Advertisment

முதுகு வலி வந்தால் செய்யக்கூடாதவை!

 if you have back pain; don't do this thing

Advertisment

இன்றைய தேதியில் முதுகு வலி, கழுத்து வலி இல்லாத மனிதரைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அவற்றுக்கான சரியான காரணங்களும் தீர்வுகளும் தெரியாமல் தவறான சிகிச்சைகளை நம்பி மேற்கொள்ளும் நிலையில் தான் பலரும் இருக்கின்றனர். அவற்றையெல்லாம் விடுத்து, முதுகு வலி மற்றும் கழுத்து வலிக்கான சரியான காரணங்களையும் தீர்வுகளையும் அளிக்கிறார் மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மரியானோ புருனோ.

முதுகு வலி என்பது முதுகில் இருக்கும் எந்த உறுப்பிலிருந்தும் வரலாம். சவ்வு, முதுகுத்தண்டு, இரத்தக் குழாய், கொழுப்பு போன்ற திசுக்கள், தசை, தோல் ஆகியவற்றில் இருக்கும் பிரச்சினைகளினால் முதுகு வலி ஏற்படலாம். இதில் எந்த உறுப்பில் இருந்து முதுகு வலி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கான சிகிச்சைகளும் மாறுபடும். மேலும் இவை பிறவிக் காரணங்களாலும் ஏற்படலாம்.சமீப நிகழ்வுகளினாலும் ஏற்படலாம். இங்கு பலரும் செய்யும் தவறு என்பது முதுகு வலி ஏற்பட்ட உடனேயே உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றை மேற்கொள்வது தான். தசைப் பிடிப்பினால் முதுகு வலி ஏற்பட்டால் உடற்பயிற்சியும் பிசியோதெரபியும் தீர்வாக அமையலாம். ஆனால் எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் முதுகு வலிக்கு அவை கெடுதலாக அமைந்துவிடும் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இவை இரண்டுமல்லாமல் வேறு காரணங்களினால் முதுகு வலி ஏற்பட்டால் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் அதுவே முழுமையான தீர்வல்ல.

முதுகுத் தண்டில் ஏற்படும் சிறிய கட்டிகளுக்கு ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதிலிருந்து மீண்டு விடலாம். ஆனால் அதைச் செய்யாமல் உடற்பயிற்சி, பிசியோதெரபி போன்றவற்றை மேற்கொண்டால் கட்டி பெரிதாகி, பரவி, அதன் தாக்கம் அதிகமாகி நடக்க முடியாத நிலை ஏற்படும். அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் கால்களுக்கு முன்பிருந்த பலம் இருக்குமா என்பது சந்தேகமே. மூன்று நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுப்பதே சிறந்தது. தசைப்பிடிப்பு தவிர பிற காரணங்களுக்காக முதுகு வலி ஏற்படும்போது அதற்கு உடற்பயிற்சி செய்வது எந்த வகையிலும் தீர்வில்லை. உங்கள் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயின் மீது ஒரு கல்லை எடுத்து ஒருவர் வைத்துவிட்டால் தண்ணீர் செல்வது பாதிக்கப்படும். அதை உடனே கண்டறிந்து அந்தக் கல்லை நீக்கிவிட்டால் செடிகள் காப்பாற்றப்படும்.இல்லையேல் வாடிவிடும். எனவே தாமதம் எந்த வகையிலும் பயன் தராது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisment

நரம்புகள் பாதிக்கப்படுவதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. முதுகு வலியோடு நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால் உங்கள் உடலை சோதித்து உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பதை மருத்துவர்கள் கூறுவார்கள். தற்சமயம் அறுவை சிகிச்சை தேவையில்லை, பின்னாளில் தேவைப்படலாம் என்கிற நிலையும் சிலருக்கு ஏற்படும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவராக நீங்கள் இருந்தால், எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறீர்களோ அவ்வளவு நல்லது. அறுவை சிகிச்சை தேவையில்லையெனில் மாத்திரைகளும், சரியான உணவுமே போதுமானவை. எனவே விரைந்து கண்டறியுங்கள்;விரைந்து மருத்துவமனை செல்லுங்கள்;விரைந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்;முதுகு வலியில் இருந்து விரைந்து குணமடையுங்கள்.

Backpain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe