Skip to main content

பெண்கள் பூப்படையும்போது கவனிக்க வேண்டியவை... - வழியெல்லாம் வாழ்வோம் #17

indiraprojects-large indiraprojects-mobile

பூப்படைதல், சடங்கு என்று பல பெயர்களில் குறிப்பிடப்படும் பெண்குழந்தைகளின் பருவமாற்றம், பெண்களின் வாழ்வின் அதிமுக்கியமான காலம். அந்த காலகட்டத்தை பிள்ளைகள் சரியாக அணுக இந்த சமூகமும் குடும்பங்களும் உதவுகின்றனவா என்பது கேள்விக்குறியே.

 

vazhiyellam vaazhvom


 

தாய்மாமன் சீர், தங்க வெள்ளிப்பாத்திரப் பகட்டுகள், ஊர் அதிரும் மேள தாளங்கள் என்று அத்தனை வகையிலும் தங்கள் குடும்ப கௌரவத்தை உலகுக்கு தண்டோரா போடுவதற்கு செலவிடும் நேரத்தையும், கவனத்தையும் வயதுக்கு வந்த குழந்தையின் மனோநிலையை தெளிவாக்குவதற்கு பெரும்பாலான குடும்பங்கள் காட்டுவதில்லை. அதன் விளைவுதான் பெண் குழந்தைகள் அந்த வயதிலிருந்தே மனஉளைச்சலுக்கு உள்ளாக காரணமாகிறது. இந்தக்கட்டுரை, பூப்படைதலின் அடிப்படை உடற்கூறியல், உடலியல் மாற்றங்களை விளக்குகிறது.


பூப்படைதலின் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்கள்:

ஹார்மோன்களின் தலைவன் பிட்யூட்டரி  என்ற  சுரப்பி.  இதை  மூளையில்  உள்ள  தலாமஸ் என்ற  பகுதி கட்டுப்படுத்துகிறது.  இது  நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச் செய்கிறது. பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம்பிக்கும். அந்த காலகட்டத்தில், கருவகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரான் ஆகிய இரு வகையான ஸ்டிராய்டு ஹார்மோன்களை சுரக்கின்றன. இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் ஈஸ்ட்ரோஜன் முக்கிய காரணியாகயாகும்.  மார்பகங்களின் வளர்ச்சிக்கும் முறையான மாதவிலக்கு ஏற்படுவதிலும் ஈஸ்ட்ரோஜன் இன்றியமையாதது. புரொஜெஸ்டிரோன் கருப்பை வளர்ச்சிக்கும், கருப்பையை குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் உதவுகிறது. எனவே சரியான ஹார்மோன் விகிதல் இருந்தால், பூப்படைந்த பெண்ணின் மாதசுழற்சி சரியானதாய் அமையும். இந்த ஹார்மோன்களின் சுரப்பும், அதனால் ஏற்படும் முகப்பரு, உடல்வலி சார்ந்த பிரச்சனைகளும் சாதாரணம்தான். ஆனால் வயதுக்கு வந்த பெண் குழந்தையால் இந்த திடீர் மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ள இயலாது. மாதவிடாய்க்காலங்களின்போது ஏற்படும் வலிகளுக்கும் அந்தக் குழந்தை மனதளவில் தயாராகியிருக்காது. அதன் விளைவாகவே, எரிச்சலைடைதல், கோபப்படுதல் போன்றவை. 

 


குழந்தைகளின் அறியாமை:

பருவமடையும் ஒரு சிறுமியின் மனதை இனம்புரியாத உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கின்றன. குழப்பமும், பயமும், கவலையும் அவளை வாட்டுகின்றன. அதற்கு காரணம் :   மாதவிடாய் பற்றி எதுவுமே தெரியாதிருப்பது அல்லது தவறாகத் தெரிந்து வைத்திருப்பது. மாதவிடாய் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் சிறுமிகள் அது ஆரம்பமாகிற சமயத்தில் தைரியமாக இருக்கிறார்கள். ஆனால் நிறைய சிறுமிகளுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருப்பதில்லை என ஆய்வுகள் காட்டுகின்றன. 23 நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் பேட்டி காணப்பட்டபோது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் மாதவிடாய் பற்றி ஒன்றுமே தெரியாதிருந்ததாகச் சொன்னார்கள். திடீரென ஒருநாள் வயதுக்கு வந்தபோது என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்ததாகவும் சொன்னார்கள்.

எனவே இந்த உடல் மற்றும் மனவலிகளையும், குழப்பங்களையும் போக்கும் விதமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தல் அவசியம். உடல்வலிகளின் வீர்யம் குறைந்தாலே, மன உளைச்சலிலிருந்து குழந்தைகளை மீட்டுவிடலாம். அத்தைகய பாரம்பர்ய உணவு முறைகள் பற்றி காண்போம்.

 

 


உடல்வலிகளை குறைக்கும் உணவு முறைகள்: 

உதிரப்போக்கு இருப்பதால், பெண் பிள்ளைகள் சரிவிகித, கலப்பு உணவுகளை சரியான அளவில் உட்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு முதலில் தோன்றுவது ரத்த சோகை எனப்படும் அனீமியா குறைபாடு. இந்த ஹீமோகுளோபின் எனப்படும் சிவப்பணு குறைப்பாட்டால், குழந்தைகள் எப்போதும் சோர்வாகக் காணப்படுவர். அதேபோல் கால்சியம் சத்துக் குறைபாட்டால் கால் உளைச்சல், இடுப்பு வலி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.


 

சரிவிகித உணவு (Balanced Food):

சரிவிகித, கலப்பு உணவென்பது நம் பாரம்பர்ய உணவு முறையில் நம் முன்னோர்களால் நடைமுறையில் இருந்ததே. எல்லா வகையான சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதுபோல் சமைத்து வழங்கப்படும் உணவு சரிவிகித உணவு எனப்படும். பொதுவாக உடலுக்குத் தேவையான சத்துக்களை, விட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் என்று வகைப்படுத்தலாம். இவை அனைத்தும் ஒவ்வொரு வேலையும் நம் உணவில் இருக்குமாறு கவனித்து உணவுகளைத் தயாரித்து உண்ணும் முறை, சரிவிகித உணவுமுறை எனப்படும். இந்த சத்துக்கள் கிடைக்குமாறு கலந்து உணவுகளை உண்பதால் இது கலப்பு உணவு (Mixed Food) எனப்படுகிறது.


எடுத்துக்காட்டாக சாதம், பருப்பு, ரசம், காய்கறிகளின் கூட்டு, ஆகியவற்றை சொல்லலாம். இதில் சாதத்தில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரோட்டீனும், காய்கறிகளில் வைட்டமின், மினரல், பைபர் உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருந்தாலேயே இது சரிவிகித உணவு என கூறப்பட்டது. இந்த சரிவிகித உணவு முறையுடனான தமிழனின் உறவு தற்போது முறியும் தருவாயில் இருக்கிறது. முன்னதாக ராகி, கம்பு, சோள வகை உணவுகளுடனான தமிழனின் உறவு முறிந்து பல வருடங்கள் கடந்து விட்டன. இப்போது அதீதமாய் நாம் பயன்படுத்தும் துரித உணவுகளான பிட்சா, பர்கர், பாஸ்தா போன்றவற்றில் சரிவிகித சத்துக்கள் கிடைப்பதில்லை.

 


பூப்படைந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு  உணவுகள்:

தமிழர்களின் வாழ்வியலில், பூப்படைந்த பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒரு மாத கால கவனிப்பை பல நூல்கள் எடுத்துக்கூறுகின்றன. அத்தகைய காலங்களில் குழந்தைகளுக்கு முழு நேர ஓய்வு கொடுப்பதும், சரியான உணவுகளை வழங்கி அவர்களின் உடலை வலுவாக்குவதும் வழக்கமாய் இருந்தது. ஆனால் இப்போது பள்ளிகளில் அவ்வளவு விடுமுறை கொடுப்பதில்லை. அதனால் குறைந்தபட்சம், சரியான உணவுகளையாவது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

 

குழந்தை வயதுக்கு வந்த நாள் முதல், காலையில் எழுந்தவுடன் உளுந்தங்களி அல்லது புட்டு போன்ற பச்சரிசிப் உணவுகளைக் கொடுக்க வேண்டும். அவை குழந்தைகளின் எலும்புகள் (குறிப்பாக இடுப்பெலும்புகள்)  பலம் பெற உதவும். அதோடு கருப்பட்டி கலந்து கொடுப்பதால் கால்சியம் சத்தும் அதிகரிக்கிறது. உளுந்து வடை, நல்லெண்ணெய் போன்றவற்றையும் கொடுப்பதால் குழந்தைகளின் இடுப்பு எலும்பு வலுவாகவும், அதே நேரத்தில் நெகிழும் தன்மையுடையதாகவும் மாறுகிறது. இந்தத்தன்மை பின்னாளில், அந்தப்பெண் தாய்மையடைந்து பேறுகாலம் ஆகும்போது, இயற்கை வழியில் குழந்தை பெற உதவும்.

 

 

 

சில வீடுகளில், பூப்படைந்த குழந்தைக்கு முதல் முப்பது நாட்கள் பச்சை நாட்டுக்கோழி முட்டையை உடைத்து கொடுக்கும் வழக்கமும் உள்ளது. (பச்சை கோழிமுட்டை சாப்பிடுவது குறித்த பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன). அதே அளவு நல்லெண்ணெயும் உடனடியாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இப்படியான உணவு முறைகளால், குழந்தையின் கருப்பை பலமடையும். ஹார்மோன்கள் சுரக்கும் விகிதங்கள் சரியாகும் என்று இயற்கை உணவு ஆய்வாளர்கள் நிரூபிக்கின்றனர்.

 

பருவமடைந்த ஒரு மாதம் மட்டுமல்ல; உளுந்தங்களி, புட்டு ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் மாதசுழற்சி நாட்களில் தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கினால் அவர்களின் உடல் நலம் சரியாய் பேணப்படும்.


பூப்படையும் வயது:

முன்பெல்லாம் சராசரியாக பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் குழந்தைகளின் பூப்படையும் காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது எட்டு/ஒன்பது வயதுகளிலேயே குழந்தைகள் பூப்படைவது சாதாரண விடயமாகிவிட்டது. சில குழந்தைகள் பதினைந்து வயதைத் தாண்டியும் பருவமடைந்து இருக்கின்றனர். இதன் காரணிகள் மற்றும் இவற்றை சரி செய்யும் இயற்கை வழிமுறைகள் பற்றி அடுத்த வாரம் காண்போம்.


குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது!!! ஏன்... வழியெல்லாம் வாழ்வோம் #16
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...