Advertisment

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21

பெண்களின் வாழ்வில் அதிமுக்கியமான காலம். தம் உயிரை கொடுத்து வயிற்றில் வளர்த்த பிள்ளையை உலகுக்கு அறிமுகப்படுத்தும் காலம். இதில் சுகப்பேறுகாலம், சிசேரியன் என்ற இரண்டு வகைகள் உள்ளன. சுகப்பிரசவத்தில் பிரசவ வலி முறையாக ஏற்பட்டு குழந்தை பெறப்படுகிறது. சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறப்படுகிறது.

Advertisment

vazhiyellam vaazhviom

சுகப்பேறுகாலம்:

இயற்கையோடு இயைந்து வாழ்கையில் சர்வ சாதாரணமாக இருந்த இந்த வகை பேறுகாலம், இப்போது அரிதாகி வருகிறது. பேறுகால வலி பொறுக்காமல் சிசேரியன் வழியில் பிள்ளை பெறுவதையே இளம்பெண்கள் இப்போது விரும்புவதாக மகப்பேறு மருத்துவர்கள் கவலையுறுகின்றனர். சுகபேறுகாலத்தில் குழந்தை பெரும் வரையிலும் மற்றும் சில நாட்கள் மட்டுமே வலி இருக்கும். அதன்பின் சராசரி வாழ்வியலை நடத்துவதற்கு ஏதுவாக மகளிரின் உடல் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும். எனவே சுகபேறுகாலத்துக்கான அடிப்படைகள் குறித்து காண்போம்.

Advertisment

உணவு முறைகள்:

கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து எடை குறையலாம். அதிக எடை இழப்பு தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

vazhiyellam vaazhvom

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாவிடினும் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணாவிட்டால், அது ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல், மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தாய்மையுற்ற நாளில் இருந்தே நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச்சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச்சத்துக்குப் பேரீச்சை ஆகியவை முக்கியமாகின்றது.

கருவுற்ற நாலாவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்துமிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். நார்சத்துக்கள் நிரம்பியுள்ள காய் கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச்சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக் குடத்துக்கு நல்லது!

எளிய உடற்பயிற்சிகள்:

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்ப து மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்று கொஞ்சம் இலகுவாக இடுப்பு எலும்பு சரியாக வளைந்து கொடுத்தால் பேறுகாலம் எளிதாகும். அதனால் பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.

vazhiyellam vaazhvom

நடைப்பயிற்சியை “உடற்பயிற்சிகளின் அரசன்” என்று மருத்துவம் கூறுகிறது. எனவே நடைப்பயிற்சி தாய்மையுற்றவர்களுக்கு அவசியம். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம். நடைபயிற்சி- உடற்பயிற்சி எதுவாகினும், ஓர் இயன்முறை மருத்துவரின் முறையான ஆலோசனை பெற்ற பின் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது.

எடை அதிகரிப்பு:

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோர்த்திருக்கிறது என்று அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்புச்சத்து பரிசோதனையும், ரத்த அழுத்த பரிசோதனையும் முக்கியம்.

பாட்டி வைத்தியம் :

கால் வீக்கத்தைக் குறைக்க பார்லி கஞ்சி அல்லது தண்ணீரை கருவுற்ற பெண்களுக்கு வழங்கும் வழக்கம் இன்றுவரை உள்ளது. மேலும் சூடான அரிசி சோறு வடித்த தண்ணீரில் கொஞ்சம் வெண்ணெய் போட்டு கருவுற்ற பெண்ணை கொடுக்க வைத்தால் தேவையற்ற நீர்ச்சத்து போன்றவை குறைந்து சுகமாய் பேறுகாலம் நடக்கும் என்பது நிரூபிக்கப்பட்டதாய் உள்ளது. மேலும் இரவு உறங்கச் செல்லும்முன் ஒரு குவளை தண்ணீரில் ஒரே ஒரு கிராம்புவை போட்டு மூடி வைத்துவிட்டு, காலையில் அந்தத் தண்ணீரை அருந்துவதும் பேறுகால எளிமையாக்கள் முறையாக கருதப்படுகிறது. இன்னும் எங்கள் நெல்லை மாவட்ட கிராமங்களில் தாய்மையடைந்த பெண்களுக்கு இவற்றை கடைக்கோடி கிராமம் வரை கடைப்பிடித்தே வருகின்றனர்.

மன நலம்:

தாய்மையுற்ற பெண்ணின் உடல்நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அப்பெண்ணின் மனநலம். இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக. இன்றைய காலகட்டத்தில் சுகப் பேறுகாலத்துக்கு முக்கிய எதிரி பெண்களுக்குப் பேறுகால வலி மீது உள்ள பயம். இந்தப் பயத்தை எதிர் கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். பேறுகள் வலி என்பது எல்லா பெண்களுக்கும் உரியதே. அது தாங்கிக்கொள்ளும் அளவிலானதுதான். எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்" என்று ஒவ்வொரு கட்டத்திலும் அப்பெண்ணுக்கு குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கை அளிக்க வேண்டும். தாயின் மனநிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் – கவலைகளை நீக்கி பேறுகாலத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.

சிசேரியன் முறை:

சீசரியன் முறை என்பதே சரியான வார்த்தை. ஆம். அந்தக்காலத்திலேயே, ஜூலியஸ் சீசர் இந்த அறுவை சிகிச்சை முறையில்தான் பிறந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தக்கால நவீனப் பெண்கள் அதனால் தான், "சீஸரே அறுவைச்சிகிச்சையில் தானே பிறந்தார். நாங்களும் அப்படியே செய்து கொள்கிறோம்" என்று கூறும் அளவு பேறுகால வலியை தவிர்க்கின்றனர்.

இந்தியாவில் 55% பெண்களுக்கு சிசேரியன் முறையில்தான் குழந்தை பிறப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் சிசேரியன் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது என்றும் தேசியக் குடும்ப சுகாதார அமைப்பு சொல்கிறது. சிசேரியன் முறை பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் அடுத்த வழியெல்லாம் வாழ்வோம் பாகத்தில் காண்போம்.

முந்தைய பகுதி:

பெண்கள் தாய்மையடைவதைத் தடுப்பது எது? வழியெல்லாம் வாழ்வோம் - #20

அடுத்த பகுதி:

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Pregnant woman Pregnant vazhiyellam vaazhvom
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe