Skip to main content

தூக்க மாத்திரை எடுப்பது மனதை பாதிக்குமா? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
DrRadhika Murugesan  - Sleeping Tablet 

எந்த பிரச்சனையுமே இல்லாமல் தூக்கம் வராமல் இருப்பது பிரைமரி இன்சோம்னியா என்கிறோம். சிலருக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டே இருந்து அதற்கு பழகி தூங்க வேண்டுமானால் தூக்க மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்ற நிலை உருவாவதும், அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும், அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும் தூக்கம் வராமல் இருக்கும். 

சில மனநோய்கள் உருவாவதற்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக இருக்கும். மனச்சோர்வு, மனப்பதட்டம், உளவியல் சார்ந்த நோய்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதன் ஆரம்பத்தில் தூக்கமின்மை சிக்கலில் இருந்து தான் உருவாகும். தூக்கமில்லாமல் இருந்தாலும் மன நோய் உருவாகும், தீவிரமான மன நோய் உருவாகப் போகிறதென்றாலும் தூக்கம் வராமலும் இருக்கும். 

தூங்கி எழுந்ததுமே புத்துணர்ச்சியான மனநிலை இல்லை என்றால் நீங்கள் ஒழுங்காக தூங்கவில்லை என்று அர்த்தமாகும். அப்படியெனில் நீங்கள் சில வாழ்வியல் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியினை மாலை நேரங்களில் செய்யக்கூடாது, இரவு நேரங்களில் காபி குடிக்க கூடாது, ஆல்கஹால் சுத்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வன்முறைக் காட்சிகள் நிறைந்த சினிமா பார்ப்பதை தவிர்ப்பது, பேய் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தால் அது போன்ற படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது

மாலையில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, படுக்கை அறையினை, படுக்கையை தூங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், பெட்டில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது, புத்தகங்கள் படிக்க கூடாது, பெட்டிற்கு அருகே சென்றாலே தூங்க வேண்டும் என்கிற அளவிற்கு மனதிற்கு பயிற்சி அளிக்க வேண்டும்

தூக்கமாத்திரையை போட்டுத்தான் தூங்க வேண்டும் என்று நினைப்பதே தவறு. பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துவர்கள் பரிந்துரையின் பேரில் தூக்கமாத்திரை எடுத்துக்கொள்ளுதல் வேறு, நீங்களாகவே மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்கமாத்திரை எடுத்துக்கொள்ளுதல் மிக மிக தவறாகும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மெடிக்கலும் தூக்க மாத்திரை கொடுக்க கூடாது என்பது ரூல்ஸ், ஆனால் சிலர் பணம் வாங்கி கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.

ஓரிரு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருப்பது என்பது சாதாரண நிலைதான். பத்து நாட்களுக்கு மேல் இந்த பிரச்சனை தொடர்ந்தால் மனநல மருத்துவரை கண்டிப்பாக அணுகுங்கள், அவர்கள் உங்களின் பிரச்சனையை கண்டறிந்து உங்களுக்கு மருந்துகளும், சில பயிற்சிகளும் பரிந்துரைப்பார்கள். நீங்களாகவே தூக்கமாத்திரை எடுத்துக் கொள்வதால் அதற்கு உங்கள் மனமும், உடலும் கண்டிப்பாக பாதிப்படையும்.

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.