Skip to main content

நீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா?

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

ஒரு மனிதன் சிறப்புற்று வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல சிந்தனைகள் இருக்க வேண்டும்.நற்சிந்தனை என்றால் பொறாமை, பொய், திருடுவது போன்றவற்றை அருகே நெருங்க விடாமல் இருப்பது என்று சொல்லலாம். இதுபோன்ற தவறான எண்ணங்களும், நடத்தைகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்டாலே, நல்ல எண்ணங்கள் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டுவிடும். உதவி செய்தல், நன்மை செய்தல், உண்மை பேசுதல், நேர்மையோடு இருத்தல் போன்றவற்றை மனதில் உறுதியாகக் கொண்டிருந்தாலே நல்ல சிந்தனைகள் தானாகவே உள்ளுக்குள் சுரக்கும். இவ்வாறான நற்சிந்தனைகளைக் கொண்டிருந்தால் வாழ்வில் அமைதி கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும். உலகம் போற்றிப் புகழும். முன்னேற்றம் வந்து சேரும். அனைத்திற்கும் மேலாக உங்கள் லட்சியமும், நோக்கமும் நிச்சயமாக நிறைவேறும். வெகு காலத்திற்குப் பிறகு தங்கள் குருவைப் பார்ப்பதற்காக மூன்று சீடர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்று பல விஷயங்கள் குறித்து குரு அளவளாவிக் கொண்டிருந்தார்.
 

good thinking

அப்போது நல்ல சிந்தனைகளைப் பற்றிப் பேச்சு எழுந்தது. நற்சிந்தனை என்றால் என்னவென்று சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததைப் பற்றி குருவிடம் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு நிமிஷம் இருங்கள். இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் குரு. சற்று நேரத்தில் ஒரு குடுவையில் காபியும், பலவிதமான காபிக் கோப்பைகளையும் கொண்டு வந்தார். அங்கிருந்த மூன்று சீடர்களுக்கு மொத்தம் ஒன்பது கோப்பைகள் இருந்தன. அவற்றில் மூன்று தங்கக் கோப்பைகளாகவும், மூன்று வெள்ளிக் கோப்பைகளாகவும், மூன்று பீங்கான் கோப்பைகளாகவும் இருந்தன. சீடர்களிடம், குடுவையில் இருந்து காபியை ஊற்றி நீங்களே குடித்துக் கொள்ளுங்கள் என்றார். சீடர்களும் ஆளுக்கு ஒரு தங்கக் கோப்பையை எடுத்து அதில் காபியை ஊற்றிப் பருகத் தொடங்கினர். அப்படியே மீண்டும் நற்சிந்தனை பற்றி அவர்கள் பேசினர்.அப்போது குறுக்கிட்ட குரு,  நீங்கள் மூன்று பேருமே விலை உயர்ந்த தங்கக் கோப்பையைத் தான் எடுத்து, அதில் காபியை ஊற்றிப் பருகுகின்றீர்கள். காபி குடிக்க உங்களுக்கு அதிக விலையுள்ள தங்கக் கோப்பைகள்தான் தேவைப்பட்டுள்ளது. அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா? என்று கேட்டார்.

காபியைத்தான் குருவே என்றனர் சீடர்கள். ஆனால் காபி சுவையாக இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி எதுவும் நினைக்காமல் காபி கோப்பையில்தான் உங்கள் கவனத்தைச் செலுத்தினீர்கள். உங்கள் உடம்பில் கலந்துவிடப் போகிற காபியைவிட, வெளியே வைக்கப் போகிற கோப்பையில்தான் உங்கள் கவனம் இருக்கிறது.வாழ்க்கையை காபியோடு ஒப்பிடலாம். இதில் வேலை, பணம், மதிப்பு, பொறுப்பு போன்றவை அனைத்தும் கோப்பைகள் மட்டுமே. வாழ்க்கையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் மட்டுமே இவை. இவற்றால் நமது வாழ்வின் தரம் எந்த வகையிலும் மாற்றம் பெறாது  என்றார் குரு. அதாவது நம்மைப் பொறுத்தமட்டில் கோப்பைகள் என்னும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் கருவிகள் மீது மட்டுமே கவனம் வைக்கிறோம். ஆனால் காபி என்னும் வாழ்க்கையின் சுவையை சரியாக உணரத் தவறிவிடுகிறோம்.நற்சிந்தனை என்பது வெறும் ஆடம்பரக் கவர்ச்சிக்கு மயங்குவதாக இருக்காது. வழக்கமான பீங்கான் கோப்பையில் குடித்தாலும் காபியின் சுவை அப்படியேதான் இருக்கும். பருகும் பாத்திரத்தைப் பொறுத்து காபியின் தன்மை மாறாது.நற்சிந்தனை என்பது அடுத்தவருக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது. அது நமக்கும் இருக்க வேண்டும்.

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.