்டில் அசோக் மாமாவை பார்த்ததும் சிவப்பாக இருப்பவர்கள் தான் புல்லட் ஓட்ட வேண்டும் என்ற அவளுடைய தீர்மானம் முதலில் உடைந்தது. அசோக் மாநிறத்தில் இருப்பவன். என்றாலும் வாட்ட சாட்டன். அவனிடம் ஒருவித கம்பீரம் அலட்சியமாய் அமர்ந்திருந்தது.

 

மகனிடம் சொல்லிக்கொண்டே வெளியே வந்த தங்கம், வாசலில் மூட்டை முடிச்சுடன் நின்றுகொண்டிருந்த அலமேலுவையும் சங்கவியியும் பார்த்துவிட்டாள். ‘சொன்னாப் போதும்னு வந்துட்டாளுங்க கொட்டிகறத்துக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்டவள், புருசன்காரனை ஒரு கணம் எண்ணிப் பார்த்துவிட்டு, செயற்கை உற்சாகத்தோடு, வாயெல்லாம் பல்லாக "வாங்க மச்சி... வாம்மா சங்கவி" என்று வரவேற்றாள் தங்கம். அம்மா யாரிடம் பேசுகிறாள் என்று திரும்பிப் பார்த்த அசோக்கின் கண்களுக்கு அலமேலு அத்தை மங்கலாகத்தான் தெரிந்தாள். அவன் விழிகளுக்கு தலை நிறைய மஞ்சள் கனகாம்பரம் பூ, சைடில் ஸ்பீக்கர் புனல் கட்டியது போல செம்பருத்திப்பூ, கழுத்தில் வெள்ளை மணி என, 16 வயதினிலே மயிலு மாதிரியே நின்றிருந்த சங்கவிதான் பளிச்சென்று தெரிந்தாள். மனசுக்குள் இனம்புரியாத ஒரு புயல் குபீரென வீசியது. ஆண்களின் அடிப்படை குணத்தில் ஒன்று, வெளி மனிதர்கள் மத்தியில் வீட்டில் இருக்கும் பெண்களை அதிகாரம் பண்ணுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம் பிறக்கும். அத்தையை கவனித்து விட்டவன்... “அடடே வாங்க அத்தே...” என்று அலமேலுவை அழைத்துவிட்டு, சங்கவியை கவனிக்காதது போல, "அம்மா மதியம் 15 ஆளுக்கு கஞ்சி காய்ச்சிடு. ஒரு மணி சங்கு பிடிக்கும்போது காராமணியை அனுப்பறேன். களத்தில் உளுந்து ஒப்பிடி பண்ணனும்" என்றபடி ஸ்டைலாக புல்லட்டை உதைத்து, ஒரு யூ டர்ன் போட்டான். வண்டி, சங்கவி மீது மோதுவது போல பயமுறுத்திவிட்டுச் சென்றது. அவன் சென்ற பிறகு அவன் விட்ட புல்லட் புகை, சங்கவி முகத்தருகே கருமேகமாகக் குவிய, அதற்கு நடுவே நிலவாக ஒளிர்ந்தது அவளின் கிராமத்து முகம். அசோக்கின் நினைவில் சங்கவியின் அகலக் கண்களும், அதில் இருந்த ஒருவித படபடப்பும், அவள் உதட்டில் இருந்த வெள்ளந்திப் புன்னகையும், ஒரு நிமிடம் அவன் கண்முன்னே  வந்து சென்றது.

 

அலமேலுவும் சங்கவியும் தக்கத்தைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் காலெடுத்து வைத்தனர். செல்வத்தின் வீடு பெருமாளின் வீட்டை விட மிகப் பெரியது நடுவில் பெரிய முற்றம். 50 மூட்டை நெல்லைக் காய வைக்கலாம் அந்த அளவுக்குப்  பெரியது. வெளித் திண்ணையைத்  தாண்டி உள்ளே கூடத்தில் நுழையும் போது ‘டொக்...டொக்.’ என்று வெற்றிலையை இடிக்கும் ஓசை கேட்டது. கூடத்தில் மாநிறத்துக்கும் கூடுதலான நிறத்தில், ரவிக்கை இல்லாமல் சிவப்பு நிற நூல் புடவை கட்டி, காதில் சிவப்புக்கல் கொப்பு கம்மல் அணிந்தபடி, கழுத்தில் பவள மாலை ஊஞ்சலாட, ஒரு உருவம் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தது.  இவர்களின் வரவறிந்து... "யாரடி... அவளுங்க. வில்லு வண்டியில ஏற்றி விட்ட சீர் செனத்திய சுமக்க முடியாம சுமந்து வர, சீமைச் சிறுக்கிக" என்று அலமேலுவை புகழ்வது மாதிரி கிண்டலாகப் பேசினார் தங்கத்தின் அம்மா தனம்மா. தனம்மாவின்  இழுவை ஓசையும், "டொக்..டொக்" ஓசையும்  தாளம் தப்பாமல் லயம் சேர்ந்தது போல் இருந்தது.

 

கூடத்தின் ஒரு பக்க மூலையில் கல் இயந்திரத்தில் அரிசி உடைத்து கொண்டிருந்தனர் நான்கு பெண்கள். அலமேலுவைப் பார்த்ததும் "வா... தாயீ, இப்பதான் நேரம் கிடச்சுதா?" என்று கேட்டவர்களுக்கு புன்னகையை பதிலாக்கி விட்டு "அண்ணி... மதியம் சோறு பொங்கியாச்சா... நான் பொங்கறேன்" என்று சொல்லிக்கொண்டே தங்கத்தின் பதிலை எதிர்பார்க்காமல் அடுக்களைக்குள் சென்றாள் அலமேலு. "சங்கவி, கொல்லைப் பக்கம் அடுப்பை பத்த வச்சு, கிணத்தடியில் இருக்கிற ஈயம் பூசிய  பித்தளை அண்டாவில் தண்ணிய புடிச்சு அடுப்பில வைம்மா. ஆளுகளுக்கு கஞ்சு காய்ச்சனும். காராமணி பய  எடுக்கவந்துடுவான்." என்று சொல்லிவிட்டு அலமேலுவை அதிகாரம் பண்ண அடுக்களைக்குள் வந்தாள் தங்கம்.

 

சவுக்கைக் கட்டைகளை வைத்து அடுப்பை மூட்டி, உலை வைத்திருந்தாள் அலமேலு. தங்கத்தை பார்த்ததும் "அண்ணி... அரிசி எவ்வளவு போடணும்னு சொல்லுங்க" என்றாள். "ரெண்டு பெரிய படி போட்டு வடிச்சிடு. கல்யாணம் வரைக்கும் ஆளுங்களுக்கும் இங்கிருந்துதான் சாப்பாடு" என்று சொல்லிவிட்டு "மொதல்ல எங்க அம்மாவுக்கு காபி போட்டு கொடுத்துடு அலமேலு. நல்லா கொழகொழன்னு பில்டர் காபியா இருந்தாதான் அம்மா குடிக்கும்” என்று சொன்னாள் தங்கம். அலமேலுவை பேச்சுக்கு கூட காபி குடிக்கிறாயா? என்று கேட்கவே இல்லை. அடுப்பில் கஞ்சிக்கு  உலை வைத்துவிட்டு, அது கொதிக்கும் நேரத்தில், கொல்லைப் புறத்தில் இருந்த பசு மாடுகளுக்கு சோளத் தட்டுகளை உதறிப் போட்டாள் சங்கவி. அந்த நேரம் பார்த்து கோணிப்பை எடுப்பதற்காக வீட்டிற்குத் திரும்பி வந்த அசோக், வீட்டின் பின்புறம் இருந்த தொம்பைக் கிடங்கு அறையில் கோணியை உதறி போட்டான். அப்போது  சங்கவி, பாவாடையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு சோளத்தட்டு உதறும் காட்சி அவன் கண்ணில் பட்டது. அவன் கண்கள் ஏனோ சில நொடிகள் இமைக்க மறந்தன. சட்டென்று சுதாரித்துக் கொண்டு கோணிப்பையை உதறி போட ஆரம்பித்தான்.

 

கொதிக்கும் உலையில் கஞ்சிக்கு நொய்யைப் போட்டு நெருப்பை எரியவிட்ட சங்கவியின் மூக்கை துளைத்தது, அம்மா போட்ட காபியின் வாசம். வேகமாக உள் வாசலுக்கு வந்து "அம்மா எனக்கும் ஒரு லோட்டா காப்பி கொடு மா" என்றாள்.

 

"வந்த இடத்தில் நாக்கை அடக்கிக்கிக்கிட்டுகொண்டு சும்மாயிரு" என்று அதட்டினாள் அலமேலு.

