Advertisment

"ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இந்த சமூகம் தான் பெரும் பிரச்சனை" - மனநல ஆலோசகர் லட்சுமி பாலகிருஷ்ணன் வேதனை!

 Lakshmi Balakrishnan Interview about Autism

Advertisment

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாம் சிறப்பு குழந்தைகள் என்று அழைக்கிறோம். ஆம், அவர்கள் கடவுளின் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கான உண்மையான தேவைகள் என்னென்ன, சமூகம் அவர்களை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து நம்மோடு எழுத்தாளர், சிறப்புக் கல்வியாளர், மனநல ஆலோசகர் லட்சுமி பாலகிருஷ்ணன் பகிர்ந்துகொள்கிறார்

நானும் ஒரு சிறப்பு குழந்தையின் தாய் தான். ஆட்டிசத்தில் பேசக்கூடிய குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள் என்று இரு வகைகளில்உள்ளனர். பேச முடியாத குழந்தைகளுக்கு தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும்போது அவர்களுடைய நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தெரிந்தது. தாங்கள் சொல்ல விரும்புவதை செயலிகளின் மூலம் தெரிவிக்கும்போது அவர்களுடைய கோபம் குறைந்து மனம் அமைதியடைகிறது. எனவே இந்தக் குழந்தைகளுக்காக இலவசமாக ஒரு தொடர்பு சாதனத்தை நாம் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். எங்களுடைய டிரஸ்டின் சார்பில் அரும்பு மொழி என்கிற செயலியை உருவாக்கினோம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் இந்த செயலியை தினமும் பயன்படுத்தலாம்.

பெற்றோர் நினைத்தால் ஓரளவுக்கு இயல்பான வாழ்க்கையை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு வழங்க முடியும். குழந்தைகளை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய குழந்தைகள் வேறுபட்டவர்களே தவிர, எந்த வகையிலும் தாழ்வானவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் இருக்கும். குழந்தைகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். இந்தக் குழந்தைகளுக்கு நம்முடைய சமூக மனநிலை தான் பெரிய சிக்கலாக இருக்கிறது. பொது இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லும்போது அந்தக் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்டு மக்கள் எரிச்சலை வெளிப்படுத்துகின்றனர். இதனால் அவர்களை வெளியே அழைத்துச் செல்லவே பெற்றோர் பயப்படுகின்றனர்.

Advertisment

பல பொது இடங்களில் அவர்களை அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போடுகின்றனர். சாமி அனைவருக்கும் சமம் தான். ஆனால் கோயில்களுக்கு இவர்களை ஏன் அழைத்து வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள். போராட்டங்களின் மூலம் தான் இவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. இந்தக் குழந்தைகளை நாம் தனிமைப்படுத்தக் கூடாது என்கிற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும். என்னுடைய மகனை செயல்வழிக் கல்வி பள்ளியில் சேர்க்கச் சென்றபோது அங்கிருந்த ஒரு ஆசிரியை ஆட்டிசம் என்றவுடன் அவ்வளவு அதிர்ச்சி அடைந்தார்.

அரசு, அமைப்புகள் எல்லாம் சாதகமாக இருந்தாலும் தனிமனிதர்கள் பல நேரங்களில் அப்படி இருப்பதில்லை. என்னுடைய மகனை அரசுப் பள்ளியில் சேர்த்தோம். அங்கு அனைவரும் அவனை மிக நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர். அங்கு அவனுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். என்னிடம் கவுன்சிலிங்கிற்கு வரும் பெற்றோரிடம் அரசுப் பள்ளிகளைத் தான் நான் பரிந்துரைக்கிறேன். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை வற்புறுத்தி நாம் எதையும் செய்ய வைக்க முடியாது. அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவர்களிடம் இருக்கும் திறமைகள் அசாத்தியமானவை.

autism
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe