ADVERTISEMENT

எகிப்திய அடிமைகளுக்கு உடையில்லை! உடையின் கதை #6

03:25 PM Jul 14, 2018 | vasanthbalakrishnan

புராதன மேற்கத்திய நாகரிகங்களில் எகிப்து முன்னிலை வகிக்கிறது. நைல் நதிக்கரையோரத்தில் உருவான இந்த நாகரிகம் உலகின் மிக மூத்த நாகரிகமாககருதப்படுகிறது.

கற்காலம் முடிந்த கி.மு.4500 ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் கி.மு.3100 ஆம் ஆண்டுவாக்கில் எகிப்தின் உடை நாகரிகம் தொடங்கியது. அப்போதுதான் துணியை உருவாக்கக் எகிப்தியர்கள் கற்றுக்கொண்டனர்.

எகிப்து வெப்பப் பிரதேசமாக இருந்ததால் அவர்கள் அழகுக்காக மட்டுமின்றி தங்களுடைய வசதிக்காகவும் உடைகளை உருவாக்கினர். ஆளிச் செடிகளைப் பயிர்செய்து அவற்றை தண்ணீரில் உறவைத்து நாராக்கி துணி நெய்தனர். புராதன எகிப்தில் வாழ்ந்த அனைத்து சமூகத்தினரும் துணி நெய்தலையும், தையல் வேலையையும் தெரிந்து வைத்திருந்தனர். கம்பளியை அறிந்திருந்தாலும் அதை தூய்மையற்றதாக நினைத்தனர். விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி ஓவர்கோட் தயாரித்தனர். அத்தகைய கோட்டுகளை அரிதாக அணிந்தனர். வழிபாட்டு தலங்களில் அதை அணிவதை தவிர்த்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



விவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட கீழ்த்தட்டு மக்கள் உடைகள் அணிவதில்லை. அடிமைகள் நிர்வாணமாகவே வேலை செய்தனர். ஆண்கள் தலையில் ஒரு துணியை போர்த்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த தலையணி மன்னருக்கும் அரசவை உறுப்பினர்களுக்கும் இடையே வேறுபட்டிருக்கும்.

சிறுவர்களும் அடிமைகளும் பாலியல் தொழிலளர்களும் உடைகள் அணிவதில்லை என்றாலும், பரூவா மன்னர்கள் சிறுத்தை, சிங்கம் ஆகிய விலங்குகளின் தோலால் உருவாக்கப்பட்ட உடையை அணிந்தனர் என்று குறிப்புகள் உள்ளனர். கி.மு.2130 ஆம் ஆண்டுகளில் பழைய முடியாட்சி தொடங்கியது. அப்போதைய உடைகள் மிகவும் எளிமையானவையாக இருந்தன.


உடை அணிவதை தங்கள் கலாச்சாரத்தில் கட்டாயமாக கருதத் தொடங்கினர். சிலவகை உடைகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆண்கள் ஷெண்டிட் என்ற பாவாடை வடிவிலான உடையை அணிந்து இடுப்பில் பெல்ட்டால் இறுக்கி கட்டியிருந்தனர். சிலநேரங்களில் முன்பகுதியில் மடிப்புகள் இருக்கும் வகையில் உடையை அணிந்தனர். இந்தக் காலகட்டத்தில் இந்த பாவாடை வடிவ உடை குட்டையாக இருந்தது. கி.மு.1600 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய மத்திய முடியாட்சியில் பாவாட வடிவ உடை நீளமாகியகு. கி.மு.1420 ஆம் ஆண்டுகளில் இடுப்பு உடையுடன் மார்புப் பகுதியை மறைக்க துண்டு, மேலுடை அணிந்தனர்.



எகிப்தின் பழைய, மத்திய, புதிய முடியரசுக் காலங்களில் எகிப்திய பெண்கள் கலாசிரிஸ் என்று அழைக்கப்பட்ட எளிமையான உடையை அணிந்தனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உடை பிற்போக்குத்தனமாக இருந்தது. கணுக்கால் வரை நீண்ட உடை, மார்பகங்களில் பாதியை மறைக்கும் வகையிலோ, மார்பகங்களுக்கு கீழேயோ உடலை ஒட்டியிருக்கும். உடையை தோள்பட்டையுடன் இணைக்க இரண்டு அல்லது ஒரு இணைப்பு இருக்கும். அந்த இணைப்புகள் மார்பகங்களை ஓரளவு மறைக்கும் வகையில் இருக்கும். உடையின் நீளம் அதை அணியும் பெண்களின் சமூக அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.

உடையில் அலங்காரத்திற்காக இறகுகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த உடைக்கு மேலாக மேல் துண்டு, குல்லாய் அணிவது சிலருடைய விருப்பமாக இருந்தது. மேல் துண்டு, 4 அடி அகலத்துடன் 13 அல்லது 14 அடி நீளம் இருக்கும்.


கி.மு.1550 முதல் கி.மு.1292 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களின் உடை இறுக்கமான உறையைப் போல இருந்தது. மார்பகங்களுக்கு சற்று கீழேயும், கணுக்கால்களுக்கு சற்று மேலேயும் இருக்கும் வகையில் அந்த உடைகள் நெய்யப்பட்டன. லினன் நார்களால் நெய்யப்பட்டதால், உட்காரும்போதும், மண்டியிடும்போதும் இளகும் தன்மையுடன் இருந்தது.

குழந்தைகள் 6 வயதுவரை உடைகள் அணிவதில்லை. 6 வயதுக்கு பிறகு வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் உடைகள் அணிய அனுமதி அளிக்கப்பட்டது. நீளமான முடியை வலதுபக்கம் கொண்டை போட்டிருந்தனர். உடைகள் அணியாவிட்டாலும், கால் தண்டை, கைகளில் வளையம், கழுத்தில் பட்டை, தலையில் அணியும் விதவிதமான நகைகளை சிறுவர்கள் அணிந்தனர். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தங்கள் பெற்றோரைப் போலவே உடைகள் அணிந்தனர். எகிப்தியர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டுவிக்குகளை அணிந்தனர்.



பாப்பிரஸ் செடியில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் மதம் தொடர்பான சில விஷயங்களை எகிப்தியர்கள் எழுதிவைத்துள்ளனர். அதற்கு “புக் ஆஃப் தி டெத்” என்று பெயரிட்டுள்ளனர். இதில் லினன் என்ற நார் இழையை தயாரிப்பதற்காக ஆளி செடிகளை பயிரிட்டனர் என்ற தகவல் இருக்கிறது.

நைல் நதி சமவெளி நெடுகிலும் ஏராளமான கல்லறைகள், பிரமிடுகள் உள்ளன. அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தபோது, முப்பட்டை வடிவில் மரத்தால்செய்யப்பட்ட நெசவு கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். லினன் நூல்இழையைக் கொண்டு துணி நெய்ததை இது உறுதிப்படுத்துகிறது.

சில கல்லறைகளில் இருந்து கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உடைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேல்பகுதி ஆங்கில வி எழுத்து வடிவத்தில்கழுத்துடனும் நீளமான கைகளுடனும் வடிவமைக்கப்பட்ட உடை அது.

டுடங்காமன் என்ற எகிப்து மன்னர் காலத்தில் அவர் அணிந்த உடை முன்பக்கம் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கி.மு. 1600களில் இருந்து கி.மு. 1000 ஆண்டுகளுக்கு இடையில் இந்த உடையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பெரும்பகுதி எகிப்தியர்கள் வெள்ளை நிற உடைகளையேவிரும்பினர்.

கி.மு.15ஆம் நூற்றாண்டில் மஞ்சள், சிவப்பு, ஊதா, பச்சை ஆகியவண்ணங்களுடன் உடைகள் தயாரிக்கப்பட்டன. பின்னல் வேலைகள் மூலம்கரைகள் மற்றும் வடிவங்கள் இடம்பெறத் தொடங்கின. எகிப்திய சமூகத்தில்நகைகள் அணியும் பழக்கம் பரவலாக இருந்தது. உயர்குடியினர் தங்கம், வெள்ளிமற்றும் விலை உயர்ந்த வைரக்கற்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டநகைகளை அணிந்தனர்.

ஏழை மக்கள் செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டநகைகளை அணிந்தனர். ஆண்களும் பெண்களும் வண்ணங்கள் பூசி தங்களைஅலங்கரித்துக் கொண்டனர். ஆண்களும் பெண்களும் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு, ‘விக்’குகளை அணிந்தனர். பெண்கள் தங்கள்உதடுகளில் சாயம் பூசிக் கொண்டனர். மருதாணி இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு கலந்த சிவப்பு நிற சாயத்தை தயாரித்து நகங்களில்பூசிக் கொண்டனர்.


ஆண்களும் பெண்களும் மையை பயன்படுத்தி கண்களைச் சுற்றி வண்ணம் தீட்டிக் கொண்டனர். எகிப்தியர்கள் பயன்படுத்திய அழகுசாதனப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் பிரமிடுகள் மற்றும் கல்லறைகளில் கிடைத்திருக்கின்றன. அவை இப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

எகிப்து நாகரிகத்துக்கு இணையாகவே மத்திய தரைக்கடல் பகுதியில் மெசபடோமியா நாகரிகத்திலும் உடைகள் அணியும் பழக்கம் தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்…

(இன்னும் வரும்)


முந்தைய பகுதி:

பருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்! உடையின் கதை #5

அடுத்த பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT