Exercise is not the cure for back pain - explains neurologist Bruno

முதுகு வலி பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்களை மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மரியானோ புருனோ நமக்கு வழங்குகிறார்.

Advertisment

முதுகு வலி எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கான சிகிச்சையும் முடிவு செய்யப்படும். முதுகு வலி என்பது பிறவியிலேயே ஏற்பட்ட பிரச்சனையினாலும் வரலாம்.சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையினாலும் வரலாம். முதுகு வலி வந்தவுடன் உடனடியாக உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி செய்வது தான் இன்று பலர் செய்யும் தவறு. எலும்பு தேய்மானம் ஏற்பட்டாலும் முதுகு வலி வரும். தசைப்பிடிப்பு காரணமாகவும் முதுகு வலி ஏற்படும். காரில் பேட்டரி குறைந்தால் காரை எடுத்து நாலு ரவுண்ட் அடிக்கும்போது சார்ஜ் ஏறிவிடும். ஆனால் காரில் டயர் தேய்ந்தால் நம்மால் அதைச் செய்ய முடியாது.

Advertisment

தசைப்பிடிப்பினால் உங்களுக்கு முதுகு வலி ஏற்பட்டால் நீங்கள் உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி செய்வது சரியான விஷயம். எலும்பு தேய்மானத்தினால் முதுகு வலி ஏற்படும்போது நீங்கள் அவற்றைச் செய்தால் வலி இன்னும் அதிகரிக்கும். எனவே எலும்பு தேய்மானத்தினால் வரும் முதுகு வலிக்கு உடற்பயிற்சி தீர்வல்ல. முதுகுத்தண்டில் இருக்கும் நரம்பில் கட்டி ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது நல்லது. அப்படிச் செய்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் நம்மால் மீள முடியும். உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபியினால் கட்டி வளர்ந்து, நடக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்வதும் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியாது.

மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து முதுகு வலி ஏற்பட்டால் தயவு செய்து மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ளுங்கள். எதனால் முதுகு வலி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த நோயையும் ஆரம்பத்திலேயே சரிசெய்வது தான் நல்லது. மருத்துவமனையில் நீங்கள் பரிசோதனை மேற்கொள்ளும்போது உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பது தெரியும். சிலருக்கு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.