 

"நம்ம அத்தை வீடுதானே மா" என்றாள் அப்பாவியாக.

 

"அதான் சொல்றேன். இது அத்தை வீடு தான், அம்மா வீடு இல்லை, இங்கே அவங்க சொல்லாம நீயா எதையும் எடுத்துச் சாப்பிடக் கூடாது" என்று அறிவுரை சொன்னாள் அலமேலு.

 

முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு அடுப்புப் பக்கம் போனாள் சங்கவி. இதை குடோனில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த அசோக், "அத்தை, காபி வாசனை வீட்டைத் தூக்குது. எனக்கும்  உங்க கமகம காப்பியைக் கொடுங்க"என்றான்.

 

"இதோ... வரேன்" என்று அவசரமாக காபி போட்டு சூடாக எடுத்துக்கொண்டு சென்று, கூடத்தில் நின்று  கொண்டிருந்த அசோக்கிடம் கொடுத்தாள் அலமேலு.

 

காபியை வாங்கிய அசோக் "பயங்கரமாக சுடுது.. இது எப்ப ஆர்றது?  நான் எப்ப குடிக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான். தனம் பாட்டியும் லோட்டா நிறைய காபியுடன் உட்கார்ந்திருந்தார். தங்கம் வாயில் வெற்றிலை பாக்கு போட்டிருந்தார். "த...புள்ள, அத்தை மவளே இங்க வா" என்று சங்கவியை அழைத்தான் அசோக். பயந்துகொண்டே கூடத்திற்கு வந்த சங்கவி, ‘பாம்பு வாயில் சிக்கிய தவளையின் குரல் போல’ மெல்லியதாக "என் பேர் புள்ள இல்ல சங்கவி" என்றாள்.

 

"அடேங்கப்பா, உனக்குப் பேசக்கூடத் தெரியுதே... சரி.. சரி இதைக் வச்சுக்கோ. இந்த காபியைக் குடிக்காம வீணாக்கினால் அம்மா திட்டுவாங்க. நீயே குடிச்சிடு" என்று அவளிடம் நீட்டினான் அசோக். பிறர் கையில் இருக்கும் உணவுப் பொருளைத் தட்டி விடும் அளவுக்கு அம்மா ஒன்றும் கொடுமைக்காரி இல்லைன்னு அசோக்குக்கு தெரியும். அமைதியாக நின்ற சங்கவி யை பார்த்து "வாங்கிக்கோ" என்று தங்கம் சொன்னாள். அலமேலுவும் கண்ணாலேயே ’வாங்கிக்கோ’ என்றாள். காபியை வாங்கிக் கொண்டாள் சங்கவி. கோணிப் பைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறினான் அசோக். அடுக்களையில் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அலமேலு.

 

வாசலில் "ஜல்.. ஜல்" என்று சலங்கை சத்தத்துடன் ஒரு வில்லு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து பூசணிக்காய்க்கு கை கால் முளைத்தது போல ஒரு பெண்மணியின் உருவம் குதித்தது. பட்டுச் சேலை கட்டி, இரண்டு கைகளிலும் தங்க வளையல்கள். அந்த வளையல்கள் சதைகளில் புதைந்து கொண்டு, காப்பு மாதிரி இருந்தது.  தலைக்கு கீழே கழுத்து என்ற உறுப்பைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அதிலும் டாலர் செயின் ,நெக்லஸ், காசு மாலை என்று என்று அனைத்தையும் போட்டு அழுத்தி வைத்திருந்தார்கள். அவள்தான்  தங்கத்தின் அணணன் மகள் புவனா. அந்தப் பொண்ணு இறங்கி நடந்து வரும்போது இரண்டரை அடி பித்தளை அண்டாவை  உருட்டி விட்டது போலவே இருந்தது. புவனாவிற்கு பின்னால் புவனாவிற்கு 15 வயது அதிகமானால் எப்படி இருப்பாரோ அதே தோற்றத்தில் ஒரு பெண்மணி இறங்கி வந்தார் அவர் தங்கத்தின் அண்ணி நாகம்மா.

 

"டேய் .. இருளாண்டி  வண்டியில இருந்து பழம், பட்சணமெல்லாம் வச்சிருக்கற அண்டாவை உள்ளே எடுத்துட்டு வாடா" என்று கம்பீரமாக அதட்டிவிட்டு மீசையை முறுக்கியபடி வண்டியில் இருந்து இறங்கிய படியே குரல் கொடுத்த அந்த மனிதர், பட்டு வேட்டி சட்டை போட்ட ஐயனார் மாதிரி இருந்தார். அவர்தான் கண்ணுசாமி. தங்கத்தின் அண்ணன். இவர்களைப் பார்த்ததும் வாசல் வரைக்கும் வந்து, "வாங்க அண்ணே, வாங்க மதனி, வாம்மா புவனா”  என்று மனம் மகிழ அழைத்துச்சென்றாள் தங்கம்.

 

அலமேலுவும் வாசலுக்கு வந்து அனைவரையும் வரவேற்றாள். தனம்மா எழுந்து வந்து புவனாவின் கன்னத்தை இரண்டு கைகளாலும் தடவி முத்தம் கொடுத்து திருஷ்டி கழித்தார். "பன்னீரில் குளித்து, பாலாற்று தண்ணிய குடிச்சு, வெண்ணெய்யிலும், நெய்யிலும் கைகழுவி, பாதாமும், முந்திரியும்  சாப்பிட்டு வளர்ந்த இண்டு, இடுக்கு, நாடு நகரம் எட்டு ஜில்லா சீமையிலும் இல்லாத பேரழகி என் பேத்தி" என்று சொல்லி பூரித்தார் தனம்மா. "எங்கம்மா உன் வீட்டுக்காரரை காணோம்" என்று கணீர் குரலில் கேட்டார் கண்ணுசாமி. "நாளைக்கு பந்தக்கால் வச்சு நலங்கு வைக்கிறது, அதான் டவுனுக்கு பொருளுங்க வாங்கியாரப் போயிருக்காரு அண்ணா" என்றாள் தங்கம்.

 

"கல்யாண மாப்பிள்ளை  மணியும், அப்பா  கூட போயிருக்காரா? என்று  மீண்டும் சந்தேகத்தைக் கேட்டார் கண்ணுசாமி. "அண்ணா... மணி அவன் கூட்டாளிங்களுக்கு பத்திரிக்கை  வைக்கப்  போயிருக்கான்" என்று விளக்கினாள் தங்கம்.

 

"எங்க என் புல்லட் மாப்பிள்ளையையும் காணோம்"? என்று நாகம்மா  கேட்டாள்.

 

 "அசோக்... காடு கழனியே கதின்னு இருக்கான்" என்று அங்கலாய்த்தார் தங்கம்.

 

"அசோக் மாமா, பியூசி படிச்சிட்டு ஏன் இப்படி பண்ணை பார்க்கறாரு" என்று புவனா சலிப்புடன் சொன்னாள்.

 

"விடுமா, நாளைக்கு வீட்டோட மாப்பிள்ளையா நம்ம ரைஸ் மில்லில் உட்கார்ந்தார்னா எல்லாம் சரியாயிடும்" என்று மகளுக்கு ஆறுதல் சொன்னார் கண்ணுசாமி.

 

"சாப்பாடு தயாரா இருக்கு எல்லாரும் சாப்பிட வாங்க" என்று அழைத்தாள் அலமேலு. "என்னம்மா அலமேலு ஏதாவது வெள்ளாமை இருக்கா? மூணு வேளை கஞ்சி குடிக்க முடியுதா? பெருமாளு எப்படி இருக்கான்?" -என்று எகத்தாளமாகவும் தோரணையாகவும் கேட்டார் கண்ணுசாமி. "எல்லாம் நல்லபடியா இருக்காங்க அண்ணா" என்று அமைதியாகச் சொன்னாள் அலமேலு. கொல்லைப்புறம் வந்த புவனா அங்கு மாட்டுக்குத் தவிடு புண்ணாக்கு போட்டு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த  சங்கவியைப்  பார்த்து,"இதாரு வேலக்காரியா? என்ன உலகத்துல இல்லாத அதிசயமா இருக்கு. இங்க வீட்டு வேலைக்காரி என்னவோ சீவி முடிச்சு சிங்காரிச்சு கிட்டு இருக்குறாளே.” என்று கத்தி எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி சொன்னாள். சங்கவியோ ஒரே நொடியில் தன் அத்தனைத் துள்ளளையும் பறிகொடுத்துவிட்டு கூனிக் குறுகிப்போய் சட்டென நின்றாள்.

 

அப்போது...

 

(சிறகுகள் அசையும் )
 

முந்தையப் பகுதி : சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #02