ADVERTISEMENT

நீல நிறமாக மாறிய நினைவுச் சின்னங்கள் - காரணம் இதுதான்!   

01:31 PM Apr 04, 2018 | vasanthbalakrishnan

கடந்த திங்களன்று (ஏப்ரல் 2) மாலை டெல்லி குதுப் மினாரைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. முழுவதும் நீலமாக மாறி ஜொலித்தது. எதற்காக நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று விசாரிக்க, ஏப்ரல் 2 சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் என்றும் மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய தகவல்களைப் பரப்ப ஒரு குறியீடாக நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் 16,000க்கும் அதிகமான முக்கிய கட்டிடங்கள் நீல ஒளி ஏந்தி நின்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தொடங்கி, எம்பயர் ஸ்டேட் கட்டிடம் - நியூயார்க், நயாகரா அருவி - கனடா, கிறிஸ்டோ ரெடென்டர் - பிரேசில், நெல்சன் மண்டேலா பாலம் - சவுத் ஆப்ரிக்கா, பிரமிட் - எகிப்த், பழைய பாராளுமன்ற கட்டிடம் - ஆஸ்திரேலியா போன்றவை அவற்றில் முக்கியமானவை. இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் ஆட்டிசம் என்றால் என்ன? அது வெளிநாடுகளில் நகரங்களில் மட்டுமே இருப்பதா?

ADVERTISEMENT



இயற்கை, நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனாலும் வாழ்வு அனைவருக்கும் ஒன்றாக இல்லை. சிலர் தத்தளித்து எதிர்நீச்சலிட்டே வாழவேண்டியிருக்கிறது. அதிலும் சில சமயங்களில், இறக்கைகளை பிடுங்கிக் கொண்டு "பறந்து செல் பார்க்கலாம்" என்று கூறுவது போல பிறப்பிலேயே உடல் கூறுகள் சில மனித மனங்களை பதம் பார்த்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் ''ஆட்டிசம்''. இது நோய் அல்ல, இது ஒரு குறைபாடு. ஆனால் இது வருவதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை. இதற்கான முழு மருத்துவ முறை, மருந்து, மாத்திரை என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முறையான சில பயிற்சிகள் மூலம் மேம்படுத்தலாம். அமெரிக்காவில் 150க்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் சரியான எண்ணிக்கை நம் அரசிடமில்லை.

ADVERTISEMENT

வெள்ளை மாளிகை

பிரமிட்

'தன் முனைப்பு குறைபாடு' எனப்படும் ஆட்டிசம் பாதிப்பு நிறைந்த குழந்தைகள் எப்பொழுதும் சிறப்பு கவனத்தில் இருக்க வேண்டியவர்கள். இவர்களால் தங்களுடைய வேலைகளை தானே செய்து கொள்ள முடியாது. எப்போதும் தனிமையில் இருப்பார்கள், பேச்சில் வார்த்தைகள் முறையாக, சீராக இருக்காது, தனக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறமாட்டார்கள். கண்களை உற்று நோக்கிப் பேசமாட்டர்கள், அவர்களுக்கென தனி உலகம், அதில் தனிமையில் வாழும் சிறப்பு உயிர்கள் அவர்கள். ஆனால் இந்த குறைபாட்டை மனநோய் என்று பார்க்கும் போக்கே இந்தியாவில் இருக்கிறது. மற்றவர்களால் மட்டுமல்ல ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களே இப்படித்தான் நினைக்கிறார்கள். உண்மையில் இது மனநோய் அல்ல. அதே போல் இது முற்றிலும் குணமடையும் குறைபாடும் அல்ல என்பதுதான் மனதை சமாதானப் படுத்தமுடியாத ஒரு பதில்.

ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கென சில பயிற்சிகள் முழு தீர்வை தராவிட்டாலும் சில முன்னேற்றங்களை கண்டிப்பாக கொண்டுவரும். அவற்றில் நடத்தை சீராக்கல் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சி, பேச்சுப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் முறையாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக அவர்களின் வாழ்விலும் நடைமுறைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படும்.


அன்றாட வாழ்வின் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருவதே அவர்களுக்கான முதல் பயிற்சியாக இருக்கும். இந்த ஆட்டிசம் பாதிப்பு எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தையோடு மற்றொரு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை ஒப்பிட முடியாது. எல்லோரும் தனித்தனி உலகத்தில் இருப்பவர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஒரு சில திறமைகள் இருக்கும். அதை கண்டுபிடிப்பது அவர்களை உற்றுநோக்கி வளர்க்கும் பெற்றோரால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும். சில குழந்தைகள் கணிதத்தில், இசையில், பஸ்சில்ஸ் போன்ற ஏதேனும் ஒரு திறமையை கொண்டிருப்பார்கள். அதுவும் அந்தத் திறமை அதீத திறமையாகவே இருக்கும் அதை கண்டுபிடித்து வெளிக்கொணர்வது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. இந்த சமூகமும் கூட ஒரு பெரும் மனவியல் குறைபாட்டை கையாளத் தெரியாமல், 'இவையெல்லாம் முன்வினை பயன், அது இது' என்று பேசுகிறது. இதை புரிந்து கொண்ட சில நாடுகளும் மக்களும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, சிறப்புக் குழந்தைகள் என்ற பார்வையில் அவர்களுக்கென ஒரு அங்கீகாரத்தை, ஒரு ஒத்துழைப்பைக் கொடுத்துவருகிறது. நாமும் அதற்கு தயாராவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT