Dr Poorna Chandrika Explained about  mental stress

நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் பணிபுரிகிற பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா அவர்களை சந்தித்தோம். மனநலம் பற்றிய சில புரிதல்களை அவர் நமக்கு விளக்குகிறார்.

Advertisment

எல்லா இடங்களிலும் இருக்கும் பரவலான விசயம்; ஆனால் வெளியில் தெரிய வராமல் இருப்பது மனக்கவலை நோய். மனநலம் குறித்த பிரச்சனையை உணரும் போது கோவிலுக்கு போகலாம், சர்ச்சுக்கு போகலாம், மசூதிக்கு போகலாம் என்று தோன்றுகிற அளவுக்கு மனநல மருத்துவரிடம் போகலாம் என பலரும் நினைப்பதில்லை. ஒருவித தயக்க மனப்பான்மை மேலோங்குகிறது.

Advertisment

பலருக்கு தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் மட்டும் மகிழ்ச்சியாக இல்லையே என்று தோன்றும். எதிலுமே முழுமனதோடு ஈடுபாடு இல்லை, ஆர்வம் இல்லை, தூக்கமில்லை, ஒரு கவலை எப்போதுமே இருந்துகொண்டு இருக்கிறது. பசி எடுப்பதில்லை போன்ற உணர்வுகளெல்லாம் மனக்கவலை நோயாகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மனக்கவலை ஏற்படும். குழந்தை பிறந்த பிறகு ஏற்படும். இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆணை விட பெண்ணுக்கு மனக்கவலை அதிகம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் சில வருடங்களில் உலகில் பலர் மனக்கவலை நோயால் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது.

தீபிகா படுகோனேபோன்ற பெரிய சினிமா நட்சத்திரங்கள் கூட எனக்கு டிப்ரசன் இருக்கிறது; நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்கிறேன் என சொல்கிறார்கள். பெரிய நடிகை அவங்களுக்குத் தான் எல்லாமே இருக்கிறதே, பிறகு எப்படி டிப்ரசன் வந்தது? என்கிற கேள்வி உருவாகலாம். இதே கேள்வி தான் எளியவர்களுக்கும் வருகிறது. மனநோய் என்பது எல்லாம் இருக்கிறவர்களுக்கும் வரலாம்,எதுவுமே இல்லாமல் இருப்பவர்களுக்கும் வரக்கூடும். பிரச்சனை யாருக்குத்தான் இல்லை என்று சொல்வது எளிமை தானே.மனக்கவலை நோயால் தற்கொலை செய்துகொண்டிருந்தவர்கள் குடும்பங்களில் இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் ஜெனிடிக் முறையால் வரக்கூடும்.

பிரச்சனையை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் ஒருவர் மனநோயை எப்படி எதிர்கொள்கிறார் என்பது மாறுபடும். எடுத்துக்காட்டாக ஒரு காதல் தோல்வி என்று வைத்துக்கொண்டால் அதெப்படி என்னை வேண்டாம் என்று சொல்லலாம்; அவன்/அவள் இல்லாமல் இருக்க முடியாது என்று தற்கொலைசெய்து கொள்கிற; வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் வரை இருக்கத்தானே செய்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்ற மனப்பக்குவம் உள்ளவர்கள் மனநோயை கையாள்கிறார்கள். மற்றவர்களுக்கு மருத்துவரை அணுக வேண்டிய தேவை ஏற்படுகிறது.