Headaches can also be a symptom of brain cancer - explains Dr. Bruno

நம் நாட்டில் அனைவருக்கும்இருக்கும் பொதுவான ஒரு நோய் எது என்று கேட்டால் தலைவலி என்பது தான் பதிலாக இருக்க முடியும். அந்த அளவுக்கு கிட்டத்தட்ட அனைவரையும் பாதிக்கும் தலைவலி ஒரு பிரச்சனை தான். தலைவலி குறித்த பல தகவல்களை மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மரியானோ புருனோ நமக்கு வழங்குகிறார்.

Advertisment

தலைவலி என்பது கிட்டத்தட்ட மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனை. தலைவலி ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். தலையில் உள்ள எந்த உறுப்பில் பிரச்சனை ஏற்பட்டாலும் அது தலைவலியாக வரலாம். தலைக்கு உள்ளேயும் வெளியேயும் பல உறுப்புகள் இருக்கின்றன. கழுத்து, தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளினாலும் தலைவலி வரலாம். கண்களில் பிரச்சனை ஏற்பட்டால், முறையாகக் கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தால் பிரச்சனை சரியாகிவிடும்.

Advertisment

தாங்களாக ஸ்கேன் எடுத்து மருந்துகள் எடுத்துக்கொள்வது தவறு. இது உங்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தலைவலியை ஏற்படுத்தும். தலைவலி வந்தால் உடனடியாக நல்ல நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள். பெரும்பாலானோருக்கு இது மூளைக்குள் இருக்கும் பிரச்சனையாக இருக்காது. மூளையில் இருக்கும் பிரச்சனைகளால் தலைவலி வந்தால் நிச்சயமாக ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த இடத்தில் தான் மருத்துவரின் ஆலோசனை உங்களுக்கு உதவும்.

தமிழ்நாட்டில் கண்களில் பிரச்சனை இருக்கும் பலர் கண்ணாடி அணிவதே இல்லை. பெரும்பாலானோர் கண்ணாடியை வாங்கி வீட்டிலேயே வைத்து விடுகின்றனர். கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டால் தலைவலி எப்படி சரியாகும்? கண்களில் பிரச்சனை இருப்பவர்கள் நிச்சயம் கண்ணாடி அணிய வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் பல்வேறு மருத்துவர்களைப் பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. மூளைபுற்றுநோயாலும் தலைவலி வரலாம். ஆனால் அது மிக மிக அரிதானது.

கண்களில் இருக்கும் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்றால் உடனடியாக செய்துகொள்ளுங்கள். காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். மாத்திரை, உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலமும் பிரச்சனைகளை சரி செய்யலாம். பிரச்சனைக்கான சரியான காரணத்தை அறிந்து அதற்கேற்றார் போல் சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமே தவிர, நமக்குப் பிடித்த சிகிச்சைகளை செய்வது தவறு. சரியான சிகிச்சையின் மூலம் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் தலைவலியை சரி செய்யலாம். தலைவலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோய் அல்ல.