Skip to main content

கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? - விவரிக்கிறார் டாக்டர் அருணாச்சலம்

Published on 08/04/2023 | Edited on 17/04/2023

 

 Dr Arunachalam health tips for summer

 

இந்தக் கோடை காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து  டாக்டர். அருணாச்சலம் விரிவாக விளக்குகிறார்.

 

வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. எவ்வளவு குளிரை நாம் சந்தித்தோமோ, அதைவிட அதிக வெயிலுக்கு நாம் தயாராக வேண்டும் என்று அரசாங்கம் எச்சரிக்கிறது. இந்தக் கோடை காலத்தில் தண்ணீரை சுற்றியே நம்முடைய வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உடல் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. நீர் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியம். சுத்தமான தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். அசுத்தமான தண்ணீரால் பல நோய்கள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

 

கோடைக் காலத்தில் காலரா போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று நாம் நம்பினாலும் அதனை காய்ச்சித்தான் குடிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை மட்டுமே நாம் குடிக்க வேண்டும். ஆபீஸில் ஏசியில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை தினமும் அருந்த வேண்டும். நீர் மோர், சாலட் சாப்பிடுவது நல்லது. சிறுநீர் தொடர்ந்து மஞ்சளாக வெளியேறினாலோ, நீண்ட நேரமாக சிறுநீர் வரவில்லை என்றாலோ நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். 

 

சிலருக்கு நீர் பற்றாக்குறையால் சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தண்ணீரால் உடலை அவ்வப்போது கழுவ வேண்டியது அவசியம். இல்லையெனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். கோடைக் காலத்தில் அதிகம் ஜீன்ஸ் அணியாமல் இருப்பது நல்லது. வியர்வையை உறிஞ்சும் வகையிலான துணிகளை உடுத்துவது நல்லது. துண்டை வைத்து உடல் பாகங்களை அவ்வப்போது கழுவி துடைத்தால் உடல் சுத்தமாக இருக்கும். சிறுநீரில் கல் ஏற்படும் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு அதிகம் தண்ணீர் குடிப்பது தான் தீர்வு. ஞாயிற்றுக்கிழமைகளிலும் உணவில் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அன்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

 


 

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.