Skip to main content

முகம் பொலிவு பெற; வீட்டிலிருக்கும் பொருட்களே போதுமே!

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

face beauty tips

 

நவீன விஞ்ஞானம் வளர வளர நாகரீகமும் மாறி வருகிறது. இச்சூழ்நிலையில் இயற்கையின் மாறுபாடு காரணமாக காற்று, நீர், மண் ஆகிய அனைத்தும் மாசடைந்து வருகிறது. இதனால் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் ஆகியவற்றின் மூலம் மனித உடல் பாதிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள்.

 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியின் விளக்கம் இதுதான். மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்...

 

பால் பவுடர்                  - 1 தேக்கரண்டி,
தேன்                              - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு        - 1 தேக்கரண்டி
பாதாம் எண்ணெய்    - 1/2 தேக்கரண்டி

 

இவற்றை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

 

*வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும். நகை அணிந்து கறுத்துப்போய் உள்ள கழுத்துப் பகுதிகளிலும் தடவினால் கருப்பு நிறம் மாறும்.

 

*மஞ்சள் தூள் - 10 கிராம் எடுத்து, அதனுடன் ஆரஞ்சு சாறு 100 மில்லி கலந்து முகம் மற்றும் சூரிய ஒளி படும் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் மற்றும் வெயிலால் கறுத்துப்போன பகுதிகள் நிறம் மாறும்.

 

*கேரட் சாறு - 50 மி.லி., அன்னாசிப்பழச் சாறு - 50 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கறுத்த பகுதிகள் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு 1 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கருமை மாறி முகம் பளிச்சிடும். ஒரு கப் தயிருடன் வெள்ளரிச்சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.

 

*சந்தனத்தூள் - 10 கிராம், எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் குளிப்பதற்கு முன் உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.

 

வறண்ட முகம் பளபளக்க

 

*கறிவேப்பிலையையும், மருதாணி இலைகளையும் தனித்தனியே நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு கறிவேப்பிலை பொடி 1/2 தேக்கரண்டி; மருதாணி பொடி  1/2 தேக்கரண்டி எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.

 

*தேன்    - 1 தேக்கரண்டி; தக்காளிச்சாறு - 1 தேக்கரண்டி எடுத்து கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூச கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.