Advertisment

உங்கள் மொபைலும் வெடிக்கலாம்! 

சில நாட்களுக்கு முன் வந்தது ஒரு செய்தி. 'ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கைபேசியை சார்ஜ் போட்டபடியே பேசியுள்ளார். சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் உபயோகித்ததால் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அந்தப் பெண்ணுக்கு கை, முகம், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், பின்னர் உயிரிழந்தார். அவர் பயன்படுத்தியது நோக்கியா 5233 கைபேசி' என்பது தான் செய்தி. நாம் ஏன் ஒடிசா வரை போக வேண்டும்? தமிழ்நாட்டில் கூட பல இடங்களில் மொபைல் போன் வெடிப்பு பற்றி செய்திகள் வாட்ஸ் ஆப்பிலும் செய்திகளிலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்னதான் காரணம் இந்த மொபைல் போன் வெடிப்பதற்கு?

Advertisment

Mobile phone blast odisha

மொபைல் போன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு சாதனம். இன்று ஐந்து விரல் கொண்ட மனிதர்களிடம் ஆறாவது விரல் என்ற நிலையையும் தாண்டி உடலின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மனித வாழ்வில் ஒன்றாகிவிட்டஇந்த மொபைல் போன்கள் 3G தாண்டி, 4G தாண்டி, 5Gக்கு காத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு பக்கம் மொபைல் போன்கள் வெடிப்பு, மொபைல் கதிர் வீச்சுகளால் மனித உடலுறுப்புகள் பாதிப்பு போன்ற செய்திகள் பரவலாக வந்துகொண்டே இருக்கின்றன. 'இந்த மொபைல் வெடிப்புகளெல்லாம் மொபைல் நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டைஏற்படுத்தி பழிபோட்டு தொழிலை முடக்க சில விஷமிகள் பரப்பும் பொய்யான தகவல்கள்' என நிறுவனங்கள் கூறினாலும், மக்களால் பிராண்டட் மொபைல் என்று நம்பிக்கையுடன் வாங்கப்படும் கைபேசிகள் கூட சில நேரங்களில் வெடித்து விடுகின்றன. ஒடிசாவில் நடந்த மொபைல் வெடிப்புக்குக் கூட நோக்கியா கைபேசிகளை விற்பனை செய்யும் எச்.எம்.டி குளோபல் நிறுவனம், 'நாங்கள் நோக்கியா நிர்வாகத்தை எடுத்துக்கொண்டதற்கு முன், இந்த மாடல் தயாரிக்கப்பட்டது' என்று விளக்கம் கூறியுள்ளது.

100 முதல் 200 மில்லி ஆம்ப்ஸ் மின்சாரம்தான் மனித உயிர்சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தான மின்சார அளவாகும். ஆம்ப்ஸ் என்பது மின்சாரத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகு, A என்று குறிக்கப்படும். 100mAக்கு குறைவான மின்சாரம் வலியைக் கொடுக்கும். 10mAக்கு குறைவான மின்சாரத்தை உணர முடியும், ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. பொதுவாக கைபேசிகளில் 3.7 வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் இருக்கும். ஐபோன் 6 மாடலில் 1810mA பேட்டரி இருக்கும்.

Advertisment

சாதாரணமாக நமது வீட்டில் சார்ஜ் செய்யும் பொழுது, ஒரு மணிநேரத்தில் 3.7 வோல்ட்டேஜில் 1.8 ஆம்ப்ஸ், அதாவது 180mA (மில்லி ஆம்ப்ஸ்) மின்சாரம் கையாளப்படுகிறது. இதுவும் சரியான சாதனங்களைக் கொண்டு கையாளப்படவில்லையென்றால் மனித உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்கும் அதிகமான மின்சார அளவுதான். இதுபோன்ற ஆபத்தான மின் அளவை போலியான, தரமில்லாத மின் சாதனங்களைக் கொண்டு கையாளும் பொழுது இது போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன.

mobile blast

மொபைல் போன்களை பொறுத்தவரையில் பின்வரும் நான்கு விஷயங்கள் தான் வெடிப்பதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

போலி பேட்டரி

சந்தையில் போலியான, விலை குறைவான மொபைல் பேட்டரிகள் குவிந்துள்ளன. நம் பொருளாதார வசதிக்காக குறைந்த விலை பேட்டரிகளை வாங்கவே அதிகம் முன்வருகிறோம். அது மட்டுமல்லாமல் மொபைல் போன் மனிதனின் வாழ்வில் இன்றிமையாத ஒன்றாக உள்ளதை அறிந்த உற்பத்தி உலகம் ஒரு பக்கம் மக்களின் பொருளாதாரத்தை குறிவைத்து விற்பனையை பெருக்க வேண்டும் என்ற நோக்கில் தரமற்ற உதிரிபாகங்கள், கைபேசி சார்ந்த பிற பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்துகின்றன. இன்று காய்கறிகள் போல கூறுபோட்டு தெருக்களில் விற்படுகின்றன மொபைல் உதிரி பாகங்கள். இது போன்ற பேட்டரிகளை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தரமற்ற சார்ஜர்

பேட்டரி போன்றே தரமற்ற சார்ஜர்களை பயன்படுத்துவதும் கைபேசிகள் வெடிக்க காரணமாகும். புதிதாக கைபேசி வாங்கும் பொழுது கொடுக்கப்பட்ட சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும். சந்தையில் கிடைக்கும் ஏதோ ஒரு சார்ஜரை வாங்கி உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் அதில் மின் பகிர்மான அளவுகளின் மாறுதல் மற்றும் குறைந்த தரம் போன்றவற்றால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டால் சார்ஜர் மூலமாக மொபைல் வெடிக்க வாய்ப்புகள் அதிகம். இன்று மலிவு விலையில் குறைந்த நேரத்தில் விரைவில் சார்ஜ் ஏறும் சார்ஜர்கள் பயங்கரமான பெயர்களில் விற்கப்படுகின்றன. அப்படி வாங்கும்போது, கேரண்டீ இல்லாமல் போவது சார்ஜருக்கு மட்டுமல்ல நமது உயிருக்கும்தான்.

நம்மால் கொடுக்கப்படும் அழுத்தம்

சிலர் கைபேசியை பேண்ட்டின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வண்டி சீட்டில் அமரும்போது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை மறந்து விடுகின்றனர். கைபேசிக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் கூட அது வெடிக்கக் காரணமாகும். தூங்கும்பொழுது சிலர் படுக்கையிலேயே கைபேசியை பயன்படுத்திவிட்டு அப்படியே தூங்கிவிடுவர். பின்பு, உருண்டு புரண்டு படுக்கும் பொழுது நம் உடலுக்குக் கீழ் அல்லது தலையணைக்குக் கீழ் அதிக அழுத்தத்திற்கு உட்படும்போது, இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். எனவே, கைபேசியில் வரும் அழைப்புகளால் நமக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்பட்டாலும், நாம் கைபேசிக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் சார்ஜ் போடுவது மற்றும் சார்ஜ் போட்டுக்கொண்டே உபயோகிப்பது

mobile while charging

இரவு நேரங்களில் கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கிவிடுவது, பேட்டரி முழு அளவு சார்ஜ் ஏறிய பின்னரும் தொடர்ந்து மின் இணைப்பில் பலமணிநேரம் இருப்பது போன்றவை மொபைலையும் பேட்டரியையும் சூடாக்கும். மேலும் அதிக அளவில் கைபேசி வெடிப்பு சம்பவங்கள் சார்ஜ் போட்டுக் கொண்டே கைபேசி உபயோகிப்பதால்தான் நிகழ்ந்துள்ளன. எனவே சார்ஜ் போட்ட நிலையில் கைபேசி உபயோகிப்பதை முற்றிலும் குறைக்க வேண்டும். கைபேசி ஈரமாக உள்ள போது சார்ஜ் போடக்கூடாது. அதிகநேரம் மொபைல் பயன்படுத்தி சூடாக இருக்கும் பொழுது உடனே மொபைலுக்கு சார்ஜ் போகக்கூடாது. உப்பிய பேட்டரியை உடனே மாற்றி விட வேண்டும்.

பல திரைப்படங்களில் பார்த்திருப்போம், மொபைல் போனில் குண்டு வைத்து அனுப்புவதை. அது நமக்கே நேராமல் தவிர்க்க, குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டாம். அப்படி இருந்தால், மொபைல் குண்டு வெடிப்பைத் தவிர்க்கலாம்.

bomb blast cellphone Mobile Phone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe