/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfsf_1.jpg)
இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். இரட்டையர்கள், எல்லா சூழ்நிலையிலும் அவர்களின் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிப்பார்கள். இரட்டையர்கள் என்றால், எல்லோரும் அவர்களை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்ப்பார்கள். வீட்டில் இரட்டையர்கள் பிறப்பது, கடவுள் கொடுத்த வரம் என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.
அப்படி பிறக்கும் இரட்டையர்கள், ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும், அவர்களின் ஐடென்டிக்கல் DNA 100% ஒரே மாதிரியாக இருக்குமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும்.
ஒரே கருமுட்டையில் இருந்து தோன்றும் 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்', ஒரே மாதிரியான மரபணுக்களை அவர்களது பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர். இருந்த போதிலும், இரட்டையர்கள் பிறக்கும் தருணத்தில் அவை மரபணு ரீதியாக ஒத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. தாயின் கருப்பையில் இந்த 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' மரபணு மாற்றத்திற்கு உட்படுவதே இதற்கு காரணம். செல்களில் உள்ள DNA -க்கள் தானாக புதிய DNA வடிவங்களை உருவாக்குகின்றன. சாதாரணமாக இவை வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்திலேயே சராசரி மரபணு மாற்றங்களின் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரட்டையர்களில் ஒருவருக்கு மரபணு மாற்றங்கள் எல்லா செல்களிலும் நிகழ்கின்றன. மாறாக இந்த இரட்டையர்களில் மற்றொருவருக்கு எவ்வித மாற்றங்களும் நிகழ்வதில்லை.
கரி ஸ்டீபன்சன் (Kari Stefansson) என்ற ஆராய்ச்சியாளரின் ஆய்வில், சராசரியாக 15% 'ஐடென்டிக்கல் இரட்டையர்களில்', ஒரு குழந்தை குறிப்பிட்ட தகுந்த அளவு மரபணு (genome) மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆனால், இரட்டையர்களில் மற்றொரு குழந்தை இந்த மாற்றங்களை மேற்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மனித மரபணுக்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், 10 முதல் 15 மரபணு மாற்றங்கள் இந்தக் கரு வளர்ச்சியின்போது நடைபெறும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘இந்த மரபணுக்களில் எந்த குறிப்பிட்ட வரிசையில் மரபணு மாற்றங்கள் நிகழ்கின்றன என்று இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடரும் பட்சத்தில், வருங்காலத்தில் இது பற்றிக் கண்டறியப்படலாம்’ என்று ஸ்டீபன்சன் தெரிவித்துள்ளார்.
சைக்கோட் (zygote) என்று அழைக்கப்படும் ஒரே ஒரு கருவுற்ற முட்டை இரண்டாகப் பிரிந்து இரண்டு கருக்களை உருவாக்குகிறது. பெரும்பாலும், இந்த நிகழ்வு கருவுற்ற 1 முதல் 7 நாட்களுக்குள் நிகழ்கிறது. ஆனாலும், ஒரு சில சமயங்களில் இந்த நிகழ்வானது அரிதாகக் கருவுற்று 8 முதல் 12 நாட்களிலும் நிகழலாம்.
இந்தப் பிரிதல் நிகழ்வு 8 முதல் 13 நாட்களுக்குள் பிரியுமாயின் அதிக அளவிலான செல் மூலக்கூறுகள் இந்த இரட்டையர்கள் பிரியும் முன்னரே வளர்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இரட்டையர்களில் ஒரு குழந்தை அதிக மாறுபாடுகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்தப் பிரியும் நிகழ்வானது, கரு வளர்ச்சியின் மிக ஆரம்பக் கட்டத்திலேயே பிரிவுற்றதை இது உணர்த்துகின்றது. மேலும், இந்த பிரிதல் நிகழ்வு 10-க்கும் மேற்பட்ட செல்களின் வளர்ச்சி நடந்த பிறகே நிகழுமாயின், ஒரு குழந்தை மட்டும் அதிக அளவில் செல் மூலக்கூறுகளை எடுத்துக்கொண்டு வளரவும் வாய்ப்புள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/f_7.jpg)
இயற்கை மரபியல் (Nature Genetics) என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வில், மூன்று தலைமுறையினரைக் கொண்ட மனிதர்களின் DNA-க்களை ஆராய்ச்சி செய்து, கீழ்க்கண்ட புதிய கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சியில், 387 'ஐடென்டிக்கல் இரட்டையர்கள்' மற்றும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் பங்கு பெற்றனர். இந்தக் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்ததில், எந்த இரட்டையர்களிடையே எவ்விதமான மரபணு மாற்றங்கள் நிகழ்ந்தன. அவை, எவ்வாறு அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்பட்டன என்பது தொடர்பான பல்வேறு காரணிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சி முடிவுகளில் 'ஐடென்டிக்கல் இரட்டையர்கள்' 100% ஒரே மாதிரியான DNA வைக் கொண்டிருப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த மரபணு மாற்றங்கள், ஒரு சில நோய்களுக்கு அல்லது பண்புகளுக்குக் காரணமாக அமைகின்றது.
இரட்டையர்கள் பொதுவாக ஒரே இடத்தில்தான் வளர்க்கப்படுவர். இருப்பினும், அவர்களுக்கிடையே தனிப்பட்ட குணங்கள் மற்றும் உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மற்றுமொரு ஆராய்ச்சியின் முடிவில், குணம் அல்லது உருவகத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களைக் காட்டிலும், வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்கள் அதிக அளவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களைப் பொதுவாக, இரத்த வகை, கண் நிறம், முடி நிறம், கால்கள், கைகள் மற்றும் காதுகளின் வடிவம் வைத்துக் கண்டறியலாம். இவற்றைத் தவிர்த்து, DNA பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறியலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)