ADVERTISEMENT

"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள், மலையாளிகளும் கூப்பிடுகிறார்கள்" - மொய் எழுதுவதில் டெக்னாலஜி

06:20 PM Sep 22, 2018 | tarivazhagan

மதுரை என்றதும் பொதுவாக நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில் அடுத்து மல்லி அதற்கடுத்து கோனார் கடை கறிதோசை, வீரம், சேட்டை என நீளும் அந்த லிஸ்ட். மதுரை மல்லிக்கு மட்டும் இல்லை மொய்க்கும் ஃபேமஸ். மதுரையில் மொய்க்காகவே சில விருந்துகள், வசந்தவிழா போன்ற விழாக்கள் நடக்கும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்றைய பரபரப்பான சூழலில் உலகமயமாகி உலகம் சுருங்கி கைக்குள் வந்தபிறகு, நாம் இன்னும் சில பண்பாடுகளை மறக்காமல் பின்பற்றுகிறோம், அதில் மிக முக்கியமானது நம் உறவினர்களோ, நண்பர்களோ, நமக்கு நெருங்கியவர்களோ நம் வீடுதேடி வந்து தங்கள் வீட்டில் விழாக்கள் அல்லது திருமணத்திற்காக நேரில் அழைத்துவிட்டால், எப்படியும் நம் வீட்டில் இருந்து ஒருவராவது நேரில் சென்று நம் அன்பைப் பரிமாறிவிட்டு மொய் எழுதிவிட்டு வருவோம். இதே நம் வீட்டு விசேஷத்தில் நம் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கும் நேரத்தில் 'மொய் எழுத கொஞ்சம் உட்காருங்கள்' என்று யாராவது சொல்லும்போது, நாம் நினைத்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போய்விடும். அதிலும் இளைஞர்களுக்கு மொய் எழுதும் வேலையென்றாலே கசக்கத்தான் செய்யும். வந்திருக்கும் அழகுப் பெண்களைப் பார்ப்பார்களா இல்லை மொய்க் கணக்கைப் பார்ப்பார்களா? ஒவ்வொரு குடும்பத்திலும் மொய் ஸ்பெஷலிஸ்டுகள் சிலர் இருப்பார்கள். அவர்கள் கொஞ்சம் பாவம்தான். உறவுமுறையில் எந்த விழா வந்தாலும் அவர்கள்தான் சிக்குவார்கள். கணக்கு சற்றே தப்பாகிவிட்டால் பெரும் பகையில் கூட முடிய வாய்ப்புண்டு. அதிலும் லட்சம், கோடிக்கணக்கில் மொய்ப்பணம் வரும் மதுரை வட்டாரங்களில் இது பெரிய பிரச்சனைதான். இது போன்றெல்லாம் இனி நடக்காமல் விழாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதற்குத்தான் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் 'மொய் டெக்' (moi tech) என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார். அவருடன் ஒரு சிறிய உரையாடல் நடத்தினோம். அதில் அவருக்கு எப்படி இந்த யோசனை வந்தது, எப்படி இதை துவங்கினார், இப்போது இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்று பகிர்ந்துகொண்டார்.

"நான் மதுரை உசிலம்பட்டியில் ஒரு ஃபோன் கடை வச்சுருக்கேன். நான் பி.பி.ஏ.தான் படிச்சு இருக்கேன். முதலில் ஒவ்வொரு கல்யாணம் வரும்போதும் என் வீட்டு மொய் நோட்ட எடுத்துப் பார்த்து மத்தவங்களுக்கு மொய் செய்வது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அதனால் இதுக்கு ஏதாவது ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கணும்னுதான், இந்த ’மொய் டெக்’ அப்படின்ற ஒரு விஷயத்தை கண்டு பிடிச்சேன். இப்போ இதுக்குன்னு தனியா ஆப் வச்சிருக்கோம். முதலில் இந்த யோசனை வந்தபொழுது, பழைய மொய் நோட்டைக் கொடுத்தா கம்ப்யூட்டரில் டைப் பண்ணி ஒரு புக் மாதிரி போட்டுக்கொடுப்போம்னுதான் ஆரம்பிச்சேன். பின்னர்தான் விழாக்களுக்கே சென்று மொய் வசூல் செய்யும் வேலையை எடுத்துச் செய்யலாம்னு தோன்றியது.

கம்ப்யூட்டர் எடுத்துட்டு போய் அதுல பில் பண்ணி கொடுத்துடுவோம், பிறகு ஃபங்க்ஷன் வீட்டுக்காரங்களுக்கு மொத்தமா எவ்வளோ மொய் வந்திருக்கு, எந்த ஊர்க்காரங்க மொய் செஞ்சு இருக்காங்கனு ஊர் வாரியா தனித் தனியா பிரிச்சு ஒரு புக் போட்டுக் கொடுத்துடுவோம். நான் இதை ஆரம்பிக்கலாம்னு சொல்லும்போது என் மாமா மோகன்தான் ரொம்ப சப்போர்ட் பண்ணாரு. அப்புறம் ஆப் தயாரிக்க என் காலேஜ் நண்பர் ஒருவர் உதவினார். இத ஆரம்பிச்சு, முதல் ஃபங்க்ஷன் எங்க உறவுக்காரங்களுதுதான். அவர் வீட்டு ஃபங்க்ஷனுக்கு அழைத்த அனைவருக்கும் ஒரு நாள் முன்னரே வந்து விழாவை சிறப்பிக்கணும்னு கேட்டு ஒரு ரிமைண்டர் மெஸேஜ் அனுப்பணும்னு கேட்டார். நான் 'அது கொஞ்சம் கஷ்டம். நான் உங்களுக்கு இன்னொரு உதவி பண்றேன். மொய் கலெக்ட் பண்ணி உங்களுக்கு அழகா ஒரு புக் போட்டு கொடுத்துடுறேன்'னு சொன்னதுக்கு, அந்த மாதிரி பண்ண முடியுமானு ஆச்சரியப்பட்டார். 'பண்ணலாம் என்கிட்ட அதுக்கான எல்லா விஷயமும் இருக்கு, ஆனா இதுவரைக்கும் பண்ணக்கூடிய சூழ்நிலை இல்லாம இருகேன்;னு சொன்னதுக்கு, அப்போ நம்ம வீட்டு ஃபங்க்ஷனுக்கே பண்ணுங்கனு கூப்பிட்டாரு. அப்படித்தான் எங்க முதல் ஃபங்க்ஷன், முதல் வாய்ப்பு வந்தது” என்று சொன்ன பிரபு அதை தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். அத்துடன் சேர்த்து தன் முயற்சிக்கான வரவேற்பையும் தான் சந்தித்த பிரச்சனைகளையும் விவரித்தார்.

”மொய் டெக் பத்தி கேள்விப்பட்டு எங்க ஊர் தலைவர் என்னை கூப்பிட்டு, எங்க ஊர் கோவில் திருவிழாவுக்கு பண்ணித்தர சொன்னாங்க. அதுதான் நாங்க பண்ண முதல் பெரிய ஃபங்க்ஷன். அதுலதான் நாங்க வெளி ஆட்களுக்கு தெரியவந்தோம். அடுத்தது மதுரை பாண்டியன் மெஸ் ஹோட்டல்காரங்க அவங்க கோவில் திருவிழாவில் மொய் கலெக்ட் பண்ண சொன்னாங்க. அதையும் சிறப்பா பண்ணிக்கொடுத்தோம்.

அந்த சமயம் மறக்க முடியாத விஷயம் ஒன்னு நடந்தது. ஒரு விசேஷ வீட்ல இந்த மாதிரி மொய் கலெக்ட் பண்ணி கொடுத்துட்டு வந்துட்டோம். பத்துநாள் கழிச்சி மொய் எழுதுன ஒருத்தர், அவர் கையில கொடுத்த பில்லில் பிரிண்டாகி இருந்த எழுத்து எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு என் கடைக்கு வந்து கொஞ்சம் பிரச்சனை பண்ணாரு. அப்புறம் அவருக்கு எடுத்துச் சொல்லி விசேஷ வீட்டுக்காரங்ககிட்ட இருக்க நோட்ல போய் பாருங்க எல்லாம் சரியா இருக்கும்னு சொன்னேன். அதுக்கு அப்பறம் அவர் அங்க போய் பார்த்துட்டுவந்து இது நல்லா இருக்கு தம்பி என்கிட்ட இருக்க நோட்டையும் கொண்டுவந்து தரேன் எனக்கும் அதுமாதிரி பண்ணிக்கொடுன்னு கேட்டாரு. நான் மொய் டெக்குனு தனியா ஆபிஸ் போட்டு, முதல் கஸ்டமரா அவருடைய நோட்டத்தான் மாத்திக்கொடுத்தேன்.

இப்போதைக்கு நிரந்தரமா எங்க கிட்ட அஞ்சு பேரு வேலை செய்றாங்க, அதைத்தாண்டி ஆட்கள் வேண்டும்னா பார்ட் டைமா காலேஜ் படிக்கற பசங்க வருவாங்க. முதல்ல இதை ஆரம்பிக்கும்போது, ஒரு சமூகத்தினர் மட்டும்தான் எங்களை ஏத்துக்கிட்டாங்க, அதுக்கு அப்பறம் இப்போ சமீபத்தல ஒரு இஸ்லாமியர் வீட்டு விசேஷம் பண்ணோம். எங்களப் பத்தி கேள்விப்பட்டு கோயம்புத்தூரில் ஒரு மலையாளி கூப்பிட்டு இருக்கார்” என்று தன் புதுமையான சிந்தனை மூலமாக பாரம்பரிய வழக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு செல்கிறார் மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் பிரபு. மொய் வழக்கம் குறித்து பல கருத்துகள் இருந்தாலும், இப்போது இருக்கும் ஒரு வழக்கத்தை மக்களுக்கு எளிதாக மாற்றியிருக்கிறார் இவர். மிகப்பெரிய தொழிலை ஆரம்பித்து உலக பணக்காரர்களாக இருப்பவர்கள் மட்டுமே இன்ஸ்பிரேஷன் அல்ல, நம் மத்தியில் சின்னச் சின்ன புதிய சிந்தனையில் சொந்தத் தொழில் செய்பவர்களும்கூட இன்ஸ்பிரேஷன்தான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT